1861ம் ஆண்டு கோடைக்காலத்தில் ஹென்ரி வர்ட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோவின் மனைவி பிரான்செஸ் ஒரு தீ விபத்தில் சிக்கி மரித்துவிட்டாள். அவர் மனைவி இறந்தபின் முதல் கிறிஸ்மஸ்ஸில் சொல்லமுடியாத வருத்தமான உணர்வுகளால் இந்த விடுமுறை நிறைந்துள்ளது” என்று அவர் அவரது நாட்குறிப்பேட்டில் எழுதினார். அடுத்த ஆண்டிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. “மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி எனக்கு இனிமேல் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
1863ம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டுப் போர் மெதுவாக ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. லாங்ஃபெல்லோவின் மகன் அவரது விருப்பத்திற்கு மாறாக படையில் சேர்ந்து, போரில் காயப்பட்டு கவலைக்கிடமாக இருந்தான். அந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஆலய மணிகள் ஒலித்தபொழுது, மற்றுமொரு வேதனை மிகுந்த கிறிஸ்மஸ் நாள் அவருக்கு வருகிறதென்று அறிவித்தது. லாங்ஃபெல்லோ அவரது பேனவை எடுத்து,“கிறிஸ்மஸ் நாளின் மணி ஓசையைக் கேட்டேன்” என்ற செய்யுளை எழுத ஆரம்பித்தார். (I Heard the bells on Christmas day)
அந்தச் செய்யுள் சிறந்த செய்யுள் அமைப்புடனும், இனியதாகவும் ஆரம்பித்து பின் துக்கரமான முறையில் திருப்பம் அடைகிறது. பயங்கரமான கற்பனைத்திறன் கூடிய அந்த செய்யுளின் முக்கியமான நான்காவது அடி கிறிஸ்மஸ் பாடலுக்கான உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. “விரும்பத்தக்கதாக இல்லாத” பீரங்கிகள் “இடி முழக்கமிட்டன.” இது கிறிஸ்மஸின் சமாதான செய்தியை கேலிக்குட்படுத்துவதாக இருந்தது. ஐந்தாவது ஆறாவது சரணங்களில் லாங்ஃபெல்லோவின் நம்பிக்கையற்றத் தன்மை மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. “அது ஒரு பூகம்பத்தினால் கண்டத்தின் வெப்பமான அடிப்பகுதியை வெடித்து சிதறினது போல் இருந்தது” என்று எழுதினார். லாங்ஃபெல்லோ அவரது நம்பிக்கை முழுவதையும் இழந்துவிட்டு “நம்பிக்கையற்ற நிலையில் என் தலையைத் தாழ்த்தி வணங்கினேன்; இந்தப் பூமியில் சமாதானம் இல்லை என்று நான் கூறினேன்” என்று முடித்தார்.
ஆனால் நம்பிக்கை இல்லாத குளிர்நிறைந்த அந்த கிறிஸ்மஸ் நாளில் அடக்கமுடியாத நம்பிக்கையின் சத்தத்தை அவரது உள்ளத்தின் ஆழத்தில் கேட்டார். பின்பு இந்த ஏழாம் அடியை எழுதினார்.
அவ்வேளையில் ஆலய மணிகள் மிகுந்த சத்தத்துடன் ஒலிக்க ஆரம்பித்தன. “தேவன் மரிக்கவில்லை. அவர் உறங்கவும் இல்லை. தவறுகள் அழியும் நீதி மேற்கொள்ளும். பூமியிலே சமாதானமும், மனிதர் மேல் பிரியமும் உண்டாகும்!” என்று முடித்தார்.
உள்நாட்டுப் போர் அதிகரித்துக் கொண்டே சென்றது. அது போலவே அவரது தனிப்பட்ட வாழ்வில் துயரங்களும் அதிகரித்தன. ஆனால் அவை அனைத்தினாலும் கிறிஸ்மஸ்ஸைத் தடுக்க முடியவில்லை மேசியா பிறந்துள்ளார்! “நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (வெளி 21:5) என்று அவர் வாக்குப்பண்ணுகிறார்.