கண்ணீரிலுள்ள ஆசீர்வாதங்கள்
இங்கிலாந்தில் உள்ள ஒரு இளைஞரிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது, அவரது தந்தை (அறுபத்து மூன்று வயது மட்டுமே) ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக அந்த மகன் விளக்கினார். நாங்கள் சந்திக்கவில்லை என்றாலும், அவருடைய அப்பாவின் வேலையும் என்னுடைய வேலையும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன. மகன், தன் தந்தையை உற்சாகப்படுத்த முயன்று, ஊக்கமூட்டும் செய்தி மற்றும் ஜெபத்துடன் ஒரு காணொளியை அனுப்பச் சொன்னார். ஆழ்ந்த உணர்ச்சியுடன், நான் ஒரு சிறு செய்தியையும், குணமடைய ஒரு ஜெபத்தையும் பதிவு செய்தேன். அவருடைய அப்பா அந்த காணொளியைப் பார்த்து உற்சாகமடைந்தார் என்று என்னிடம் கூறப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் இறந்துவிட்டார் என்று எனக்கு மற்றொரு மின்னஞ்சல் வந்தது. அவர் தம் மனைவியின் கையைப் பிடித்தவாறே தம் இறுதி மூச்சை விட்டார்.
என் இதயம் உடைந்தது. அத்தகைய அன்பு, அத்தகைய இழப்பு. அந்த குடும்பம் மிக விரைவில் கணவனையும் தந்தையையும் இழந்தது. ஆயினும், துக்கப்படுபவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று இயேசு வலியுறுத்துவதைக் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது: "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:4). இயேசு துன்பமும் துக்கமும் நல்லது என்று சொல்லவில்லை, மாறாக, தேவனின் கிருபையும் கருணையும் மிகவும் தேவைப்படுபவர்கள் மீது ஊற்றப்படுகிறதாகச் சொல்கிறார். மரணம் அல்லது தங்கள் சொந்த பாவத்தால் நிலைகுலைந்து போகிறவர்களுக்குத் தேவனின் கண்காணிப்பும் ஆறுதலும் மிகவும் தேவை. "அவர்கள் ஆறுதலடைவார்கள்" (வச. 4) என்று நமக்கு வாக்களிக்கிறார்.
தேவன் தம்முடைய அன்பான பிள்ளைகளாகிய நம்மை நோக்கி அடியெடுத்து வைக்கிறார் (வ. 9). அவர் நம் கண்ணீரில் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அக்கினி தழல் போன்ற நேசம்
கவிஞர், ஓவியர் மற்றும் அச்சுத் தயாரிப்பாளருமான வில்லியம் பிளேக் தனது மனைவி கேத்ரினுடன் நாற்பத்தைந்து வருட திருமண வாழ்க்கையை அனுபவித்தார். அவர்களது திருமண நாள் முதல் 1827 இல் அவர் இறக்கும் வரை, அவர்கள் அருகருகே அமர்ந்திருந்து வேலை செய்தனர். கேத்ரின் வில்லியமின் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுவார். அவர்கள் வறுமை மற்றும் பல வாழ்க்கை சவால்களையும் இணைந்தே மேற்கொண்டுள்ளனர். அவரது மரணமடைந்த கடைசி வாரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், பிளேக் தனது ஓவியத்தில் மும்முரமாய் இருந்தார். அவர் தீட்டிய கடைசி ஓவியம், அவருடைய மனைவியின் முகமே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கேத்ரின் தனது கணவரின் பென்சில் ஒன்றைக் கையில் பிடித்தபடி இறந்திருந்தார்.
பிளேக்ஸின் இந்த துடிப்பான காதலானது உன்னதப்பாட்டு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நேசத்தை பிரதிபலிக்கிறது. இந்த பாடல்கள் திருமணத்தின் தாக்கத்தை வலியுறுத்தக்கூடியது. ஆதித்திருச்சபை விசுவாசிகள், இது இயேசுவை பின்பற்றுகிறவர்கள் மீது அவருடைய தணிக்கமுடியாத அன்பு என்றும் வியாக்கியானம் செய்தனர். “நேசம் மரணத்தைப்போல் வலிது” (8:6) என்று உன்னதப்பாட்டு உருவகப்படுத்துகிறது. மரணம் என்பது கடைசியும் தப்பிக்கமுடியாததுமான ஒன்றாய் இருப்பதுபோல நேசமும் இருக்கிறது. இந்த நேசத்தின் தழல் “அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது” (வச. 6). மற்ற அக்கினித் தழலைப்போன்று, இதை எளிதில் அணைக்கமுடியாது. “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது” என்று இந்த நேசத்தின் வலிமை வலியுறுத்தப்படுகிறது (வச. 7).
