
முற்றிலும் தனிமையா?
ஸ்வேதாவின் குடும்பம் பிரிவதை அவள் தன் கண்முன்னே பார்த்தாள். அவளுடைய கணவர் ஒருநாள் திடீரென வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் அவளும், அவளுடைய குழந்தைகளும், குழப்பத்துடனும் கோபத்துடனும் இருந்தனர். அவள் அவனைத் திருமண ஆலோசகரிடம் செல்லுமாறு கூற, அவன் தவறு முழுவதும் மனைவியிடம்தான் இருக்கிறதென்று சொல்லி, அதை மறுத்து விட்டான். அவன் திரும்பிவர வாய்ப்பில்லை என்பதை நினைக்கும்போது, அவள் பயத்தாலும் நம்பிக்கையின்மையினாலும் பாதிக்கப்பட்டாள். அவளால் தன்னையும், தன்னுடைய குழந்தைகளையும் தனியே கவனித்துக் கொள்ள முடியுமோ?
ஆபிரகாம் மற்றும் சாராளின் வேலைக்காரியாகிய ஆகாரும் இத்தகைய சூழலை எதிர்கொண்டாள். தேவன் தாம் வாக்குப்பண்ணினபடி (ஆதியாகமம் 12,15) ஒரு குமாரனைத் தருவாரென்பதற்குப் பொறுமையாய் காத்திராமல், சாராய் தன்னுடைய வேலைக்காரியாகிய ஆகாரை தன்னுடைய கணவருக்குக் கொடுத்தமையால், ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்தான் (ஆதியாகமம் 16:1-4,15). ஆனால் தேவனுடைய வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கு பிறந்தபோது, குடும்பத்திலுள்ள பதற்றம் அதிகரித்து, ஆபிரகாம் ஆகாரையும், இஸ்மவேலையும், சிறிது உணவு மற்றும் தண்ணீரைக் கொடுத்து அனுப்ப வேண்டியதாயிற்று (ஆதியாகமம் 21:8-21). அவளுடைய விரக்தியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சீக்கிரத்தில் அவ்வுணவெல்லாம் தீர்ந்து வனாந்தரத்தில் தவித்தனர். ஆகார் செய்வதறியாமல் இஸ்மவேலை ஒரு புதரின் அடியில் வைத்துவிட்டு, தன் மகன் சாவதை காணவேண்டாமென்பதற்காக தூரமாக நடந்து சென்றாள். இருவரும் அழுதனர். ஆனால் தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார் (வ.17). தேவன் அவர்களுடைய அழுகையைக் கேட்டு, அவர்கள் தேவைகளைச் சந்தித்து, அவர்களோடே இருந்தார்.
தனிமையான நேரங்களில் விரக்தியுற்று நாம் தேவனிடம் அழுகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம்முடைய வாழ்வில் அவர் கேட்கிறவராகவும், தேவைகளைச் சந்திப்பவராகவும், நம்முடன் கூட இருப்பவராகவும் இருக்கிறாரென்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது.

தேவன் நம்மை அறிவார்
சமீபத்தில் மைக்கெல் ஏஞ்சலோவின் சிற்பகலைப் புகைப்படத்தை நோக்கிய போது, அதிலுள்ள மோசேயின் வலது கையில் தசைகள் வீங்கி இருப்பதைக் கண்டேன். அந்தத் தசை முன்னங்கையில் உள்ள ஒரு மெல்லிய தசையாகையால் அதை ஒருவர் உற்று நோக்கினால் இன்றி அதை கண்டறிய முடியாது. புரிந்துகொள்ளக் கடினமான குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளும் கலைஞராகிய மைக்கேல் ஏஞ்சலோ, மனிதர்களை உற்று நோக்கித் தனது சிற்பக் கலைகளைச் செதுக்குவார். அக்கலையுணர்வு அவருக்கே உரியதாகும். மைக்கேல் ஏஞ்சலோ கிரானைட்டுகளில் மனிதனின் உள்ளான ஆத்துமாவை வெளிப்படுத்துவதற்கு எடுத்த முயற்சி, முழுமையாக வெற்றி பெறவில்லை.
தேவன் ஒருவராலேயே மனிதனின் ஆழ்ந்த மனதின் உண்மைத்தன்மையை அறிய முடியும். எவ்வளவுதான் நாம் மனிதர்களை உற்று நோக்கினாலும், கவனித்தாலும், அவையெல்லாம் நிழலேயாகும். ஆனால் தேவன் நிழலுக்கு அப்பாற்பட்டதைப் பார்க்கிறார். அதைத்தான் தீர்க்கதரிசியாகிய எரேமியா "நீர் என்னை அறிந்திருக்கிறீர்", "என்னைக் காண்கிறீர்" எனக் குறிப்பிடுகிறார் (வ.12: 3). தேவனுடைய ஞானம் என்பது தத்துவம் சார்ந்தது அல்லது அறிவு சார்ந்ததோ அல்ல. அவர் நம்மை தூரத்தில் இருந்து கவனிப்பவர் அல்ல, அவர் நமது மனதின் உண்மையான நிலையைக் காண்கிறவராய் இருக்கிறார். நம்மாலேயே புரிந்து கொள்ளமுடியாத ஆழங்களையும் தேவன் அறிகிறவராயிருக்கிறார்.
நம்முடைய போராட்டங்கள் எதுவாயிருந்தாலும், நம்முடைய இதயங்களில் என்ன நடந்தாலும், தேவன் அதைக் காண்கிறார், அதை உண்மையிலேயே அறிந்திருக்கிறார்.
-வின் கோலியர்

