ஒரு மருத்துவமனையில் அவசரகால மருத்துவ வார்டில் சேர்க்கப்பட்டிருந்த எனது சிநேகிதனின் படுக்கையண்டையில் நான் நின்று கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மற்ற நோயாளிகளின் வேதனைக் குரல் என்னை அசைத்தது. என் நண்பனுக்காகவும் மற்ற நோயாளிகளுக்காகவும் நான் ஜெபித்த பொழுது, இந்த பூமியில் நமது வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை உணர்ந்தேன். பின்பு ஜிம் ரீவ்ஸ் அவர்களால் பாடப்பட்டுள்ள இந்த உலகம் நமக்கு சொந்தமான வீடல்ல “நாம் அதன் வழியாக கடந்து செல்கிறவர்களாக இருக்கிறோம்” என்ற ஒரு நாட்டுப்புறப் பாடலை நினைவு கூர்ந்தேன்.
நமது உலகம் வேதனை, கஷ்டங்கள், பசி பட்டினி, கடன், வறுமை, வியாதி, மரணம் இவற்றால் நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட உலகை நாம் கடந்து போக வேண்டியதிருப்பதால் “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்ற இயேசுவின் அழைப்பு ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட அழைப்பாக உள்ளது.
யோவான் கண்ட “புதியவானம் புதிய பூமி” (வெளி 21: 1-5) பற்றி மேற்கோள் காட்டப்படாத அடக்க ஆராதனை கிடையவே கிடையாது. உண்மையிலேயே அந்த வசனம் அடக்க ஆராதனைகளுக்கு ஏற்ற வசனமாக உள்ளது.
ஆனால் அப்பகுதி மரித்தவர்களை விட உயிரோடிருக்கிறவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. நாம் உயிரோடிருக்கும் பொழுதே, இயேசுவிடம் வந்து இளைப்பாறுதலை பெற்றுக் கொள்ளும்படி அவர் அழைப்பதை நாம் கேட்க வேண்டிய காலம் இதுவே. அப்பொழுதுதான் வெளிப்படுத்துதலில் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களுக்கு நாம் உரியவர்கள் ஆவோம். தேவன் அவர்களிடத்திலே வாசமாய் இருப்பார். (வச.3) அவர் நமது கண்ணீரைத் துடைப்பார். (வச. 4) இனிமேல் அங்கு “மரணம் இல்லை, துக்கமும் இல்லை, அலறுதலுமில்லை, வருத்தமும் இல்லை” (வச. 4) இயேசுவின் அழைப்பை ஏற்று அவரது இளைப்பாறுதலில் பிரவேசியுங்கள்