பிரிட்டிஷ் கொலம்பியாவில், வேன்கூவர் நகரத்தில் வாழ்ந்து வந்த வீடற்ற மக்களுக்கு ராத்தங்க ஒரு புது வித தூங்கும் இடம் கிடைத்தது. உள்ளுரிலிருந்த ரெயின் சிட்டி ஹவுசிங் என்ற சேவை நிறுவனம் தற்காலிக தங்கும் இடமாக மாற்றப்படுவதற்கான சிறப்புத் தன்மைகள் கொண்ட பெஞ்சுகளை உண்டாக்கினது. அந்த பெஞ்சுகளில் சாய்ந்து கொள்ள பயன்படும் பின் பகுதி காற்று, மழையிலிருந்து ஒரு மனிதனை பாதுகாக்கும் முறையில் ஒரு உறைபோல இழுக்கப்படக் கூடியதாக இருந்தது. இரவு நேரங்களில் தூங்கக் கூடிய இந்த இடங்களை எளிதாகக் கண்டு கொள்ளத்தக்கதாக “இது ஒரு படுக்கை அறை” என்று அந்த பெஞ்சுகளில் இருளில் ஒளிரக் கூடிய பொருட்களால் எழுதப்பட்டிருக்கும்.
தங்குவதற்கு பாதுகாவலான இடம் சரீரப் பிரகாரமாக மட்டுமல்ல, ஆன்மீக பிரகாரமாகவும் தேவைப்படுகிறது. நாம் துன்பத்தில் இருக்கும் பொழுது தேவன் நமது ஆத்துமாவிற்கு அடைக்கலமாக உள்ளார். “என் இருதயம் தொய்யும் போது… எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டு போய் விடும்.” (சங் 61: 2) என்று தாவீது அரசன் எழுதினான். உணர்வுபூர்வமாக நாம் அதிகமான பாரத்தை சுமக்கும் பொழுது, நாம் மிகவும் எளிதாக நமது எதிராளியான சாத்தானின் தந்திரமான வலைகளில் சிக்கிக் கொள்வோம். பயம், குற்ற உணர்வு, இச்சை போன்றவை அவனுக்கு மிகவும் பிடித்தமான வலைகளாகும். நமக்கு நிலையான, பாதுகாப்பான இடம் ஒன்று தேவை.
தேவனில் நாம் அடைக்கலம் புகுந்தால், நமது எதிராளியான சாத்தான் நம்முடைய இருதயத்திலும், உள்ளத்திலும் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து வெற்றி பெறலாம். “நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்… உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (சங் 61:3-4) என்று தாவீது கர்த்தரிடம் கூறினான்.
நாம் வெகுவாக பல்வேறு பாரங்களால் அழுத்தப்படும்பொழுது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பாதுகாவலையும், சமாதானத்தையும் பெறுகிறோம். “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு… உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16: 33) என்று இயேசு கூறினார்.