லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆபி என்ற ஆலயம் மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் பெனிடிக்டைன் குழுவைச் சேர்ந்த சமயத்துறவிகள் அனுதினம் வழக்கமாக அங்கு கூடி ஆராதித்து வந்தார்கள். இன்றும் கூட அந்த ஆராதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆபி என்ற அந்த இடம் அநேக புகழ்பெற்ற மனிதர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. 1066ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆங்கிலேய மன்னரும் இங்கு தான் முடி சூட்டப்பட்டு வருகிறார்கள். அதில் 17 மன்னர்கள் அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டுள்ளார்கள். எங்கு அவர்களது ஆட்சி துவங்கினதோ அங்கேயே அவர்களது ஆட்சியும் முடிவடைந்தது.
உலகத்தை ஆளுபவரின் அடக்கம் மிகச்சிறப்பாக அமைந்தாலும், அவர்களது ஆட்சியில் எழுச்சியும், வீழ்ச்சியும் உண்டு, அவர்கள் சில காலம் உயிரோடிருக்கிறார்கள் பின் மரித்து விடுகிறார்கள். ஆனால் இயேசு என்ற ராஜா மரித்தார், ஆனால் இன்று அடக்கம் பண்ணப்பட்டவராகவே அவர் இல்லை. அவரது முதல் வருகையில் முட்களால் ஆன கிரீடம் சூட்டப்பட்டவராய் “யூதர்களுடைய ராஜாவாக” சிலுவையில் மரித்தார். (யோவான் 19:3,19) இயேசு மரித்தோரிலிருந்து வெற்றிகரமாக உயிர்த்தெழுந்ததினால், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களாகிய நாம் கல்லறைக்குப் பின்பு (மரணத்திற்குப் பின்பு) அவரோடு கூட என்றென்றும் நித்திய காலமாய் வாழ இருக்கிறோம் என்ற நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவான் 11:25-26) என்று இயேசு கூறினார்.
உயிர்த்தெழுந்த ராஜாவை நாம் சேவிக்கிறோம்! நித்திய நித்திய காலமாய் நம்மை அரசாட்சி செய்ய இருக்கிற “சர்வ வல்லமையுள்ள கர்த்தரை” எதிர்நோக்கி இருக்கிற, நாம் இன்று மகிழ்ச்சியுடன் நமது வாழ்க்கையைத் தேவனுடைய முடிவில்லா ஆளுகைக்கு ஒப்புக் கொடுப்போம். (வெளி 19:6)