தேவனுக்கு செவிகொடுத்தல்
எனது கல்லூரிக்கும், பாலைவனத்திலிருந்த என் வீட்டுக்குமான சாலை வெறுமையாக இருந்ததால், நான் எனது வாகனத்தை சற்று வேகமாக ஓரிருமுறை ஓட்டினேன். காரணம் அந்த சாலை நீண்ட, நெடிய சாலை. முதலில் நெடுஞ்சாலை காவல்துறையிடமிருந்து எனக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. பின்னர் அபராத சீட்டு வந்தது. என் வாகனத்தின் வேகத்தை நான் மறுபடியும் குறைக்காததால், இரண்டாவது தடவையாக, அதே இடத்தில் நான் பிடிபட்டேன்.
செவிசாய்க்க மறுப்பதால், விபரீதமான பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இத்தகைய மோசமான உதாரணத்தை, நல்லவனாய் மற்றும் உண்மையான ராஜாவாயிருந்த யோசியாவின் வாழ்க்கையில் நாம் காண முடியும். எகிப்தின் ராஜாவாகிய நேகோ, அசீரியர்களுக்கு உதவுவதற்காக பாபிலோனுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்தபோது, யோசியா அவனுக்கு விரோதமாக வந்தான். நேகோ, யோசியாவிடம் ஸ்தானாபதிகளை அனுப்பி ,"நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல என்னோடே யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான்" (வ.21). தேவனே நேகோவை அனுப்பியிருந்தார். யோசியா அதற்கு செவிகொடாமல் மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம் பண்ணுவதற்கு வந்தான் (வ.22). யோசியா மிகவும் காயப்பட்டு மரணமடைந்தான், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள் (வ.24).
தேவனை நேசித்த யோசியா, அவருக்கும், பிறர் மூலம் தனக்குக் கிடைத்த அவரின் ஞானத்திற்கும் செவிசாய்க்க நேரம் ஒதுக்காததால், தன் சுயவழிகளை நம்புவது நல்லதல்ல என்பதைக் கண்டுகொண்டான். நம்மை நாம் எப்பொழுதும் சோதித்துப் பார்க்கவும், தேவ ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும் தேவன்தாமே நமக்குத் தாழ்மையைத் தந்து உதவுவாராக.

சுவிசேஷத்திற்காக
1917 ஆம் ஆண்டு தனது 23ம் வயதில் நெல்சன் தனது சொந்த மாநிலமாகிய வெர்ஜீனியாவில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். பிறகு சீனாவில் சுமார் இரண்டு மில்லியன் சீன குடியிருப்புகள் உள்ள ஒரு பகுதியில் "லவ் அண்ட் மெர்சி" என்ற அந்த ஒரே மருத்துவமனையில் புதிய கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அவர் தனது குடும்பத்துடன் 24 வருடங்கள் அப்பகுதியில் வசித்து, அம்மருத்துவமனையை நடத்தி , அறுவை சிகிச்சை செய்தும், ஆயிரக்கணக்கான மக்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்தும் வந்தார். அம்மக்களால் முன்னர் "அயல்நாட்டுப் பிசாசு" என்ற பெயர் பெற்ற அதே நெல்சன் பெல் இப்பொழுது "சீன மக்களை நேசிக்கும் பெல்" என்ற பெயர் பெற்றார். அவரின் மகள்தான் சுவிசேஷகர் பில்லி கிரஹாமின் மனைவி ரூத் ஆவார்.
நெல்சன், திறமையான அறுவை சிகிச்சை நிபுணராகவும், வேதாகம ஆசிரியராக இருந்தாலும், அவருடைய பண்பும், வாழ்க்கை முறையும் தான் அநேக மக்களை இயேசுவிடம் திருப்பியது. புறஜாதியாருக்குத் தலைவனாய் கிரேத்தாவில் உள்ள சபையைக் கண்காணித்துக் கொண்டிருந்த அந்த இளம் தீத்துவுக்கு, பவுல் தனது கடிதத்தில் கிறிஸ்துவைப் போல் வாழ்வது மிகவும் முக்கியம் எனவும், அது சுவிசேஷத்தை அலங்கரிக்கிறதெனவும் குறிப்பிடுகிறார் (தீத்து 2 : 10). ஆனாலும் நாம் நமது சுயபலத்தில் இதைச் செய்வதில்லை. தேவனுடைய கிருபை நம்மை சுயக் கட்டுப்பாட்டோடும், நேர்மையோடும், தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, விசுவாசத்தின் சத்தியத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது (வ 1,12).
நம்மை சுற்றியுள்ள அநேகருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பற்றித் தெரியாது, ஆனால் அவர்களுக்கு நம்மைத் தெரியும். தேவன் தாமே நற்செய்தியை மற்றவர்கள் ஏற்கும் வண்ணம், நாம் பிரதிபலிக்கவும், வெளிப்படுத்தவும் உதவி செய்வாராக.-
