சீனாவிலுள்ள யுனான் மாகாணத்தின் மலைப்பகுதியில் வசிக்கும் அக்கா மலை ஜாதியில், வயது சென்ற அங்கத்தினரில் ஒருவர் அப்போ-லா-பை ஆவார். சமீபத்தில் சுவிசேஷ பணியின் போது அவரைச் சந்தித்தோம். கன மழையின் காரணமாக அந்தவார வேதாகம ஆராய்ச்சி வகுப்பிற்கு அவரால் செல்ல இயலவில்லை என்று எங்களிடம் கூறினார். ஆகவே அவர் எங்களிடம் “நீங்கள் எனக்கு வேதாகமத்தை போதிக்க இயலுமா” என்று கெஞ்சிக் கேட்டார்.
அப்போ-லா-பைக்கு வாசிக்கத் தெரியாது. ஆகவே வார வேதாகம போதனை வகுப்பு அவருக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. நாங்கள் அவருக்கு வேதாகமத்தை வாசித்து காண்பித்தபொழுது அவர் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தார். அவர் ஆவலுடன் கவனித்துக் கேட்டதைப் பார்த்த பொழுது, நான் நமது ஆவியைத் தூண்டக் கூடிய வேத வசனங்களை கவனமாக கவனிக்கும் பொழுது கர்த்தரை மகிமைப் படுத்துகிறோம் என்றறிந்தேன்.
உபாகமம் 4ல் மோசே இஸ்ரவேல் மக்களிடம், அவன் கற்பிக்கும் கற்பனைகளையும், கட்டளைகளையும் மிகக் கவனமாக கவனிக்கும்படி வற்புறுத்திக் கூறினான். (வச. 1) அவன் கற்பித்த போதனைகளுக்கு மூல ஆதாரமாக இருந்தவர் சீனாய் மலையில் “அக்கினியிலிருந்து” பேசின தேவனே என்பதை நினைப்பூட்டினான். (வச. 12) “நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்தார்” (வச. 13) என்று மோசே கூறினான்.
தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க வேண்டுமென்ற அப்போ-லா-பையின் பசிதாகம் நம்மிலும் அப்படிப்பட்ட ஆவலைத் தூண்டட்டும். 2 தீமோத்தேயு 3:16,17ல் தேவனுடைய வசனங்கள் நமது நன்மைக்காகவும் ஆவிக்கேற்ற வளர்ச்சிக்காகவும் எழுதப்பட்டு, நாம் இரட்சிப்பிலும், தேவனுடைய வழிகளிலும் நடக்கும் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள ஆவியானவரால் எழுதப்பட்டுள்ளதென்று பவுல் அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார்.
