
வெற்றி இலக்கு
பிப்ரவரி 5, 2023 அன்று, துருக்கியில் நடந்த ஒரு போட்டியில் கிறிஸ்டியன் அட்ஸ_ தனது கால்பந்து (கால்பந்து) அணிக்கான வெற்றி இலக்கை தொட்டார். ஒரு நட்சத்திர சர்வதேச வீரர், அவர் தனது சொந்த நாடான கானாவில், வெறுங்காலுடன் ஓடும் குழந்தையாக இருந்து விளையாட்டைக் கற்றுக்கொண்டார். கிறிஸ்டியன் இயேசுவின் விசுவாசியாக இருந்தார். “என் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயம் இயேசுவே” என்று அவர் கூறியிருக்கிறார். அட்ஸ_ சமூக ஊடகங்களில் வேதாகமத்தின் வசனங்களை அவ்வப்போது பதிவிட்டார். இயேசுவைக் குறித்து வெளிப்படையாகப் பேசினார். மேலும் ஆதரவற்றோருக்கான பள்ளிக்கு நிதியளிப்பதன் மூலம் அதை செயல்படுத்தினார்.
அவர் வெற்றி இலக்கை அடைந்த மறுநாளே, ஒரு காலத்தில் வேதாகம நகரமாயிருந்த அந்தியோகியா பட்டணத்தில் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்ஸ_வின் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அவர் மரித்து தனது இரட்சகருடன் இருக்கச் சென்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அந்தியோகியா ஆரம்பகால தேவாலயத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்தது: “முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று” (அப்போஸ்தலர் 11:26). அப்போஸ்தலன் பர்னபாஸ், “நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்.” கிறிஸ்துவிடம் மக்களைக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தார்: “அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்” (வச. 24).
கிறிஸ்டியன் அட்ஸ_வின் வாழ்க்கையை நாம் மாதிரியாக்குவதற்காக அல்ல; மாறாக, வாய்ப்பாக பார்க்கிறோம். நம் வாழ்வில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தேவன் நம்மை எப்போது தன்னுடன் அழைத்துச் செல்வார் என்பது நமக்குத் தெரியாது. கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்குக் காட்டுவதில் நாம் எப்படி பர்னபாஸாகவோ அல்லது கிறிஸ்டியன் அட்சுவாகவோ இருக்க முடியும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதுவே வெற்றியின் இலக்கு.

வார்த்தைகளுக்கான பொறுப்பேற்றல்
ஒரு சோகமான நிகழ்வுக்கு பின்னர் நிறுவனங்கள் அந்த குற்றத்தை ஒப்புக்கொள்வது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று. ஆனால் ஒரு பதினேழு வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு புகழ்பெற்ற பள்ளி அவனைப் பாதுகாப்பதில் “துரதிர்ஷ்டவசமாக தவறிவிட்டோம்” என்பதை ஒப்புக்கொண்டது. அந்த மாணவர் இடைவிடாமல் கொடுமைப்படுத்தப்பட்டார். பள்ளித் தலைவர்கள், அவருடைய தவறான சிகிச்சையைப் பற்றி அறிந்திருந்தாலும், அவரைப் பாதுகாக்க சிறிதும் முயற்சிக்கவில்லை. கொடுமைப்படுத்துதலை எதிர்த்துப் போராடுவதற்கும், மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்க பள்ளி நிர்வாகம் தற்;போது உறுதியளித்துள்ளது.
கொடுமைப்படுத்துதலால் ஏற்படும் பாதிப்புகள் என்பது வார்த்தைகளின் வலிமைக்கு அப்பட்டமான உதாரணம். நீதிமொழிகள் புத்தகத்தில், வார்த்தைகளின் தாக்கத்தை ஒருபோதும் இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கற்பிக்கப்படுகிறோம். ஏனென்றால், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” (நீதிமொழிகள் 18:21). நாம் சொல்லுவம் ஒரு வார்த்தை, ஒரு காரியத்தை உயர்த்தலாம் அல்லது நசுக்கலாம். கடுமையான சில வார்த்தைகள் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
நாம் சொல்வதைக் கொண்டு வாழ்வது எப்படி? நம்முடைய வார்த்தைகள் ஞானம் அல்லது மதியீனம் (15:2) என்று வேதம் போதிக்கிறது. ஞானத்தின் உயிரைக் கொடுக்கும் சக்தியின் ஆதாரமான தேவனிடம் நெருங்கி வருவதன் மூலம் நாம் ஞானத்தைக் காண்கிறோம் (3:13, 17-19).
வார்த்தைகள் மற்றும் செயல்களில் - வார்த்தைகளின் தாக்கத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும், மற்றவர்கள் கூறியவற்றால் காயமடைந்தவர்களைக் கவனித்துப் பாதுகாப்பதற்கும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. வார்த்தைகள் கொல்லலாம், ஆனால் இரக்கமுள்ள வார்த்தைகள் குணப்படுத்தலாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு “ஜீவ விருட்சமாய்” (15:4) மாறும்.

