தேவனின் பாதுகாப்பான அன்பு
ஒரு கோடை இரவு, எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பறவைகள் திடீரென்று குழப்பமான ஓசை எழுப்பின. பாட்டுப்பறவைகள் மரங்களில் இருந்து அலறல் ஓசைகளை எழுப்பியது. ஏன் என்பதை தாமதமாகதான் உணர்ந்தோம். சூரியன் மறையும் போது, ஒரு பெரிய பருந்து ஒரு மரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்து வந்தது. மரத்திலிருந்து பறவைகள் ஆவேசத்துடன் சிதறி, அபாயத்திலிருந்து பறந்து செல்லும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பியது.
வேதாகமம் முழுவதும் நம் வாழ்க்கைக்கு தேவையான எச்சரிக்கைகளை விடுக்கிறது. உதாரணமாக, தவறான போதனைகளுக்கு விரோதமான எச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். நாம் கேட்பதை நாம் சந்தேகிக்கக்கூடும். எவ்வாறாயினும், நம் பரலோகத் தகப்பன் நம்மீது அவருக்குள்ள அன்பின் நிமித்தம், அத்தகைய ஆவிக்குரிய ஆபத்துகளை நமக்குத் தெளிவாக்குவதற்கு வேதத்தின் தெளிவைத் தருகிறார்.
இயேசு, “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” (மத்தேயு 7:15) என்று எச்சரிக்கிறார். மேலும், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்... அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (வச. 16-17; 20) என்றும் எச்சரிக்கிறார்.
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (நீதிமொழிகள் 22:3) என்று நமக்கு நினைவுபடுத்துகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் தேவனுடைய பாதுகாக்கும் அன்பு மறைந்திருந்து நமக்கு அவ்வப்போது வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது.
தங்களுக்கு மாம்ச ரீதியாக ஏற்படப்போகிற ஆபத்தைக் குறித்து பறவைகள் ஒன்றையொன்று எச்சரித்ததுபோல, ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்து நம்மை எச்சரிக்கும் வேதத்தின் சத்தியங்களுக்கு நாம் செவிகொடுப்போமாக.
- பாட்ரிசியா ரேபோன்

பாதங்களையும் பாத்திரங்களையும் கழுவுதல்
சார்லி மற்றும் ஜானின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவில், அவர்கள் தங்கள் மகன் ஜானுடன் ஒரு ஓட்டலில் காலை உணவை சாப்பிட்டனர். அன்று உணவகத்தில் ஒரு மேலாளர், சமையல்காரர் மற்றும் ஒரு இளம் தொகுப்பாளினி, பணிப்பெண் மற்றும் பணம் சேகரிக்கும் ஒருவர் என்று வெகு குறைவான பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் காலை உணவை முடித்ததும், சார்லி தனது மனைவி மற்றும் மகனின் பக்கம் திரும்பி, “அடுத்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?” என்று கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.
எனவே மேலாளரின் அனுமதியுடன், சார்லியும் ஜானும் உணவகத்தின் பின்புறத்தில் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினர். ஜான், உணவுகள் சிதறிக்கிடந்த மேசைகளைத் துடைக்கத் தொடங்கினார். ஜானின் கூற்றுப்படி, அன்று நடந்தது உண்மையில் ஆச்சரியப்படும் காரியம் இல்லை. அவனுடைய பெற்றோர், இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய” வந்தார் (மாற்கு 10:45) என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுத்தே வளர்த்திருக்கிறார்கள்.
யோவான் 13ல், கிறிஸ்து தம் சீஷர்களுடன் கடைசியாகப் பகிர்ந்துகொண்ட உணவைப் பற்றி வாசிக்கிறோம். அன்றிரவு, அவர்களின் அழுக்கு கால்களைக் கழுவுவதன் மூலம் தாழ்மையின் ஊழியத்தைக் குறித்து இயேசு அவர்களுக்குக் கற்பித்தார் (வச. 14-15). பன்னிரண்டு பேர்களின் கால்களைக் கழுவும் கீழ்த்தரமான வேலையைச் செய்ய அவர் தயாராக இருந்தால், அவர்களும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்திருக்கக்கூடும்.
