வகை  |  odb

வன்கண்ணை முறியடித்தல்

மாலதி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், குறிப்பாக விசேஷங்களுக்கு அலங்கரித்துக் கொள்ளும்போது, அம்மா கவலையுடன், கட்டாயமாக முகத்தில் எங்காவது ஒரு கரும்புள்ளி வைப்பாள். அவளுடைய அம்மா தொடர்ந்து அவளைக் கவனித்து, "வன்கண்ணை" தடுக்க சடங்குகளைச் செய்தார். தமிழில் த்ரிஷ்டி அல்லது ஹிந்தியில் நாசர் என்று அழைக்கப்படும் "வன்கண்" இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் அஞ்சப்படுகிறது. மாலதியின் அம்மாவைப் போலவே, யாராவது தங்களைப் பொறாமையுடன் பார்க்கும் போதெல்லாம், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரிடும் என்று பலர் பயப்படுகிறார்கள்.

அறியாத பயம் நம்மை முடக்கும் போது, மூடநம்பிக்கையின் அடிப்படையிலான விரைவான தீர்வுகளைத் தேடலாம். ஆனால், தீமோத்தேயுவின் ஆசிரியர் இவை பிசாசுகளின் உபதேசம் என்கிறார் (வ.1). விசுவாசிகளுக்கும் "கட்டுக்கதைகளுக்கும்" (வ.7) சம்பந்தமில்லை என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். மூடநம்பிக்கைகள் மற்றும் கதைகள் போன்ற நமக்குப் பயத்தை ஏற்படுத்தும் இந்த விஷயங்கள் இயேசுவை விசுவாசிக்கும் நம்மில் எவ்வளவேனும் இருக்கக்கூடாது (வ.3-7). மாறாக, நாம் தேவபக்தியுடன் இருக்கவும், தேவனைச் சார்ந்திருக்கவும் நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும் (வ.7). ஏனெனில், கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் சாத்தானை வென்றபோது, அவர் இருளின் வல்லமைகளை என்றென்றும் தோற்கடித்தார். நாம் பயப்பட வேண்டியதில்லை, "ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" (வ11).

எனவே, எபேசியரில் பவுல் சொல்வது போல், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் நம்மைப் பாதுகாக்கும் விசுவாசத்தின் கேடகம் உட்பட, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (எபேசியர் 6:14-17) அணிவோம். சத்துரு நம்மை வெல்ல முடியாது, நிச்சயமற்ற எதிர்காலத்தைக் குறித்தும் நாம் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் சத்துருவை வென்ற இயேசுவே வெற்றியாளர் (1 யோவான் 5:18). 

 

பலப்பரீட்சை

 

நம்மில் பெரும்பாலோர் கயிறு இழுக்கும் போட்டியை நன்கு அறிந்திருப்போம். இது ஒரு நீண்ட கயிறு கொண்டு, ஒரு மையக் கோட்டை தாண்டும்படி ஒன்றை ஒன்று இழுக்கும் இரு குழுவை உள்ளடக்கியது. அதை இன்னும் வேடிக்கையாக மாற்ற, சில நேரங்களில், ஒரு மண் குழி அல்லது குளிர்ந்த நீர்த் தொட்டி நடுவில் இருக்கும், இதனால் தோல்வியடைந்த அணி அதில் விழும். வெற்றிக்கு உடல் வலிமை மட்டும் போதாது. அதற்குக் கவனம், உறுதிப்பாடு மற்றும் திறமையும் தேவை.

நாமும் இதுபோன்ற பலப்பரீட்சையில் இருப்பதாக பவுல் கூறுகிறார். ஆனால் நாம் வேடிக்கைக்காக விளையாடுவதைப் போலல்லாமல், நமது போராட்டம் "துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்" (வ.12) இருக்கிறது. நாம் ஒரு ஆவிக்குரிய பலப்பரீட்சையில் இருக்கிறோம், நம் எதிரிகள் நம்மைத் தோற்கடித்து பாவத்தின் அழுக்குக்குள் நம்மை விழ வைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்து ஏற்கனவே சிலுவையில் பொல்லாதவனைத் தோற்கடித்துவிட்டார் என்ற உறுதியுடன் "தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" (வ.13) என்று இந்த ஆவிக்குரிய பலப்பரீட்சைக்கு ஆயத்தப்படும்படி பவுல் நம்மை அழைக்கிறார். வலுவாக இருந்து வெற்றி பெற, மனித பலம் அல்லது நல்ல நோக்கங்கள் உதவாது. நாம் தேவனை நாடி, அவரையே சார்ந்திருக்க வேண்டும். பவுல் சொல்வது போல், நாம் "கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் " (வ.10) பலப்பட வேண்டும். "பிசாசின் தந்திரங்களோ" "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களோ" இவற்றை நாமே சமாளிப்பது கடினம் (வ.11-16). அதிர்ஷ்டவசமாக, நாமே சமாளிக்கவும் வேண்டாம். தேவன் அருளும் பெலனையும் உத்தியையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் (வ.11). நாம் அவரிடம் செல்லும்போது, அவர் நமக்கு "சத்தியம்" என்ற கவசத்தைத் தருகிறார். நமது பாதங்களுக்கு “சமாதானத்தின் சுவிசேஷம்” பொருத்தப்படுகின்றன. மேலும் நாம் "விசுவாச" கேடகத்தால் பாதுகாக்கப்படுகிறோம். உண்மையில், ஆவிக்குரிய பலப்பரீட்சையின் மூலம் உறுதியாக நிற்க அவருடைய வார்த்தை நமக்கு உதவுகிறது (வ.14-17).

