நானும் என் சிநேகிதன் சார்லியும் வேதாகமக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் பொழுதே, பகுதி நேர வேலையாக மரச்சாமான்கள் செய்யும் கடையில் வேலை பார்த்தோம். மரச் சாமான்கள் வாங்கினவர்களின் வீட்டிற்கு அச்சாமான்களை வண்டியில் ஏற்றி ஒப்படைக்கச் செல்லும் பொழுது, எங்களுடன் கூட வீட்டின் உள்பக்கத்தை அலங்கரிப்புச் செய்யக் கூடியவரும் வருவார். அவர் அந்த வீட்டு ஆட்களுடன் அலங்கரிப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, நாங்கள் வண்டியிலிருந்து சாமான்களை இறக்கி வீட்டிற்குள் கொண்டு செல்லுவோம். சில நேரங்களில் அடுக்கு மாடி வீடுகளுக்கு சாமான்களை எடுத்துச் செல்ல பல மாடிப் படிகள் ஏற வேண்டியதிருக்கும். நானும், சார்லியும் நாங்கள் செய்து வந்த வேலைக்குப் பதிலாக, வீடு அலங்கரிப்பவரின் வேலையைச் செய்தால் நன்றாக இருக்கும் என்று பலமுறை விரும்புவோம்.
இஸ்ரவேல் மக்கள் 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் சுற்றித்திரிந்த பொழுது, லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்தியர், கெர்சோனியர், மெராரி வம்சத்தாருக்கு, ஆசரிப்பு கூடாரத்திற்குரிய பொருட்களை சுமந்து செல்ல வேண்டிய வேலை குறிக்கப்பட்டது. அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை சுமப்பது, மீண்டும் தங்குமிடத்தில் ஆசாரிப்புக் கூடாரத்தை அமைப்பது போன்ற பணிகளை மறுபடி மறுபடி செய்து கொண்டே இருப்பார்கள். “அவர்கள் சுமந்து காவல் காக்கும்படி ஒப்புவிக்கப்பட்டவைகளைச் செய்யுங்கள்” எண்ணாகமம் 4:32 என்பதே அவர்களுக்கு இடப்பட்ட பணியின் விளக்கமாகும்.
இந்த வேலைக்கு “பொறுப்பானவர்கள்” பரிசுத்த ஸ்தலத்திலுள்ள பணிமுட்டுகளைப் பயன்படுத்தி, அனுதினம் பலியிட்ட, தூபம்காட்டின, ஆசாரியர்களைக் குறித்து பொறாமைப் பட்டிருப்பார்களா என்று நான் சிந்தித்தேன். (4:5,15) அந்த ஆசாரியர்கள் செய்த பணி எளிதானதாகவும், மதிப்பிற்குரியதாகவும் காணப்பட்டிருக்கும். ஆனால் லேவியர்களுக்கும் ஆசாரியர்களுக்கும் இடப்பட்ட பணிகள் இரண்டுமே மிகவும் முக்கியமானவை. அத்தோடு கூட அவை இரண்டுமே தேவனிடமிருந்து வந்த கட்டளையாகும்.
அநேக நேரங்களில் நாம் செய்யும் தொழிலை நாமே தேர்ந்தெடுக்க இயலாதவர்களாக இருக்கலாம். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட பணியைப் பற்றிய எண்ணங்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். தேவன் நமக்கு அருளியுள்ள பணியை நாம் எப்படிச் செய்கிறோம் என்பதே, அவருக்குச் செய்யும் ஊழியத்தை நிர்ணயிக்கும் அலகாகும்.