நாம் செய்ய வேண்டிய ஊழியங்களின் தன்மை வித்தியாசப்படலாம், ஆனால் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஒருவர் புகழைப்பெறுவதற்காய் இந்த சேவைப் பணியில் ஈடுபடுவதில்லை, மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் நம்முடைய தாழ்மையான, தியாக உருவான தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றனர்.
- சிண்டி ஹெஸ் காஸ்பர்

தேவனை பின்பற்ற கற்றுக்கொள்ளுதல்
“ஒரு சராசரி நபர் வாழ்நாளில் 7,73,618 முடிவுகளை எடுப்பார் என்றும் அதில் 143,262 முடிவுகளுக்காக அவர் வருத்தப்படுகிறார்” என்று ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள் கூறுகிறது. இந்த எண் இலக்க கணக்கு எந்த அளவிற்கு சரி என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற முடிவுகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது உண்மையே. அவை எத்தனை என்று அறியும்போது நாம் ஒருவேளை ஆச்சரியப்படக்கூடும். அதிலும் குறிப்பாய், நமது தேர்வுகள் அனைத்தும் விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கருதும்போது, சில மற்றவைகளைவிட மிக முக்கியமானவைகளாய் தெரியும்போது ஆச்சரியமடையலாம்.
நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த பிறகு, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் புதிய தேசத்தின் விளிம்பில் நிற்கின்றனர். அவர்கள் தேசத்திற்குள் பிரவேசித்த பின்னர், அவர்களின் தலைவனான யோசுவா அவர்களுக்கு ஒரு சவாலான தேர்வை அறிவிக்கிறார்: “கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்” சேவியுங்கள் என்கிறார். “உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை” (யோசுவா 24:14) அகற்றிவிடவும் எச்சரிக்கிறார். மேலும் யோசுவா, “கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்... நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று கூறுகிறார்.
ஒவ்வொரு புதிய நாளையும் நாம் தொடங்கும் போது, பல தீர்மானங்களை நாம் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தேவனை முன்நிறுத்தி நாம் எடுக்கும் தீர்மானங்களில் தேவன் மகிமைப்படுவார். அவருடைய ஆவியானவரின் வல்லமையினாலே, அவரை அனுதினமும் பின்பற்றும் தீர்மானத்தை நாம் எடுக்க பிரயாசப்படுவோம்.
- பில் கிரவுடர்

புவியீர்ப்பு மலை
மர்ம புதிர்களை விடுவிப்பதென்பது என்னையும் சேர்த்து பலரைக் கவர்ந்த ஒன்றாகும். லடாக்கின் லே அருகே உள்ள ஒரு மலையில், வாகனங்கள் கீழ்நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, தானாக மேல்நோக்கிச் செல்கின்றன. "கிராவிட்டி ஹில் (புவியீர்ப்பு மலை)" என்று பிரபலமாக அழைக்கப்படும் இவ்விடத்திற்கு, மக்கள் இது ஒரு மாயத்தோற்றமாக இருக்கலாம் அல்லது மலைக்கு வலுவான காந்தப்புலம் இருக்கலாம் அல்லது நிலப்பரப்புதான் மனதளவில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது என்றெல்லாம் கருதுகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், ஒன்று நிச்சயம், இந்த நிகழ்வு புவியீர்ப்பு விதிகளுக்கு எதிரானது போல் தெரிகிறது. இது ஒரு மர்மம்.