 

தாராளமான விசுவாசம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் தலைமையின் கொந்தளிப்பான மாற்றத்திற்குப் பிறகு, தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்ள எங்கள் சபையும் அழைக்கப்பட்டது. அநேக குடும்பங்கள், ஒரு சிறிய பையில் தங்களால் இயன்றதை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். எங்கள் சபை குடும்பங்களில் பலர் தங்கள் வீடுகளில் அவர்களை ஏற்றுக்கொண்டனர். சில வீடுகளில் இடவசதி மிகக்குறைவாகவே இருந்தது.

அவர்களுடைய விருந்தோம்பல், இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் பிரவேசித்தபோது அவர்களுக்குத் தேவன் தந்த மூன்று கட்டளைகளைப் பிரதிபலிக்கிறது (உபாகமம் 24:19-21). விவசாயம் செய்யும் சமூகமாக, அறுவடையின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். அடுத்த ஆண்டு வரை தாக்குப்பிடிக்க அவர்களுக்குப் பயிர்கள் அவசியம். இதுவே தேவன், “அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக” (வ.19) என்று கட்டளையிடவும், அவரை நம்பும்படி அழைக்கவும் செய்தது. தங்களுக்கு போதுமானது உள்ளது என்று அறிந்து மட்டும் கொடுக்காமல், தேவனின் பராமரிப்பை நம்பும் உள்ளத்திலிருந்து கொடுத்து, இஸ்ரவேலர்கள் தாராள மனப்பான்மையை கடைப்பிடித்தனர்.

இத்தகைய விருந்தோம்பல், அவர்களும் “எகிப்திலே அடிமையாயிருந்ததை” (வ.18, 22) நினைவூட்டுவதாகவும் இருந்தது. அவர்கள் ஒரு காலத்தில் நசுக்கப்பட்டு, ஆதரவற்றிருந்தனர். அவர்களின் உதாரத்துவம் அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தேவனின் கிருபையை நினைவூட்டுவதாக இருந்தது.

இயேசுவின் விசுவாசிகளும் உதாரத்துவமாய் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரிந்தியர் 8:9) என்று பவுல் நமக்கு நினைப்பூட்டினார். அவர் நமக்களித்ததால் நாமும் அளிக்கிறோம். 

 

குணமாகுதலுக்கான நம்பிக்கை

முதுகுத் தண்டு பாதிப்புகளால் முடமானவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் புதிய வழி உருவாகியுள்ளது. தசைகள் மற்றும் மூளைக்கு இடையேயுள்ள நரம்பியல் பாதைகளை மீண்டும் இணைக்க, நரம்பு வளர்ச்சியைத் தூண்டும் வழியை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முடங்கிய எலிகள் மீண்டும் நடக்க இந்த மறுவளர்ச்சி உதவுகிறது. மேலும் இந்த சிகிச்சையானது மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதைத் தொடர் சோதனை கண்டறியும்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஞ்ஞானம் எதைச் சாதிக்க விரும்புகிறதோ, அதை இயேசு அற்புதங்கள் மூலம் செய்தார். பெதஸ்தாவில் உள்ள குளத்தை அவர் பார்வையிட்டபோது, நோய்வாய்ப்பட்ட பலர் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையில் அலைமோதிக்கொண்டிருந்தனர். இயேசு, அவர்களுள் “முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த” (யோவான் 5:5) ஒரு மனுஷனைத் தேடினார். அவன் உண்மையாகவே சுகமடைய விரும்புவதை உறுதிசெய்த பின்னர், கிறிஸ்து அவனை எழுந்து நடக்குமாறு அறிவுறுத்தினார், “உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்” (வ. 9)

நமது உடல் உபாதைகள் அனைத்தும் தேவனால் குணமாகும் என்று நமக்கு வாக்களிக்கப்படவில்லை. அன்று இயேசுவால் குணமடையாத மற்றவர்களும் குளத்திலிருந்தனர். ஆனால் அவர் மீது நம்பிக்கை வைப்பவர்கள் விரக்தியிலிருந்து நம்பிக்கையும், கசப்பிலிருந்து கருணையும், வெறுப்பிலிருந்து அன்பையும், குற்றஞ்சாட்டுவதிலிருந்து மன்னிக்கும் மாண்பையும் பெற்று ,அவர் தரும் குணத்தை அனுபவிக்க முடியும்.எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் (அல்லது தண்ணீர் குளமும்) அத்தகைய சிகிச்சையை நமக்கு வழங்க முடியாது; அது விசுவாசத்தால் மட்டுமே வரும்.