உடைந்து போகக் கூடிய பரிசை பிறருக்கு நாம் அளிக்கும் பொழுது, அப்பொருள் உள்ள பெட்டியின் மேல் ‘கவனமாக கையாளுங்கள் உடையக் கூடியது’ என்ற குறிப்பு எழுதப்பட்டுள்ளதா என்று நிச்சயப்படுத்திக் கொள்வோம். உள்ளேயுள்ள பொருள் யாராலும் சேதப்படுத்தப்படாமல் இருப்பதை நாம் விரும்புவதால் வெளியே உடையக் கூடியது என்ற வார்த்தை பெரிய எழுத்துக்களால் எழுதப்படுகிறது.
தேவன் நமக்கு அளித்த பரிசு மிகவும் பெலவீனமான பாலகன் வடிவில் வந்தது. சில சமயங்களில் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் பார்க்கும் அழகான கிறிஸ்மஸ் காட்சியைப் பார்த்து, கிறிஸ்மஸ் மிகவும் மகிழ்ச்சியூட்டும் நாள் என்று கற்பனை பண்ணுகிறோம். எந்த ஒரு தாயும் அது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள் அல்ல என்று கூறுவார்கள். மரியாள் மிகவும் களைப்புடனும், பாதுகாப்பற்ற நிலையிலும் இருந்தாள். அக்குழந்தை அவளுடைய முதல் குழந்தை. அத்தோடுகூட மிகவும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் அக்குழந்தை பிறந்தது.
“அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” (லூக்கா 2:7)
பிறந்த குழந்தைக்கு தொடர் கவனம் தேவை. குழந்தைகள் அழுவார்கள், உண்பார்கள், உறங்குவார்கள், அனைத்திற்கும் அவர்களைப் பராமரிப்பவர்களை சார்ந்திருப்பார்கள். அவர்களாகவே தீர்மானங்கள் எடுக்க இயலாது. மரியாளின் காலத்தில் குழந்தை மரணம் மிக அதிகமாக இருந்தது. குழந்தைப் பிறப்பில் அநேக தாய்மார்கள் மரித்தும் விடுவார்கள்.
தேவன் அவரது குமாரனை பூமிக்கு அனுப்ப ஏன் அப்படிப்பட்ட பலவீனமான வழியைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால் நம்மை மீட்பதற்காக அவரது குமாரனாகிய இயேசு நம்மைப் போலவே இருக்க வேண்டியதிருந்தது. தேவனின் விலை மதிப்பற்ற பரிசு பெலவீனமான குழந்தை வடிவில் வந்தது. தேவன் நம்மை நேசிப்பதினால் அப்படிப்பட்ட கட்டுறுதியற்ற முறையை தேர்ந்தெடுத்தார். அப்படிப்பட்ட பரிசுக்காக இன்று நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.