அப்போஸ்தலனாகிய பவுல், அவருடைய காலத்தில் நன்கு அறியப்பட்ட அறிஞராக இருந்தார், அவருடைய உயர்ந்த அறிவு, ஞானம் மற்றும் கல்வி நிலைப்பாட்டை மேன்மையாக எண்ணிட அவருக்கு எல்லா தகுதியும் இருந்தன (வ.1-2). ஆயினும்கூட, அவர் பயத்துடனும் நடுக்கத்துடனும் கொரிந்தியர்களிடம் வந்தார், ஏனெனில் அவர் சாட்சியிட்ட "இரகசியமானது" அவரது அறிவுத் திறனைக் காட்டிலும் உன்னதமானதாக இருந்தது. இந்த "இரகசியம்" மனிதக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்கான தேவனின் புரிந்துகொள்ள முடியாத திட்டமாகும், மேலும் இது அவருடைய குமாரனாகிய இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இதைத் திட்டமிடுவதிலிருந்த தேவஞானம் ஒரு இரகசியமாகும், இது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் (வ.5-10).கிறிஸ்துவை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நாமும் இந்த மாபெரும் "இரகசியத்தின்" ஒரு அங்கமாகி விடுகிறோம். இதைத் தேவனே நமக்குள் ஏற்படுத்துகிறார். தேவனின் ஞானம் பூமிக்குரிய எந்த ஞானத்தையும் விட பெரியது, பரிசுத்த ஆவியானவர் மூலம் அது நமக்குக் கிடைக்கிறது. வாழ்க்கையின் பலவழிச் சாலையில் குடும்பம், நண்பர்கள் அல்லது சகாக்களின் ஞானத்தைச் சார்ந்துகொள்ள நாம் தூண்டப்படுகையில், சகல ஞானத்தின் மூலாதாரமான பரிசுத்த ஆவியானவரை (கொலோசெயர் 1:9) அண்டிக்கொள்வதில் தவறாதிருப்போமாக. ஏனென்றால் மனிதனின் ஞானம் நல்லது, தேவனின் ஞானம் சிறந்தது, அவருடைய பிரசன்னமும் எப்போதும் நம்மோடு உண்டு.
- ரெபேக்கா விஜயன்

பொங்கிப் பொங்கி வழிதல்
மற்ற இடங்களில் லோஹரி என்றும் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடப்படும் பொங்கல் என்ற தமிழ்ப் பண்டிகையின் கலாச்சாரக் கொண்டாட்டத்தை எங்கள் பள்ளியில் அனுபவிக்க, தமிழ் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். அவர்கள் ஒரு பாரம்பரிய அடுப்பை அமைத்து, சிறிய கட்டைகளை எரித்து, அதன்மேல் ஒரு மண் பானையை வைத்து, அதில் அரிசி, சர்க்கரை மற்றும் பாலை வைத்தனர். பானையிலிருந்தவை கொதித்தெழுவதை நாங்கள் பிரமிப்புடன் பார்த்து, குலவிச் சத்தமிட்டோம். ஒவ்வொருவரும் கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வகுப்பிற்குச் சென்றோம். தமிழ்க் கலாச்சாரத்தில், 'பொங்கல்' அதாவது 'நிரம்பி வழிகிறது' என்பது அறுவடையின் மிகுதியைக் குறிக்கிறது.
யோவான் 7, கூடாரப் பண்டிகை எனப்படும் யூதர்களின் பண்டிகையைப் பற்றிப் பேசுகிறது. இந்த பண்டிகையின் கடைசி நாளில், இயேசு எழுந்து நின்று சத்தமாக, "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்" (வ.37) என்றார். அவரை விசுவாசிக்கும் எவருக்கும் அவர்களுடைய "உள்ளத்திலிருந்து" "ஜீவத்தண்ணீருள்ள நதிகள்" ஓடும் (வ.38) என்று அவர் வாக்களித்தார். இயேசு குறிப்பிடும் இந்த ஓடும் நதிகளானது, பின்னர் அனைவர் மீதும் ஊற்றப்படும் வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே (வ.39) என்று எழுத்தாளர் யோவான் விளக்குகிறார். இயேசு மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்றபின், மற்றொரு பண்டிகையான பெந்தெகொஸ்தே நாளில் (அப்போஸ்தலர் 2:1). அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றினார், ஆவியானவரால் நிரம்பி வழிந்த அவருடைய சீஷர்கள் பல்வேறு பாஷைகளில் நற்செய்தியை அறிவித்து, தங்களுக்கு உண்டானவற்றை விருப்பத்துடன் பகிர்ந்துகொண்டு, கரிசனையுள்ள சமுதாயமாக மாறினார்கள் (அப்போஸ்தலர் 2:3,52).
நம்முள்ளிருந்து நம்முடைய ஆவிக்குரிய தாகத்தைத் தணிக்க இயேசுவானவர் தம்முடைய ஆவியை நமக்குத் தந்திருக்கிறார் (யோவான் 7:38-39). ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார், நமக்குச் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறார், மேலும் நிரம்பி வழியும்படி (வ.38) நம்மை நிரப்புகிறார். நாம் நிரப்பப்படுகையில், மற்றவர்களையும் நிரப்ப நாம் நிரம்பி வழிகிறோம்
- ஆன் ஹரிகீர்த்தன்