சிநேகிதர்களால் வரும் மனஅழுத்தம், அன்றாட வாழ்வில் ஒரு பகுதி சில சமயங்களில் ஒரு தீர்மானம் எடுக்குமுன் நமது சொந்த கருத்திற்கோ அல்லது அது தேவனுக்கு பிரியமாக இருக்குமோ, இருக்காதோ என்று எண்ணுவதை விட, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் அல்லது என்ன சொல்லுவார்கள் என்பதை வைத்தே நாம் நமது தீர்மானங்களை எடுக்கிறோம். இவன் இப்படிப்பட்டவன் என்று பிறர் நம்மை தீர்மானித்து விடுவார்கள் என்றோ அல்லது பிறரால் ஏளனம் செய்யப்பட்டுவிடுவோமோ என்பதைக் குறித்து நாம் கவலைப்படுகிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுலும், அவனைச் சுற்றியிருந்த மக்களால் இந்த அழுத்தத்திற்கு உட்பட்டார். சில யூதக் கிறிஸ்தவர்கள் புறஜாதி மக்கள் முழுமையுமான இரட்சிப்பு அடைய கட்டாயமாக விருத்தசேதனம் பெற வேண்டுமென்று நம்பினார்கள். (கலாத்தியர் 1:7; 6:12,15 பார்க்க) ஆயினும் பவுல் தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார். கிரியைகளினால்அல்லாமல் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டுதான் இரட்சிப்பு அடைய முடியுமென்று தொடர்ந்து உபதேசித்து வந்தார். அதனால் அவர் தேவனால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலன் அல்லவென்றும், அவராகவே அவரை அப்போஸ்தலன் என்று அறிவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் அவர் அறிவித்து வந்த சுவிசேஷம் அப்போஸ்தலர்களால் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று உறுதிபடக் கூறினார்கள். (2:1-10)

பவுல், அவரைச் சுற்றியிருந்த மக்களால் ஏற்பட்ட அழுத்தத்தை பொருட்படுத்தாது, யாருக்கு ஊழியம் செய்கிறோம் என்பதை தெளிவாக அறிந்திருந்தார். மனிதனுடைய அங்கீகாரமல்ல தேவனுடைய அங்கீகாரமே முக்கியம். மனித அங்கீகாரத்தையல்ல தேவனுடைய அங்கிகாரத்தை பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார் 2:1-10).

அது போலவே நாமும் கிறிஸ்துவின் ஊழியக்காரராக இருக்கிறோம். மக்கள் நம்மை மதிக்கிறார்களோ அவமதிக்கிறார்களோ என்பது முக்கியமல்ல. நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிறோம் என்பதே முக்கியம். ஒரு நாள் “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” (ரோமர் 14:12) அப்படி என்றால் மக்கள் நம்மைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைக்குறித்துக் கவலைப்படவே வேண்டாம் என்று அர்த்தமல்ல, ஆனால் நமது இறுதி நோக்கம் தேவனை; பிரியப்படுத்துவதே ஆகும். “நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” (மத்தேயு 25: 23) என்று நமது இரட்சகர் நம்மிடம் கூற வாஞ்சிக்கிறோம்.