நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது அந்த நிகழ்ச்சியை முதன்முதலாகக் கண்டேன். பனிபெய்யும் இரவு, நகரத்திலுள்ள விளக்குகளின் ஒளியை விட்டு வெகுதூரத்தில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனத்தின் மேல், மகிழ்ச்சியோடு சத்தம் போட்டு உரையாடிக் கொண்டு சென்ற நண்பர்களோடு நான் பயணம் செய்தபொழுது, அடிவானத்தில் பலவண்ண ஒளி பளிச்சிட வானமே ஒளிமயமாக இருந்தது. நான் மெய்மறந்து போனேன், அந்த இரவுமுதல் அரோரா போரியாலிஸ் அல்லது வடதிசை ஒளி என்ற வானில் தோன்றும் அரிதான ஒளி விளைவு நிகழ்ச்சியில் கவரப்பட்டேன். பொதுவாக அப்படிப்பட்ட நிகழ்ச்சி நான் வசிக்கும் இடத்திலிருந்து வடக்கே அதிக தொலைவில் நடைபெறும். ஆனால் அரிதாக எப்பொழுதாவது குறைந்த அச்சரேகையிலும் காணப்படும். ஒருமுறை அந்நிகழ்ச்சியைப் பார்த்தபின் மேலும் அதைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உடையவனாக இருந்தேன். என்னைப்போல அந்நிகழ்ச்சியினால் கவரப்பட்ட என் சிநேகிதரிடம் காலச்சூழ்நிலை ஏற்றதாக இருந்தால் “ஒருவேளை இன்று”… என்று கூறுவேன்.
வேதாகமம் முழுவதும் ஒளியும், மகிமையும் கர்த்தருடைய வருகையை விளக்கப் பயன்படுகின்றன. சூரியனும் தேவைப்படாத காலம் வர இருக்கிறது. (ஏசாயா 60:19) தேவன் அவரது சிங்காசனத்தில் வீற்றிருப்பதை விளக்கும் யோவான் “வீற்றிருந்தவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும், பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார். அந்த சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது, அது பார்வைக்கும் மரகதம் போல் தோன்றிற்று”. (வெளி 4:3)
மரகதப் பச்சை நிறத்திலிருந்த வட்டம் என்பது, வடதிசை ஒளியை விவரிக்கும் சரியான வார்த்தையாக உள்ளது. ஆகவே, எப்பொழுதெல்லாம் வானத்தில் மகிமை நிறைந்த ஒளிவண்ணத்தை நேரிலோ, அல்லது படத்திலோ, வீடியோ காட்சியிலோ காணும்பொழுதெல்லாம் அது வரப்போகிற ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய முன் அனுபவம் என்று எண்ணி தேவனுடைய மகிமை இன்றும்கூட இருளை ஊடுருவிச் சொல்கிறதென்று தேவனைத் துதிக்கிறேன்.