இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த பாராசூட் நாய்களைப்பற்றி அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். 1944 ஜூன் 6ம் தேதியான D-Day அன்று நேசப்படைகள் யுத்தத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பொழுது, கண்ணி வெடிகள் நிறைந்த அப்பகுதியில், அந்த வெடிகள் புதைந்து இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, அதனால் வர இருக்கும் ஆபத்தை முன்னதாகவே படை வீரர்களுக்கு அறிவிக்க, சக்திவாய்ந்த மோப்ப சக்தியுடைய நாய்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. எதிராளிகள் இருக்கக் கூடிய இடத்திற்கு அப்பால் இருந்த நேசப் படை வீரர்களிடம் இந்த மோப்ப நாய்களை பாராசூட்டு மூலம் தான் அனுப்ப இயலும். ஆனால் நாய்களின் இயற்கையான சுபாவத்தின்படி பாராசூட்டுகளிலிருந்து குதிப்பது அதிக பயத்தைக் கொடுக்கும். ஆனால் உண்மையில் அவைகள் மட்டும் பயப்படவில்லை. அவைகள் மட்டுமில்லை – நாமும் பயப்படுவோம். அநேக வாரங்களுக்கு பயிற்சி பெற்ற பின் அந்த நாய்கள், அவைகளின் எஜமான்களின் கட்டளையின்படி பாராசூட்டிலிருந்து கீழே குதிக்கும் அளவிற்கு எஜமான்களை நம்புவதற்குக் கற்றுக் கொண்டன.

இயல்பாகவே நம்மால் செய்ய இயலாத அல்லது நமக்கு பயத்தை உண்டு பண்ணக்கூடிய செயல்களை செய்யுமளவிற்கு, நாம் நமது எஜமானரை (இயேசுவை) நம்புகிறோமா என்று நான் சிந்திக்கிறேன். இயல்பாகவே நாம் நமக்கு எரிச்சலூட்டுபவர்களிடம் தாராளமனப்பான்மையோடோ, மன்னிப்பவர்களாகவோ, பொறுமையுள்ளவர்களாகவோ இருப்பதில்லை. ஆயினும் இயேசு நம்மால் செய்வதற்கு மிகவும் கடினமான காரியங்களை செய்யத்தக்கதாக நாம் அவர்மேல் விசுவாசமாய் இருக்க வெண்டுமென்று கட்டளை இடுகிறார். நாம் இப்படிச் செய்வதால் அவருடைய ராஜ்ஜியம் பரவும். “உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்” (சங்கீதம் 143:8) என்று கூறலாம்.

பாராசூட் நாய்கள் அவைகளது தைரியமான செயல்களுக்காக அடிக்கடி பதக்கங்களைப் பெறுகின்றன. நமது எஜமான் “குதி” என்று கூறினவுடன் குதிக்கும் அளவிற்கு நாம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதால், ஒரு நாள் “நன்றாகச் செய்தாய்” என்று நமது எஜமான் நம்மிடம் கூறக் கேட்போம்.