1780ஆம் வருடத்தில் இராபர்ட் ரேய்கஸ் லண்டன் மாநகரைச் சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த படிப்பறிவற்ற ஏழை பிள்ளைகளைக் குறித்து மனபாரமடைந்தார். அந்தப் பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவி செய்யவில்லை என்பதைக் கவனித்து அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சி செய்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பிள்ளைகளுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தும்படி சில பெண்களை ஏற்படுத்தினார். வேதாகமத்தைப் பாடப்புத்தகமாக பயன்படுத்தி அந்த ஆசிரியர்கள் அந்த ஏழைக்குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஞானத்தை அவர்களுக்குப் போதித்தார்கள். விரைவில் 100 குழந்தைகள் அந்த வகுப்புகளில் சேர்ந்து சுத்தமான, பாதுகாப்பான சூழ்நிலையில் மதிய உணவையும் உண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.
“நீதிமான் எழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்” (நீதிமொழி 29:7) என்ற வசனத்தின் உண்மையை ஒரு மனிதன் புரிந்து கொண்ட படியினால், ஞாயிறுபள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த வகுப்புகள் விரைவில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பிள்ளைகளின் வாழ்க்கையைத் தொட்டது. 1831ல் லண்டன் மாநகரில் ஞாயிறு பள்ளிகள் பத்து லட்சத்திற்கதிகமான குழந்தைகளைச் சென்று அடைந்தது.
உபத்திரவப்படும் மக்கள்மேல் இயேசு கரிசனையாக உள்ளார் என்பது ஒரு இரகசியமான காரியமல்ல. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாக இருக்க, பசியாய் இருக்கிறவர்களுக்கு போஜனம் கொடுக்கவும், தாகமாய் இருப்பவர்களின் தாகத்தைத் தீர்க்கவும், வீடற்றவர்களுக்கு வீடு, வாசல் ஏற்படுத்தித்தரவும், வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரம் கொடுக்கவும், வியாதியாய் இருப்பவர்களையும், காவலில் இருப்பவர்களையும் போய் பார்த்து ஆறுதல் அளிக்கவும் வேண்டுமென்று இயேசு மத்தேயு 25:35-36ல் ஆலோசனை கூறுகிறார்.
கிறிஸ்து நமது இருதயங்களில் இருக்கிறாரென்று நாம் சாட்சியான வாழ்க்கை வாழும்பொழுது, தேவனுடைய உள்ளத்திற்கு பிரியமாக இருப்பவர்களைக் குறித்து நாம் இரக்கம் காட்டும் பொழுது, இரக்கமுள்ள நமது இரட்சகரை நாம் மகிமைப்படுத்துகிறோம்.