உடைக்கும் ஆசீர்வாதம்
அவர் முதுகு கூன் விழுந்து, கைத்தடியுடன் நடக்கிறார். ஆனால் அவருடைய பல ஆண்டுகாலமான மேய்ப்பன்துவம், அவர் தன்னுடைய ஆவிக்குரிய பெலனுக்கு தேவனை சார்ந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாயிருக்கிறது. 1993 ஆம் ஆண்டில், சங்கை. வில்லியம் பார்பர் ஒரு பலவீனப்படுத்தும் நோயால் கண்டறியப்பட்டார். இது முதுகெலும்பின் எலும்புகளை ஒன்றாக இணைக்கிறது. “பார்பர், நீங்கள் போதக ஊழியத்தை விட்டுவிட்டு, வேறு ஏதாகிலும் வேலையை தெரிந்துகொள்ள வேண்டும். உம் போன்ற மாற்றுத் திறனாளியை இந்த சபை போதகராய் ஏற்பதற்கு விரும்பவில்லை” என்று அவரிடத்தில் நுட்பமான விதத்தில் அறிவுறுத்தப்பட்டது. தேவன் அவரை ஒரு போதகராக மட்டும் பயன்படுத்தவில்லை; மாறாக, அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஒரு சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார்.
குறைபாடுகள் உள்ளவர்களை என்ன செய்வது என்று உலகம் முழுவதுமாக அறியாவிட்டாலும், தேவன் அறிந்திருக்கிறார். அழகையும் துணிச்சலையும், பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் மதிப்பவர்கள், அழைக்கப்படாத முறிவுகளுடன் வரும் நன்மையை இழக்க நேரிடும். யாக்கோபின் கேள்வியும் அதன் அடியில் உள்ள கொள்கையும் கருத்தில் கொள்ளத்தக்கது: “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக்கோபு 2:5). உடல்நலம் அல்லது வலிமை அல்லது பிற விஷயங்கள் குறையும் போது, ஒருவரின் நம்பிக்கை அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. தேவனுடைய பெலத்தால், அது எதிர்மாறாக இருக்கலாம். நமது பற்றாக்குறை அவரை நம்புவதற்கு ஒரு ஊக்கியாக இருக்கலாம். இயேசுவைப் போலவே நம்முடைய உடைந்த நிலையைக் கொண்டே உலகத்திற்கு நன்மையைக் கொண்டுவர அவரால் கூடும்.

நம் பெலனை புதுப்பித்தல்
ஒரு ஜோடி கழுகுகள் என் வீட்டில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மரத்தில் ஒரு பெரிய கூடு கட்டின. நீண்ட காலத்திற்கு முன்பே, மகத்தான அந்த கழுகுகளுக்கு குஞ்சுகள் இருந்தன. வயது முதிர்ந்த கழுகுகளில் ஒன்று கார் மோதி பரிதாபமாக இறக்கும் வரை, அவைகள் தங்கள் குஞ்சுகளை இணைத்து பராமரித்தது. பல நாட்களாக, உயிரோடிருந்த அந்த கழுகு, தொலைந்து போன துணையைத் தேடுவது போல், அருகில் உள்ள ஆற்றில் ஏறி இறங்கி பறந்தது. இறுதியாக, தன் கூட்டிற்குத் திரும்பி, தன்னுடைய சந்ததிகளை தொடர்ந்து வளர்க்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.
எந்தவொரு சூழ்நிலையும் ஒற்றை பெற்றோருக்கு சவாலாகவே இருக்கலாம். ஆனால் தன்னுடைய குழந்தை கொண்டுவரும் பொருளாதார ரீதியான மற்றும் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியானது பரந்த அளவிலான அனுபவங்களை உருவாக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலைகளில் வாழ்பவர்களும், அல்லது தங்களை மேற்கொள்ளக்கூடிய பல சூழ்நிலைகளை சமாளிப்பவர்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது.
நாம் சோர்வாகவும் பெலவீனமாகவும் உணரும்போது தேவன் நம்முடன் இருக்கிறார். அவர் சர்வ வல்லமையுள்ளவர்; அனைத்து வல்லமையும் உடையவர்; மாறாதவர். அவருடைய பெலன் ஒருபோதும் குன்றிப்போவதில்லை. வேதம் சொல்வதை நாம் நம்பலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடை(வார்கள்)” (ஏசாயா 40:31). நம்முடைய வரம்புகளுக்கு அப்பாற்பட்டு நடக்கிற யாவும் நமக்கு எதிர்த்து நிற்பதில்லை. ஏனென்றால், இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் நம்மை தகுதிப்படுத்தும் தேவனை நாம் சார்ந்து செயல்படுகிறோம். அவர் மீது நம்பிக்கை வைப்பது நம்மை தொடர்ந்து நடக்கவும், பெலவீனமடையாமல் இருக்கவும், “கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து” எழும்பவும் நம்மை அனுமதிக்கிறது (வச. 31).
