சரியான பாதையைக் கண்டறிதல்
பதினாறு வயது நிரம்பிய பிரேசில் தேசத்தின் ஸ்கேட்போர்ட் விளையாட்டு வீரர் பெலிப் கஸ்டாவோ, “உலகத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கேட்போர்ட் வீரர்களில் ஒருவராக” மாறுவார் என யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அவனுடைய தந்தை, தன்னுடைய மகன் சறுக்குப் பலகை விளையாட்டை முறையாய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கான பணம் இல்லை, ஆகையால் அவர் தன்னுடைய காரை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துச் சென்றார். கஸ்டாவோ வெற்றிபெறும் வரை யாருக்கும் அவனைப்பற்றித் தெரியாது. அவன் பெற்ற வெற்றி அவனுக்கு ஒரு பிரமாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
கஸ்டாவோவின் தகப்பனுக்கு அவர் மகனுடைய இருதயத்தையும் ஆர்வத்தையும் கண்டுபிடிக்கும் திறன் இருந்தது. கஸ்டாவோ சொல்லும்போது, “நான் தகப்பனாய் மாறும்போது, என் தகப்பன் எனக்கு செய்ததில் 5 சதவிகிதமாவது செய்ய விரும்புகிறேன்” என்று சொன்னான்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆர்வம், ஆற்றல் மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைக் கண்டுபிடித்து, தேவன் அவர்களை எதற்காய் ஏற்படுத்தியிருக்கிறார் எனும் பாதைக்கு நேராய் அவர்களை வழிநடத்தும்படி நீதிமொழிகள் ஆலோசனை கூறுகிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நமக்குத் தெளிவான அல்லது தீர்க்கமான அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவ ஞானத்தோடும் (17–21) நம்முடைய கரிசனையோடும், நம் பிள்ளைகளுக்கு பெரிய பரிசை நம்மால் கொடுக்கமுடியும். அவர்கள் தேவனை நம்புவதற்கான பாதையையும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாய் நடக்கக்கூடிய எதிர்காலத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உதவலாம் (3:5-6).
வீடு முழுவதும்
ஜேம்ஸ், தனது மேல் அங்கியை அணிந்துகொண்டு, சிறைச்சாலையின் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மின் அருகில் நடந்து, தற்காலிகமாய் ஏற்படுத்தப்பட்டிருந்த குளத்தில் இறங்கினார். அங்கு அவன் சிறைச்சாலை போதகரால் ஞானஸ்நானம் பெற்றார். அவரோடு சிறைச்சாலையில் இருக்கும் அவரது மகளான பிரிட்டனியும் அதே நாளில், அதே தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றாள் என்பதைக் கேள்விப்பட்டபோது, ஜேம்ஸ் மகிழ்ச்சியடைந்தார். என்ன நடந்தது என்பதை உணர்ந்ததும், அங்கேயிருந்த சிறை ஊழியர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டனர். “அங்கே ஒரு கண் கூட கலங்காமல் இல்லை,” என்று போதகர் கூறினார். பல ஆண்டுகளாக சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயுமாக இருந்த, பிரிட்டானி மற்றும் அவரது அப்பா இருவரும் தேவனின் மன்னிப்பை விரும்பினர். தேவன் அவர்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுத்தார்.
மற்றொரு சிறைச்சாலை சந்திப்பை வேதம் விவரிக்கிறது. இந்த முறை இயேசுவின் அன்பு, சிறை அதிகாரியின் முழு குடும்பத்தையும் மாற்றியது. ஒரு பயங்கரமான நிலநடுக்கம் சிறைச்சாலையை உலுக்கிய பிறகு, “கதவுகளெல்லாம் திறவுண்டது.” பவுலும் சீலாவும் ஓடவில்லை, ஆனால் அவர்களது அறையிலேயே இருந்தனர் (அப்போஸ்தலர் 16:26-28). சிறைச்சாலைக்காரன், அவர்கள் தப்பியோடவில்லை என்ற நன்றியுணர்வுடன், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, இறுதியில் அவனுடைய வாழ்க்கையை மாற்றும் அந்த கேள்வியைக் கேட்டான்: “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” (வச. 30).
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (வச. 31) என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நீயும் உன் வீட்டாரும்” என்ற பதிலானது, தனிநபர்கள் மீது மட்டுமல்ல, முழு குடும்பத்தின் மீதும் இரக்கத்தைப் பொழிவதற்கு தேவனின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. தேவனின் அன்பை எதிர்கொண்டு, “தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்” (வச. 34). நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்புக்காக நாம் அடிக்கடி ஆர்வமாக இருந்தாலும், தேவன் நம்மை விட அதிகமாக அவர்களை நேசிக்கிறார் என்று நம்பலாம். அவர் நம் அனைவரையும், நம் முழு வீட்டையும் புதுப்பிக்க விரும்புகிறார்.