நம்மில் யார் தான் உண்மையான நேசத்தை விரும்பமாட்டார்கள்? நாம் உண்மையான நேசத்தை எதிர்பார்க்கும்போதெல்லாம், தேவனிடத்தில் வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் ஆழமான தணியாத அன்பை பெறமுடியும். அதின் தழல் அக்கினி தழல் போன்று வலியது.
வலிமையாக நிரைவேற்றுதல்
இந்தியாவின் முதுமையான தடகள வீராங்கனையாக மன் கவுர் என்ற பெண் தனது 103 ஆம் வயதில், போலந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள பட்டய போட்டியில் பங்கேற்றார். வியப்பூட்டும்விதமாக ஈட்டி எறிதல், குண்டெறிதல், 60 மீட்டர் விரைவோட்டம், 200 மீட்டர் ஓட்டம் என நான்கு பிரிவுகளில், கவுர் தங்கம் வென்றார். அதிலும் ஆச்சரியமானது, தான் 2017 ஆம் ஆண்டில் ஓடினதைக் காட்டிலும் விரைவாக ஓடியிருந்தார். கவுர் ஒரு கொள்ளுப்பாட்டியாகத் தனது இரண்டாம் நூற்றாண்டில் ஓடியது, எவ்வாறு சிறப்பாக முடிக்க வேண்டுமென்பதைக் காட்டியது.
அப்போஸ்தலன் பவுலும், இளைய சீடனாகிய தீமோத்தேயுவுக்கு, தன்னுடைய வாழ்வின் இறுதி நாட்களுக்குள் வந்திருப்பதை எழுதினார். "நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது." (2 தீமோத்தேயு 4:6) என்று எழுதினார். பவுல், "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்" (வ.7) என்றார். தமது வியத்தகு சாதனைகளைக் கருத்தில்கொண்டோ, தான் ஏற்படுத்திய அகன்ற தாக்கத்தை எண்ணியோ (அவை ஆச்சரியமானவைதான்) அவருக்கு இத்தகைய நம்பிக்கை வரவில்லை. மாறாக, அவர் தனது விசுவாசத்தைக் காத்துக்கொண்டதை (வ.7) அறிந்திருந்தார். இந்த அப்போஸ்தலன், இயேசுவுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். இன்பதுன்பங்களின் மத்தியிலும் தம்மை அழிவினின்று மீட்டவரைப் பின்பற்றினார். தனது உண்மையுள்ள வாழ்வைக் கௌரவப்படுத்தும் விதமாக, "நீதியின் கிரீடத்தோடு" (வ.8) இயேசு ஆயத்தமாய் நின்றுகொண்டிருப்பதை அறிந்திருந்தார்.
பவுல், இந்த கிரீடம் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்று சொல்லாமல் , "அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." (வ.8) என்று வலியுறுத்துகிறார். ஒரு புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கும் நாமும்கூட, தம்மை நேசிக்கும் அனைவருக்கும் கிரீடமளிக்க ஆவலாய் இயேசு நிற்பதை நினைவில்கொள்வோம். சிறப்பாக ஓட்டத்தை முடிக்க வாழ்வோம்.
நம்முடைய எதிர்காலத்திற்காய் தேவனை நம்புதல்
2010 ஆம் ஆண்டில், லஸ்லோ ஹன்யெஸ், பிட்காயினுடன் முதல் கொள்முதல் செய்தார் (ஒரு டிஜிட்டல் நாணயம் பின்னர் ஒவ்வொன்றும் ஒரு பைசாவின் ஒரு பகுதி மதிப்புடையது). இரண்டு பீட்;ஸா உணவுக்கு 10,000 பிட்காயின்கள் செலுத்தப்பட்டது (25டாலர் - அப்போது சுமார் ரூ.1,125). 2021 ஆம் ஆண்டின் மிக உயர்ந்த மதிப்பில், பிட்காயின்களின் முந்தின மதிப்பை விட (சுமார் ரூ.3,900 கோடி) அதிகமாக இருந்திருக்கும். மதிப்பு உயரும் முன், அவர் பீட்சாக்களுக்கு நாணயங்களுடன் பணம் செலுத்தி, மொத்தம் 100,000 பிட்காயின்களை செலவு செய்தார். அவர் அந்த பிட்காயின்களை செலவு செய்யாமல் வைத்திருந்தால், அவற்றின் மதிப்பு அவரை அறுபத்தெட்டு மடங்கு கோடீஸ்வரராக்கி, அவரை “உலகின் பணக்காரர்கள்” பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் முன்னமே அறிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
லஸ்லோ நிச்சயமாக அதை அறிந்திருக்க முடியாது. எதிர்காலத்தை யாராலும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து அதைக் கட்டுப்படுத்த நாம் முயற்சிக்கும்போது, “நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்” (10:14) என்று பிரசங்கி எச்சரிக்கிறார். மற்றொரு நபரின் வாழ்க்கையைக் குறித்து, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய சில நுண்ணிய வெளிப்பாடு தம்மிடம் இருப்பதாக சிலர் எண்ணிக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர். ஆனால் பிரசங்கியோ, “தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?” (வச. 14) என்று கேட்கிறார். யாருமேயில்லை!
