2014ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர், ஓர் இறந்துபோன நாயின் உள்பகுதியை நீக்கிவிட்டு அதைப் பஞ்சினாலும், வைக்கோலாலும் அடைத்தார். பின்பு அந்த பொம்மை நாயைப் பயன்படுத்தி மிருகங்களும் கூட பொறாமைப்படக்கூடியவை என்று காண்பித்தார். கிறிஸ்டியன் ஹாரிஸ் என்ற அந்தப் பேராசிரியை நாய்களுக்கு சொந்தமானவர்கள், அவர்களது செல்லப் பிராணிகளுக்கு முன்பாக பஞ்சடைக்கப்பட்ட நாய்பொம்மையைக் கொஞ்சி விளையாடும்படி கேட்டார். அதைக்கண்ட அநேக நாய்கள் வெளிப்படையாக அவற்றின் பொறாமையை வெளிப்படுத்தின. சில நாய்கள் அவற்றின் எஜமான்களை மெதுவாகத் தொடுவதின் மூலமாகவோ, அல்லது இலேசாக மோதுவதின் மூலமாகவோ எஜமானின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தன. வேறு சில நாய்கள் அவைகளது எஜமான்களுக்கும் அந்த பொம்மை நாய்க்கும் இடையே வந்தன. அவற்றில் வெகு சில நாய்கள் பொம்மை நாயை அவைகளின் எதிரியாக எண்ணி அவற்றின் மீது வேகமாக மோதின.

ஒரு நாய்க்கு ஏற்பட்ட பொறாமை உணர்ச்சியை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதே பொறாமை உணர்வு, மனிதர்களில் ஏற்பட்டால் நல்ல விளைவுகளை உண்டுபண்ணாது. ஆயினும் மோசேயும் பவுலும் தேவனின் இருதயத்தை அழகாகப் பிரதிபலிக்கக் கூடிய வேறொரு பொறாமையைப் பற்றி நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.

கொரிந்துவில் இருந்த சபைக்கு பவுல் எழுதின பொழுது “ தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்” (2கொரி 11:2) என்று எழுதினார். “உங்கள் மனது கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகாதபடி இருக்க விரும்புகிறேன்”. (2கொரி 11:3) என்று அவரது விருப்பத்தைத் தெரிவித்தார். அப்படிப்பட்ட வைராக்கியம் பத்து கட்டளைகளில் “உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவன்” (யாத் 20:5) என்று மோசேயிடம் கூறின வார்த்தைகள் தேவனுடைய உள்ளத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது.

தேவனுடைய வைராக்கியம் என்பது நம்முடைய சுயத்தை மையமாகக் கொண்ட அன்பைப் போன்றதல்ல. அவருடைய சிருஷ்டிப்பினாலும், இரட்சிப்பினாலும் அவருக்குச் சொந்தமான மக்களைப் பாதுகாக்கும் வைராக்கியத்தை, அவரது இருதயம் வெளிப்படுத்துகிறது. அவரில் நாம் என்றென்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், அவரை அறியவும் அவர் நம்மை சிருஷ்டித்துள்ளார், நம்மை மீட்டுள்ளார் நம்முடைய சந்தோஷத்திற்காக, நம்மீது வைராக்கியமும் எரிச்சலுமுடைய தேவனின் அன்பிற்கு மேலாக வேறு எதை நாம் கேட்க இயலும்.