பலவிதமான தேவையிலுள்ள ஏழைமக்களுக்கு உதவிசெய்யும் அநேக தொண்டு நிறுவனங்கள், தங்களது தேவைக்கும் அதிகமாக வைத்திருப்பவர்களிடமிருந்து அவர்களுக்கு தேவையற்ற துணிமணிகள், வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சாமான்கள் போன்ற நன்கொடைகளையே சார்ந்துள்ளார்கள். நமக்குப் பயன்படாத பொருட்களை பிறருடைய பயன்பாட்டுக்கு கொடுத்துவிடுவது நல்லது. ஆனால் நாம் அனுதினமும் பயன்படுத்தும் விலையுயர்ந்த பயனுள்ள பொருட்களை கொடுக்க பொதுவாக மனதில்லாமல் இருப்போம். பவுல் சிறைச்சாலையிலிருந்த பொழுது நம்பக் கூடிய சிநேகிதர்களின் ஊக்கமும், உறவும் தேவைப்பட்டது. ஆனாலும் அவருக்கு மிக நெருங்கிய இரு சிநேகிதர்களை பிலிப்பு பட்டணத்திலுள்ள விசுவாசிகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய அனுப்பினார். (பிலிப் 2:19-30) “சீக்கிரமாய் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று… என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்தில் இல்லை” (பிலிப்பியர் 2:19-30) “என் சகோதரனும், என் உடன்வேலையாளும், உடன் சேவகனும்… எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்ப வேண்டுமென்று கூறினேன்” (வச 2:25) என்று கூறியுள்ளார். அவருக்கு மிகவும் தேவையாகவும், உதவி செய்பவர்களாகவும் இருந்தவர்களை பவுல் மற்றவர்களுக்கு தாராள மனதுடன் கொடுத்து உதவினார்.

நமது வாழ்க்கையில் “மிகவும் மதிப்புள்ளதாக” நாம் கருதுவது, நாம் அறிந்த யாரோ ஒருவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அது நமது நேரமாகவோ, பிறரை ஊக்கப்படுத்துவதாகவோ, அவர்கள் பகிர்ந்து கொள்வதைக் கவனிக்கும் செவிகளாகவோ அல்லது உதவி செய்யும் கரமாகவோ இருக்கலாம் தேவன் நமக்கு கொடுத்துள்ளதை பிறருக்கு கொடுக்கும்பொழுது, தேவன் மகிமைப்படுகிறார். பிறருக்கு உதவி கிடைக்கிறது. நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.