வேதம், ஞானியையும் மதியீனனையும் வேறுபடுத்துகிறது. இருவருக்கும் இடையே உள்ள பல வேறுபாடுகளில் ஒன்று, எதிர்காலத்தைப் பற்றிய மனத்தாழ்மை (நீதிமொழிகள் 27:1). தீர்மானம் எடுக்கும்போது, தேவன் மட்டுமே அனைத்தையும் அறிவார் என்னும் மனநிலையிலேயே ஞானி ஒரு தீர்மானத்தை எடுக்கிறான். ஆனால் மதியீனர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத அறிவை நாடுகிறார்கள். நம்முடைய எதிர்காலம் அறிந்த ஒரே தேவனை நாம் விசுவாசிக்கும் ஞானத்தை தேவனிடத்தில் நாடுவோம்.
வித்தியாசமான எதிர்காலத்தைப் பார்த்தல்
அமெரிக்காவின் நியோடெஷா என்னும் பகுதியில் முந்நூறு பள்ளி மாணவர்கள், திடீரென்று அசெம்பிளிக்கு வரவழைக்கப்பட்டனர். அந்த ஊரில் வசித்த ஒரு தம்பதியினர் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் படிப்பு கட்டணத்தைச் செலுத்துவதாகத் தீர்மானித்திருப்பதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியத்தில் திளைத்தனர். மாணவர்கள் வியப்பில் ஆழ்த்தப்பட்டு, மகிழ்ச்சியடைந்து கண்ணீர் சிந்தினர்.
நியோடெஷா, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி. அதில் வசிக்கும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தொகையை செலுத்துவதற்கும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு இந்த உதவி பெரிய ஆதரவாக இருக்கும் என்றும், வெளி மாகாணங்களில் வசிக்கும் பல்வேறு மக்கள் இந்த பகுதிக்கு இடம்பெயர்வதற்கும் இந்த முயற்சி ஆதரவாயிருக்கும் என்றும் அந்த தம்பதியினர் நம்பினர். அவர்களின் இந்த தாராள மனப்பான்மை, அங்கு வசிக்கும் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், புதிய வாழ்வாதாரங்கள் மற்றும் புதிய எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று அந்த தம்பதியினர் நம்பினர்.
தேவனும், தன்னுடைய மக்கள் தங்களுடைய சுய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதில் நிறைவடைகிறவர்களாய் இல்லாமல், மற்றவர்களின் தேவைகளுக்கு உதாரத்துவமாய் செயல்படுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். தேவனுடைய வழிகாட்டுதல் தெளிவாய் உள்ளது: “உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்” (லேவியராகமம் 25:35). நம்முடைய தாராள குணம் அவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதாக மட்டும் இல்லாமல், அவர்களின் எதிர்காலத்திற்கு ஆதாயமாய் இருக்கவேண்டும். “அவனை ஆதரிக்கவேண்டும்... அவன் உன்னோடே பிழைப்பானாக” (வச.35) என்று தேவன் சொல்லுகிறார்.
உதாரத்துவமாய் கொடுத்தல் என்பது வித்தியாசமான எதிர்காலத்தைப் பார்க்கச் செய்கிறது. தேவனுடைய உதாரத்துவமான தயாள குணமானது, நாம் ஒன்றுக்கும் குறைவில்லாமல் நிறைவாய் மகிழ்ச்சியோடு வாழும் எதிர்காலத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது.
