மிச்சிகனில் நாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் மிகவும் கடுமையான பனிக்காலமாக இருந்தது. காலநிலையைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பனி பெய்த அந்தக் குளிர்காலம் மார்ச்சு மாதம் வரை நீடித்த பொழுது, பனியைக் குறித்த ஆசையை அநேகர் இழந்து விட்டுத் தொடர்ந்து குறைந்த வெப்ப நிலையே நீடிக்கும் என்ற வானிலை அறிக்கையைக் குறித்து வருத்தமடைந்தார்கள்.
ஆயினும் மிகவும் கவர்ச்சிகரமான பனித்துகளின் அழகு தொடர்ந்து எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து வந்தது. என்னுடைய வாகனத்தின் ஓடு தளத்திலிருந்து பனி வாரியின் மூலம் அதிகமான பனியை அள்ளி எனக்குப் பின்னாலுள்ள பனி சேமிக்கும் கிடங்கில் தொடர்ந்து கொட்ட வேண்டிய நிலைமை இருந்தாலும், அந்த வெண்மை நிறப் பனித்துகள்களால் தொடர்ந்து நான் ஈர்க்கப்படுகிறேன். ஒரு குறிப்பிட்ட நாளில் ஏற்கனவே படிந்திருந்த பழைய பனியின் மீது புதிய பனிப்படிகங்கள் விழுந்தன. நானும் என் மனைவியும் ஒளி வீசும் அந்தக் காட்சியின் மத்தியில் நடந்து சென்ற பொழுது, நிலப்பகுதி முழுவதும் வைரத்துகள்கள் சிதறிக் கிடந்தது போல இருந்தது.
வேதாகமத்தில் பனி பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. தேவன் அவரது சிருஷ்டிப்பின் வல்லமையைக் காண்பிக்க பனியை அனுப்பினார். (யோபு 37:6; 38: 22-23) பனி படர்ந்த மலைச்சிகரங்களிலிருந்து வரும் நீர் கீழே பள்ளத்தாக்கிலிருந்த வறண்ட நிலத்தை செழிப்பாக்கியது. ஆனால் குறிப்பிடத்தக்கதாக தேவனால் நமக்கு அளிக்கப்படும் மன்னிப்பைக் குறிக்க பனியை பயன் படுத்துகிறார். இயேசுவின் சுவிசேஷம் நமது பாவங்களிலிருந்து நாம் சுத்தப்படுவதற்கான வழியை நமக்கு அளித்து நமது இருதயங்களை “உறைந்த பனியை விட வெண்மையாக்குகிறது” (சங்கீதம் 51: 7; ஏசாயா 1: 18).
அடுத்த முறை நீங்கள் பனியை ஒளிப்படத்திலோ நேரடியாகவோ பார்க்கும் பொழுது நமது இரட்சகர் மேல் நம்பிக்கையை வைத்தவர்களுக்கு பாவத்தின் தண்டனையிலிருந்து மீட்பும் இரட்சிப்பும் கிடைக்கச் செய்த தேவனுக்கு நன்றி கூற இயற்கையில் கிடைக்கக்கூடிய இந்த அழகிய பனித்துகள் நினைப் பூட்டும்.