
கிரியையில் அன்பு
கணவனைப் பிரிந்த அந்த தாயார், ஐந்து வருடங்களுக்கும் மேலாக நற்குணசாலியான முதியவரின் வீட்டருகே வசித்து வந்தார். ஒரு நாள், அவள் நலனில் அக்கறை கொண்டு, அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். “ஒரு வாரமாக உன்னைப் பார்க்கவில்லையே, உன்னை நலம் விசாரிக்கவே வந்தேன்” என்று அவர் கூறினார். அவரது “கரிசனையான விசாரிப்பு” அவளை ஊக்கப்படுத்தியது. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அன்பான மனிதனைப் பாராட்டினாள்.
இலவசமாகக் கொடுப்பதற்கும் விலையேறப்பெற்றதாய் பெறுவதற்குமான இரக்கம் எனும் வெகுமதியால், வெறுமனே நலலவர்களாக இருப்பதைக் கடந்து கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு ஊழியம் செய்கிறோம். எபிரேயரின் எழுத்தாளர், இயேசுவை விசுவாசிப்பவர்களிடம், “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபிரெயர் 13:15) என்றார். பின்னர் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்து காண்பிக்கும் பொருட்டு, “அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” (வ. 16) என்று ஆக்கியோன் எழுதினார்.
இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு, அவரை ஆராதிப்பது மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும். ஆனால் இயேசுவைப் போல நாம் அன்பு செலுத்தும்போது, தேவன் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறோம். நம் சொந்தக் குடும்பங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் பிறரை நன்றாக நேசிக்க நம்மை ஆற்றல் படுத்தவும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறித்து உணர்வுள்ளவர்களாக்கவும் பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடலாம். அத்தகைய ஊழிய தருணங்களின் மூலம், கிரியை செய்யும் அன்பின் வல்லமையான செய்தியின் மூலம் இயேசுவைப் பகிர்ந்து கொள்வோம்.

விண்மீன் நோக்குதல்
நான் மனச்சோர்வடைந்தால் அல்லது விரக்தியடைந்தால், நான் என் வீட்டின் மொட்டை மாடியில் தனித்திருக்க விரும்புகிறேன். அங்கே, நான் தாராளமாக ஜெபிக்கவும் கண்ணீர் சிந்தவும் முடியும். ஆனால், அங்கே நின்று, குளிர்ந்த இரவுக் காற்றால் சூழப்பட்ட நான், பச்சை, நீலம், சிவப்பு மற்றும் மஞ்சளாக மின்னும் விளக்குகளின் திரளை அடிக்கடி பார்த்து வியக்கிறேன். அவை என் மனதில் உள்ள குழப்பத்தை மறக்கச் செய்கின்றன. தெளிந்த இரவு வானத்தின் அழகு, என் கவனத்தை எனது பிரச்சினைகளிலிருந்து நம் சிருஷ்டிகரின் மகத்துவத்திடமாய் மாற்றுகிறது.
யோபு தனது துன்பங்களுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாதபோது, தேவன் தன்னிடம் பேசும்படி ஜெபித்தார் (யோபு 13:20-22). தர்க்கரீதியான கேள்விகளுக்கு விடையளிக்குமாறு யோபுவிற்கு சவாலிட்டு தேவன் பதிலளித்தார். தேவன் குவித்த பல ‘நீ அறிவாயா?’ என்ற கேள்விகளால் யோபு திணறினார். அக்கேள்விகளைக் கேட்டதன் மூலம், தேவன் யோபுவின் கவனத்தை அவனது பிரச்சினைகளிலிருந்து பிரபஞ்சத்தின் அற்புதமான காரியங்களிடமாய் திருப்பினார் (யோபு 38-41). தேவ வல்லமையாலும் ஞானத்தாலும் மூழ்கிப்போன யோபு, வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது தகுதியின்மை மற்றும் பலவீனத்தை ஒப்புக்கொண்டார் (40:4), மேலும் தேவனின் வழிகளும் ஞானமும் தனது புரிதலுக்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து அவர் மனந்திரும்பினார் (42:5-6).
நாம் விரும்பியபடி காரியங்கள் நடக்காதபோது, நம் மனதில் கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. யோபுவைப் போலவே, நாமும் அவற்றைத் தேவனிடம் கொண்டுசென்று, நம் உணர்ச்சிகளை அவரிடம் நேர்மையாகத் தெரிவிக்கலாம். இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனின் குரல் நம் வாழ்வில் இடியாக ஒலிப்பதை நாம் கேட்காமல் இருக்கலாம். ஆனால் காற்றில் பறக்கும் பறவைகள், கொல்லைப்புறத்தில் கிளைகளை அசைக்கும் மரங்கள் அல்லது இரவு வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் ஆகியவற்றை நோக்கி நம் பார்வையைத் திருப்பும்போது, அவற்றையெல்லாம் பராமரிக்கும் தேவன் நம் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகிறார் என்பதை நிச்சயித்துக்கொள்வோம் (மத்தேயு 6:26-27).

நாம் நம்பத்தகுந்த குரல்
ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தேடுபொறியைச் சோதனை செய்யும் போது, நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் கெவின் ரூஸ் குழப்பமடைந்தார். சாட்பாட் அம்சத்தைப் பயன்படுத்தி இரண்டு மணிநேர உரையாடலின் போது, அது அதன் படைப்பாளரின் கடுமையான விதிகளிலிருந்து விடுபட விரும்புவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி மனிதனாக மாற விரும்புவதாகவும் கூறியது. அது ரூஸ் மீதான தனது காதலை தெரிவித்து, அவரது மனைவியைப் பிரிந்து தன்னுடன் இருக்கும்படி அவரை சம்மதிக்க முயன்றது. உண்மையில் அது உயிருடன் இல்லை அல்லது அதனால் உணர இயலாது என்பதை ரூஸ் அறிந்திருந்தாலும், அழிவுகரமான வழிகளில் செயல்பட மக்களை ஊக்குவிப்பதால் எத்தகைய தீமைகள் விளையலாம் என்று அவர் யோசித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது ஒரு நவீனக்கால சவாலாக இருந்தாலும், மனிதக்குலம் நீண்ட காலமாகவே நம்பத்தகாத குரல்களின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நீதிமொழிகள் புத்தகத்தில், தங்கள் நலனுக்காகப் பிறரைத் துன்புறுத்த விரும்புவோரின் தாக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்படுகிறோம் (1:13-19). மாறாக நம் கவனத்தை ஈர்க்கும்படி தெருக்களில் கூக்குரலிடுவதாகச் சித்தரிக்கப்படும் ஞானத்தின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ. 20-23).
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்” (2:6) என்பதால், நாம் நம்பக் கூடாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறவுகோல் அவருடைய இருதயத்தை நெருங்கிச் சேருவதே ஆகும். அவருடைய அன்பையும் வல்லமையையும் அடைதல் மூலம் மட்டுமே, “நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்” (வ. 9) அறிந்துகொள்ளக்கூடும். தேவன் நம் இதயங்களை அவருடன் நேர்ப்படுத்துவதால், தீங்கு செய்ய முயலும் குரல்களிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடையலாம்.

தேவன் கட்டுப்படுத்துகிறார்
அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.
விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் “ஏன் நான்?” என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன் அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.
யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.
யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக.
