பாவியாகிய மனிதனுக்கும், பரிசுத்தராகிய தேவனுக்கும் இடையே உள்ள தூரத்தை கடும் தூய்மைவாதிக் குழு (puritan) வைச் சார்ந்த மக்களின் “தரிசனப்பள்ளத்தாக்கு” என்ற ஜெபம் விளக்குகிறது. அந்த ஜெபத்தில் “என்னை தரிசனப்பள்ளதாக்கிற்கு கொண்டுவந்தீர்… பாவமாகிய மலைகளால் சூழப்பட்ட நான் உமது மகிமையைக் கண்டேன்” என்று மனிதன் தேவனிடம் கூறுகிறான். அவனது பாவத்தன்மையை அவன் அறிந்திருந்தபொழுதும் இன்னமும் நம்பிக்கையுள்ளது. “மிகவும் ஆழமான கிணறுகளிலிருந்து நட்சத்திரங்களைக் காணலாம். ஆழம் அதிகரிக்க, உமது நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவிடும்” என்று அந்த மனிதன் தொடர்ந்து கூறுகிறான். “எனது இருள் சூழ்ந்த நிலையில் உமது வெளிச்சத்தையும்… எனது பள்ளத்தாக்குப் போன்ற நிலையில் உமது மகிமையும் நான் காணட்டும்” என்ற இறுதி வேண்டுதல்களோடு அந்தக் கவிதை முடிவடைகிறது.

யோனா சமுத்திரத்தின் ஆழத்திலிருந்தபொழுது, தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராக செயல்பட்டு அவனது பாவத்தினால் மேற்கொள்ளப்பட்டபொழுது, யோனா மீன் வயிற்றிற்குள் மூன்று நாள் இருக்க நேரிட்டது. “சமுத்திரத்தின் ஆழத்திலே நீர் என்னைத் தள்ளி விட்டீர்… தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கியது” (யோனா 2:3,5) என்று யோனா தேவனை நோக்கிக் கதறினான். அவனுடைய பயங்கரமான சூழ்நிலைமையிலும் “கர்த்தரை நினைத்தேன். அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது” (வச 7) என்று கூறினான். தேவன் அவனது விண்ணப்பத்தைக் கேட்டு அவனை கரையிலே கக்கும்படி மீனுக்கு கட்டளையிட்டார்.

தேவனுக்கும் நமக்குமிடையே பெரிய இடைவெளியை பாவம் உண்டுபண்ணினாலும், நமது வாழ்க்கையில் நம்பிக்கையற்ற தாழ்ந்த சூழ்நிலையிலிருந்து பரிசுத்தம், உண்மைத்தன்மை, கிருபை உடைய தேவனை நோக்கிப் பார்க்கலாம். நமது பாவங்களிலிருந்து நாம் மனந்திரும்பி நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டால், அவர் நமது பாவங்களை நமக்கு மன்னிப்பார். பள்ளத்தாக்கு போன்ற நம்பிக்கையிலிருந்து ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கிறார்.