2014 உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் கானாவைச் சேர்ந்த அசாமோஜியன் ஜெர்மெனிக்கு எதிராக ஒரு கோல் போட்ட பொழுது அவனும் அவனது குழுவினரும், சீரான அடிகள் எடுத்து வைத்து அழகான ஒரு நடனம் ஆடினர். ஒரு சில நிமிடங்கள் கழித்து ஜெர்மெனியைச் சேர்ந்த மிரோஸ்லாவ் குலோஸ் ஒரு கோல் போட்ட பொழுது, அவன் மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் அடித்தான். “கால் பந்து விளையாட்டில் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடும் விதம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது. ஏனெனில் அது விளையாட்டு வீரர்களின் குணாதிசயங்களையும், மதீப்பீடுகளையும், ஆவல்களையும் வெளிப்படுத்தக் கூடிய தாக உள்ளன” என்று 2002 உலகக் கோப்பைப் போட்டியில் அமெரிக்க அணிக்காக கோல் அடித்த கிளின்ட் கூறினார்.

சங்கீதம் 150ல் சுவாசமுள்ளயாவும் பல்வேறு விதங்களில் கர்த்தரைத் துதித்து போற்றும் படி சங்கீதக்காரன் அழைக்கிறான். எக்காளம், வீணை, சுரமண்டலம், தம்புரு, யாழ், தீங்குழல், நடனம் இவற்றைப் பயன் படுத்தி தேவனை போற்றித் துதிக்க நமக்கு ஆலோசனை தருகிறார். உள்ளான ஆர்வத்துடனும், படைப்பாற்றலுடனும், தேவனைப் போற்றி, துதித்து கனப்படுத்தி அவருக்கு ஆராதனை செய்ய வேண்டுமென்று ஊக்கப்படுத்துகிறான். ஏனெனில் கர்த்தர் பெரியவரும் அவரது ஜனங்களுக்காக வல்லமையான காரியங்களைச் செய்தவருமாய் இருப்பதால் எல்லாத் துதிக்கும் அவர் பாத்திரர். தேவனைத் துதிக்கும் இந்த வெளிப்படையான செயல்கள் நன்றியினால் நிரம்பி வழியும் உள்ளத்தின் ஊற்றிலிருந்து வெளி வருகின்றன. “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக” (சங்150:6) என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறான்.

நாம் பல்வேறு முறைகளில் தேவனைப் போற்றித் துதித்தாலும் (நமது ஆராதனைகளில் மனக்கிளர்ச்சி அடைந்து உணர்ச்சி வசப்பட்டு, செயல் படுவதை நான் ஊக்கப்படுத்த மாட்டேன்) நமது ஆராதனை எப்பொழுதும் உள்ளான உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். தேவனுடைய குணாதிசயங்களை பற்றி நாம் சிந்திக்கும் பொழுது, நமது துதியினாலும், ஆராதனையினாலும் அவரைப் போற்றித் துதித்து கொண்டாடாமல் இருக்க இயலாது.