எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், மரச்சாமான்கள் போன்றவற்றின் பல்வேறு பாகங்களை ஒன்றாக இணைப்பதில் எனக்கும் என் மகனுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. எனது மகன் ஸ்டீவ் எந்திர நுணுக்கங்கள் மீது அதிக நாட்டம் உடையவனாக இருந்ததால், கொடுக்கப்பட்ட செயல் விளக்க முறைகளை தள்ளிவிட்டு அவனாகவே செயல்படுவான். “பொருட்களை இணைக்க ஆரம்பிக்கும் முன்பு இதை வாசியுங்கள்”. என்ற ஆலோசனைக் குறிப்பை வாசிப்பதற்கு அதிக நேரம் செலவழித்து என் கவனம் முழுவதையும் அதில் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது, ஸ்டீவ் அவ்வேலையை பாதிக்கு மேலாக செய்து முடித்திருப்பான்.

சில சமயங்களில் ஸ்டீவைப் போல விளக்கக் குறிப்புகள் இல்லாமலேயே ஒரு செயலை செய்து முடிக்கலாம். ஆனால் தேவனுடைய நற்குணங்களையும் ஞானத்தையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை இணைந்து வாழ்வதற்கு வேதாகமத்தில் தேவன் கொடுத்துள்ள, நெறிமுறைகளை அலட்சியப்படுத்த இயலாது.

பாபிலோனியரால் சிறைப்படுத்தப்பட்ட இஸ்ரவேல் மக்கள், அவர்களது சொந்த தேசத்திற்கு திரும்பவந்தது, இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர்களது சொந்த தேசத்தில் தேவனுக்குரிய ஆராதனையை “மோசேயின் நியாயப்பிராணத்தில் எழுதியிருக்கிறபடி” (எஸ்றா 3:2) செயல்படுவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள். லேவியராகமம் 23:33-43ல் கூறப்பட்டபடியே ஒரு பலி பீடத்தைக் கட்டுவதிலும், தேவனால் கூறப்பட்டபடி கூடாரப்பண்டிகையை கொண்டாடுவதிலும், தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டபடியே சரியாகச் செய்தார்கள்.

கிறிஸ்துவும் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு சில விதிமுறைகளைக் கொடுத்துள்ளார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக. உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22;: 37,39) என்று கிறிஸ்து கூறினார். நாம் அவரை விசுவாசித்து அவரண்டை வரும்பொழுது, நாம் வாழ வேண்டிய வழியை அவர் நமக்குக் காண்பிக்கிறார். நம் வாழ்க்கை எப்படியாக அமைய வேண்டும் என்பதைப் பற்றி நாம் அறிந்திருப்பதை விட நம்மை உண்டாக்கினவர் (தேவன்) நன்கு அறிவார்.