அன்றாட நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளைக் குறித்து நாம் அறிந்திருக்க விரும்புவது, பாதகமான விளைவுகளை உண்டு பண்ணுகிறது. ஏனெனில் நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகளே அதிகமாகப் பாதிக்கிறது. நம்மால் கட்டுப்படுத்த இயலாத தனி மனிதர்கள், கூட்டங்கள் அல்லது அரசாங்கம் இவைகளின் தீய செயல்பாடுகள் பற்றி மிக எளிதாக அதிகமாக கவலைப்படுகிறோம்.
சங்கீதம் 37 அனுதின செய்திகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது. அச்சங்கீதத்தை ஆரம்பிக்கும் பொழுது தாவீது “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே” (வச.1) என்று ஆரம்பிக்கிறான். பின்பு நாம் மிகவும் அதிகமாக கவலை கொள்ளாமல் இருக்க, சில மாற்று வழிகளை நமக்கு கூறியுள்ளான். உலகில் நடக்கும் எதிர்மறையான காரியங்களைப்பற்றி சிறந்த முறையில் சிந்திக்க தாவீது வழி கூறியுள்ளான்.
நம்மால் கட்டுப்படுத்த இயலாத கெட்ட செய்திகளைக் குறித்துக் கவலைப்படாமல், தேவனை நம்புவதை நாம் தெரிந்து கொண்டால் என்ன நடக்கும்? (வச.3) எல்லை இல்லாமல் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பதை விட “கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாய் இருப்பது சிறந்ததல்லவா” (வச. 4) “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவிப்பதின் மூலம்” (வச.5) நமது கவலைகளிலிருந்து நாம் பெறக்கூடிய விடுதலையை கற்பனை எண்ணிப் பாருங்கள். “கர்த்தரை நோக்கி அமர்ந்து அவருக்குக் காத்திருக்க” (வச. 7) நாம் கற்றுக் கொள்வதால் நாம் மிகவும் அமைதியாக இருக்க இயலும்.
நம்மால்கட்டுப்படுத்த இயலாத துன்பச் செய்திகள், நாம் கவலைப்படுவதற்கு ஓர் எல்லையைக் கொடுக்கும் சந்தர்ப்பமாக உள்ளது. நாம் தேவனை நம்பி நமது வழிகளை அவருக்கு ஒப்புவித்து அவரைச் சார்ந்திருந்தால், நாம் உலகத்தைப் பார்க்கும் பார்வை பிரகாசமாக இருக்கும். போராட்டங்களும் சோதனைகளும் மறைந்து போகாது. ஆனால் அவற்றின் மத்தியில் தேவன் அவரது சமாதானத்தை அருளுகிறார் என்று அறிந்து கொள்ளுகிறோம்.