கானாவிலுள்ள அக்கான் இன மக்கள் மத்தியில்,“பல்லியானது அதின் மேல் கல்லெறியும் பையன்கள் மேல் அதிகம் கோபப்படாமல் கல்லெறிவதால் அது மரிக்கப்போவதை நின்று பார்த்து சந்தோஷப்படும் பையன்கள் மேலேயே கோபமடைகிறது” என்ற ஒரு பழமொழி உண்டு. ஒருவரது வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ச்சி அடைவது, அவரது வீழ்ச்சியின் காரணமாவது போலவும், மேலும் அதிக தீமையான காரியங்கள் அவருக்கு வரவேண்டுமென்று விரும்புவதைப் போலவும் உள்ளது.

இதே தன்மையுடன்தான் “என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குறைச்சலாக்கப்படுகிற போதும், இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிற போதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிற போதும்” (எசேக்கியேல் 25: 3) அதைக் கண்ட அம்மோனியர்கள் தீமையான எண்ணத்துடன் மகிழ்ச்சியடைந்தார்கள். இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட பெரும் தீங்கிற்க்காக அம்மோனியர்கள் பகைமை உணர்வுடன் மகிழ்ச்சி அடைந்ததால் தேவனுடைய கோபத்திற்குள்ளாகி, மிகவும் கடுமையான விளைவுகளை அனுவித்தார்கள் (வச 4-7)

நம்முடைய அயலகத்தார் ஓர் அழிவை சந்திக்கும் பொழுதோ அல்லது துன்பத்திற்கு உள்ளாகும் பொழுதோ நாம் எவ்விதமாக செயல்படுகிறோம்? நமது அயலகத்தார் நல்லவராக, சிநேக மனப்பான்மை உடையவராக இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு நாம் இரக்கப்பட்டு உதவி செய்ய முன் வருவோம். ஆனால் அவர் சிநேக மனப்பான்மை இல்லாதவராக பிறருக்கு துன்பம் விளைவிக்கக்கூடியவராக இருந்தால், நாம் எப்படி செயல்படுவோம்? அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது மனதிற்குள் இரகசியமாக அவர்களுது வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ச்சி அடைவதே நமது இயற்கையான தன்மையாக இருக்கும்.

“உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே ; அவன் இடறும்போது உன் இருதயம் களி கூராதிருப்பதாக” (நீதி 24: 17) என்று நீமிமொழிகள் நம்மை எச்சரிக்கிறது. “(நமது), சத்துருக்களைச் சிநேகியுங்கள்.. நிந்திக்கிறவர்க்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்தேயு 5: 44) என்று இயேசு கூறி இவ்வாறு அவரது அன்பை செயலில் காண்பிக்க கூறுகிறார். அப்படிச் செய்வதின் மூலம் கர்த்தருடைய பரிபூரணமான அன்பை செயல்படுத்திக் காண்பிக்கலாம்.