ஓ.ஹென்ரியின் புகழ்பெற்ற “மேகியின் பரிசு” என்ற கதை பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜிம், டெல்லா என்ற இளம் தம்பதியரைப்பற்றி கூறுகிறது. கிறிஸ்மஸ் நாட்கள் நெருங்கின பொழுது, ஒருவருக்கொருவர் சிறப்பான பரிசு கொடுக்க வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் பண வசதி இல்லாததினால் எதிர்பாராத கடுமையான முடிவுக்கு வந்தார்கள். ஜிம்மிடம் இருந்தது அவனுக்கு மிகவும் பிடித்தமான தங்கக் கைக் கடிகாரம் மட்டும் தான். டெல்லாவிட மிருந்தது அவளுடைய நீண்ட, அழகான கூந்தல் மட்டும் தான். ஆகவே ஜிம் டெல்லாவின் கூந்தலை அழகுபடுத்துவதற்காக, அவனது தங்கக் கடிகாரத்தை விற்று அழகான சீப்புகளை வாங்கினான். டெல்லா அவளது முடியை விற்று ஜிம்மின் கைக்கடிகாரத்திற்கு ஓர் அழகான சங்கிலி வாங்கினாள்.

அந்தக் கதை உண்மையாகவே அனைவராலும் விரும்பப்படத்தக்கதாக இருந்தது. ஏனெனில் தியாகம் என்பது உண்மையான அன்பின் ஆழத்தில் உள்ளது. அன்பின் உண்மையான மதிப்பீடு தியாகம்தான் என்று அக்கதை நமக்கு நினைப்பூட்டுகிறது. இந்தக் கருத்து கிறிஸ்மஸ்க்கு மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் கிறிஸ்து பிறப்பின் மிக முக்கியமான உள்ளான அர்த்தம் தியாகம் தான். மரிப்பதற்காக இயேசு பிறந்தார். நமக்காக மரிக்க இயேசு பிறந்தார். அதனால் தான் “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயா ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர் அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21) என்று யோசேப்பிடம் தேவதூதன் கூறினான்.

கிறிஸ்து பிறப்பதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே நமது பாவத்தினால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து நம்மை மீட்க இரட்சகர் வருவார் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அதாவது சிலுவையின் நிழலில் நாம் முன்னணை பார்க்காவிட்டால், ஒரு பொழுதும் முன்னணையில் பிறந்த இயேசுவின் பிறப்பின் மதிப்பை நம்மால் உணர முடியாது. கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்து நமக்காகச் செய்த தியாகத்தின் மூலம், அவரது அன்பு தெளிவாக வெளிப்படுவது பற்றியதாகும்.