கசப்பிற்குப் பதிலாக கருணை
செப்டம்பர் 11, 2001, அன்று உலக வணிக மையம் தகர்க்கப்பட்டபோது, அதின் இடர்பாடுகளில் சிக்கி மரித்தவர்களில், கிரெக் ரோட்ரிக்சும் ஒருவர். அவர் தாயார் பிலிசும், அவர் அப்பாவும், தங்கள் மகனுக்காக வேதனைப்பட்டிருந்தாலும், அந்தக் கொடூரமான தாக்குதலுக்கு தங்கள் பதிலை கவனமாகத் தெரிந்தெடுத்தனர். தீவிரவாதிகளுக்கு உதவியவர்களில் ஒருவரின் தாயான, ஐக்கா எல் வபெவை பிலிஸ் சந்தித்தார். பிலிஸ் "நான் அவரை அணுகி, என் கரங்களை விரித்தேன். நாங்கள் தழுவியவாறே அழுதோம். எங்கள் இருவருக்கும் உடனடியாக ஒரு பிணைப்பு உண்டானது. எங்கள் மகன்களுக்காக நாங்கள் இருவருமே வருந்தினோம்" என்றார்.
இரு தாய்மார்களும் சந்தித்ததில் வலியும், வேதனையும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. தன் மகனுடைய மரணத்திற்காக ஆத்திரம் கொள்வது சரியென்றாலும் கூட, அவருடைய வேதனையை அது ஆற்றாது என கிரெக் ரோட்ரிக்சின் தாயார் புரிந்திருந்தார். மற்ற தாயாரின் குடும்பப் பின்னணியத்தை அறிந்தபோது, இவருக்குக் கருணைதான் உண்டானது. எனவே விரோதியாகப் பார்க்கும் எண்ணத்தை எளிதாக மேற்கொண்டார். இவருக்கு நீதி வேண்டும்தான், ஆனால் நமக்குத் தவறிழைக்கப்படும்போது பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தை விடவேண்டும் என்பதை அந்தத் தாயார் உறுதியாய் நம்பினார்.
அப்போஸ்தலன் பவுலும் இந்த உறுதிப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு, "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது." (எபேசியர் 4:31) என்று நம்மை அறிவுறுத்துகிறார். நம்மை அழிக்கக்கூடிய இத்தகைய குணங்களை நாம் விடுகையில், தேவ ஆவியானவர் நமக்கு புதிய கண்ணோட்டத்தைத் தருவார். ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருங்கள் (வ.32) என்று பவுல் கூறுகிறார். பழிவாங்குவதைத் தவிர்க்கும் அதேநேரம் அந்தத் தவற்றைச் சரிசெய்யவும் நாம் முயலலாம். கசப்பை மேற்கொள்ளும் மனதுருக்கத்தை வெளிக்காட்ட ஆவியானவர் நமக்கு உதவுவாராக.
சரியான பாதையைக் கண்டறிதல்
பதினாறு வயது நிரம்பிய பிரேசில் தேசத்தின் ஸ்கேட்போர்ட் விளையாட்டு வீரர் பெலிப் கஸ்டாவோ, “உலகத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கேட்போர்ட் வீரர்களில் ஒருவராக” மாறுவார் என யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அவனுடைய தந்தை, தன்னுடைய மகன் சறுக்குப் பலகை விளையாட்டை முறையாய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கான பணம் இல்லை, ஆகையால் அவர் தன்னுடைய காரை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துச் சென்றார். கஸ்டாவோ வெற்றிபெறும் வரை யாருக்கும் அவனைப்பற்றித் தெரியாது. அவன் பெற்ற வெற்றி அவனுக்கு ஒரு பிரமாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
கஸ்டாவோவின் தகப்பனுக்கு அவர் மகனுடைய இருதயத்தையும் ஆர்வத்தையும் கண்டுபிடிக்கும் திறன் இருந்தது. கஸ்டாவோ சொல்லும்போது, “நான் தகப்பனாய் மாறும்போது, என் தகப்பன் எனக்கு செய்ததில் 5 சதவிகிதமாவது செய்ய விரும்புகிறேன்” என்று சொன்னான்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆர்வம், ஆற்றல் மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைக் கண்டுபிடித்து, தேவன் அவர்களை எதற்காய் ஏற்படுத்தியிருக்கிறார் எனும் பாதைக்கு நேராய் அவர்களை வழிநடத்தும்படி நீதிமொழிகள் ஆலோசனை கூறுகிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நமக்குத் தெளிவான அல்லது தீர்க்கமான அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவ ஞானத்தோடும் (17–21) நம்முடைய கரிசனையோடும், நம் பிள்ளைகளுக்கு பெரிய பரிசை நம்மால் கொடுக்கமுடியும். அவர்கள் தேவனை நம்புவதற்கான பாதையையும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாய் நடக்கக்கூடிய எதிர்காலத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உதவலாம் (3:5-6).
வீடு முழுவதும்
ஜேம்ஸ், தனது மேல் அங்கியை அணிந்துகொண்டு, சிறைச்சாலையின் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மின் அருகில் நடந்து, தற்காலிகமாய் ஏற்படுத்தப்பட்டிருந்த குளத்தில் இறங்கினார். அங்கு அவன் சிறைச்சாலை போதகரால் ஞானஸ்நானம் பெற்றார். அவரோடு சிறைச்சாலையில் இருக்கும் அவரது மகளான பிரிட்டனியும் அதே நாளில், அதே தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றாள் என்பதைக் கேள்விப்பட்டபோது, ஜேம்ஸ் மகிழ்ச்சியடைந்தார். என்ன நடந்தது என்பதை உணர்ந்ததும், அங்கேயிருந்த சிறை ஊழியர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டனர். “அங்கே ஒரு கண் கூட கலங்காமல் இல்லை,” என்று போதகர் கூறினார். பல ஆண்டுகளாக சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயுமாக இருந்த, பிரிட்டானி மற்றும் அவரது அப்பா இருவரும் தேவனின் மன்னிப்பை விரும்பினர். தேவன் அவர்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுத்தார்.
மற்றொரு சிறைச்சாலை சந்திப்பை வேதம் விவரிக்கிறது. இந்த முறை இயேசுவின் அன்பு, சிறை அதிகாரியின் முழு குடும்பத்தையும் மாற்றியது. ஒரு பயங்கரமான நிலநடுக்கம் சிறைச்சாலையை உலுக்கிய பிறகு, “கதவுகளெல்லாம் திறவுண்டது.” பவுலும் சீலாவும் ஓடவில்லை, ஆனால் அவர்களது அறையிலேயே இருந்தனர் (அப்போஸ்தலர் 16:26-28). சிறைச்சாலைக்காரன், அவர்கள் தப்பியோடவில்லை என்ற நன்றியுணர்வுடன், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, இறுதியில் அவனுடைய வாழ்க்கையை மாற்றும் அந்த கேள்வியைக் கேட்டான்: “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” (வச. 30).
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (வச. 31) என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நீயும் உன் வீட்டாரும்” என்ற பதிலானது, தனிநபர்கள் மீது மட்டுமல்ல, முழு குடும்பத்தின் மீதும் இரக்கத்தைப் பொழிவதற்கு தேவனின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. தேவனின் அன்பை எதிர்கொண்டு, “தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்” (வச. 34). நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்புக்காக நாம் அடிக்கடி ஆர்வமாக இருந்தாலும், தேவன் நம்மை விட அதிகமாக அவர்களை நேசிக்கிறார் என்று நம்பலாம். அவர் நம் அனைவரையும், நம் முழு வீட்டையும் புதுப்பிக்க விரும்புகிறார்.
ஒருவரையொருவர் கண்காணித்தல்
ஜானகி, கோவையில் உள்ள கிராமம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 14 வயதில் திருமணமான கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைகளைக் குறித்த பாகுபாடு காரணமாக, அவரது குடும்பத்தினர் குழந்தையை அருகிலுள்ள ஆற்றில் போட்டுவிட விரும்பினர். குடும்பத்தாரின் கொடூர எண்ணத்தை அறிந்த ஜானகி, குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, மறைமுகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். தாய்க்கு தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் வேலைகளை தனது சொந்த வீட்டில் ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்களும் ஜானகியின் குடும்பத்தில் ஒரு அங்கமாய் மாறிவிட்டனர். ஜானகி அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதின் எதிர்காலத்தில் அது ஒரு மருத்துவராய் மாறுவதற்கும் உதவினார்.
ஒருவருக்கொருவர் இரக்கம் செய்யும்படிக்கு, வேதம் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்தினாலும், சில சமயங்களில் நம்முடைய சொந்த கவலைகளை கடந்து செல்வது கடினம். தேவனை ஆராதிக்காமலும் பிறருக்கு சேவை செய்யாமலும், புசித்து குடித்து மகிழ்ந்திருந்த (சகரியா 7:6) இஸ்ரவேலை, சகரியா தீர்க்கதரிசி கண்டித்தார். தங்களுடைய உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதை புறக்கணித்து, மற்றவர்களுடைய தேவையை பொருட்படுத்த தவறினர். சகரியா, “நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும்,” (வச. 9-10) இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
நம் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது இயல்பு என்றாலும், மற்றவர்களின் தேவைகளை பொருட்படுத்தும்படிக்கு நம்முடைய விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. தேவனிடத்தில் அநேக ஆஸ்திகள் இருக்கிறது. அந்த நிறைவில் சிலவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைப் பயன்படுத்துகிறார்.