ஒருவரையொருவர் கண்காணித்தல்
ஜானகி, கோவையில் உள்ள கிராமம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 14 வயதில் திருமணமான கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைகளைக் குறித்த பாகுபாடு காரணமாக, அவரது குடும்பத்தினர் குழந்தையை அருகிலுள்ள ஆற்றில் போட்டுவிட விரும்பினர். குடும்பத்தாரின் கொடூர எண்ணத்தை அறிந்த ஜானகி, குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, மறைமுகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். தாய்க்கு தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் வேலைகளை தனது சொந்த வீட்டில் ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்களும் ஜானகியின் குடும்பத்தில் ஒரு அங்கமாய் மாறிவிட்டனர். ஜானகி அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதின் எதிர்காலத்தில் அது ஒரு மருத்துவராய் மாறுவதற்கும் உதவினார்.
ஒருவருக்கொருவர் இரக்கம் செய்யும்படிக்கு, வேதம் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்தினாலும், சில சமயங்களில் நம்முடைய சொந்த கவலைகளை கடந்து செல்வது கடினம். தேவனை ஆராதிக்காமலும் பிறருக்கு சேவை செய்யாமலும், புசித்து குடித்து மகிழ்ந்திருந்த (சகரியா 7:6) இஸ்ரவேலை, சகரியா தீர்க்கதரிசி கண்டித்தார். தங்களுடைய உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதை புறக்கணித்து, மற்றவர்களுடைய தேவையை பொருட்படுத்த தவறினர். சகரியா, “நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும்,” (வச. 9-10) இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
நம் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது இயல்பு என்றாலும், மற்றவர்களின் தேவைகளை பொருட்படுத்தும்படிக்கு நம்முடைய விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. தேவனிடத்தில் அநேக ஆஸ்திகள் இருக்கிறது. அந்த நிறைவில் சிலவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைப் பயன்படுத்துகிறார்.
திக்கற்ற நிலை இனி இல்லை
குடும்பம் குழந்தைகள் இல்லாத தனியாளாக இருந்த கை பிரையன்ட், நியூயார்க் நகரத்தின் குழந்தைகள் நலத் துறையில் பணியாற்றினார். ஒவ்வொரு நாளும் வளர்ப்பு பெற்றோர்களுக்கான தேவை அதிகம் என்பதை உணர்ந்த அவர் ஓர் தீர்மானத்தை எடுத்தார். கடந்த பத்து ஆண்டுகளில், பிரையன்ட் ஏறத்தாழ ஐம்பதிற்கும் அதிகமான குழந்தைகளை பராமரித்திருக்கிறார். ஒரே தருணத்தில் ஒன்பது குழந்தைகளை பராமரிக்கவும் நேரிட்டது. “ஒவ்வொரு முறை நான் பின்னால் திரும்பிப்பார்க்கும்போது ஒரு குழந்தை தங்குவதற்கு இடமில்லாமல் இருப்பதை நான் காண்கிறேன்” என்று பிரையன்ட் கூறுகிறார். “உங்கள் இருதயத்திலும் வீட்டிலும் இடமிருந்தால், நீங்களும் அதைச் செய்யுங்கள். நீங்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.” பிரையன்ட்டால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள், வளர்ந்து தங்களுக்கான வாழ்க்கையை தேடிக்கொண்ட போதிலும், அவர்களிடத்தில் பிரையன்ட் வசிக்கும் வீட்டின் ஒரு சாவி இருக்கும். அவர்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் அவர்களுடைய தகப்பனை நேரில் சந்தித்து, உணவருந்தி செல்வது வழக்கம். ஒரு தகப்பனுடைய அன்பை பிரையன்ட் பலருக்குக் காண்பித்திருக்கிறார்.
மறக்கப்பட்ட அல்லது ஒதுக்கிவைக்கப்பட்ட அனைவரையும் தேவன் நேசிக்கிறார் என்று வேதம் கூறுகிறது. தங்களை ஆதரவற்றவர்களாகவும் பெலவீனமுள்ளவர்களாகவும் காணும் விசுவாசிகளோடும் தேவன் இருப்பதாக வாக்குப்பண்ணுகிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு தேவன் தகப்பனாயிருக்கிறார்” (சங்கீதம் 68:5). நாம் ஒதுக்கப்பட்டவர்களாய் சோர்ந்துபோய் தனிமையாய் உணர்வோமாகில், நம்மை அணுகி, நம்மை அவரிடம் சேர்த்துக்கொண்டு, நம்பிக்கையை அருளும் தேவன் நம்மோடிருக்கிறார். “தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல்” (வச. 6) ஏற்படுத்துகிறவராய் தன்னை அடையாளப்படுத்துகிறார். மற்ற விசுவாசிகளும் நம்முடைய கிறிஸ்துவின் குடும்பத்தில் அங்கத்தினராயிருக்கிறார்கள்.
தனிமை, புறக்கணிப்பு, உறவு விரிசல்கள் என்று நம்முடைய குடும்பப் பிரச்சனை எதுவாயினும், நாம் நேசிக்கிப்படுகிறவர்கள் என்பதை நாம் அறியலாம். கிறிஸ்துவில் நாம் தகப்பனில்லாத திக்கற்ற பிள்ளைகள் அல்ல.
முழு உலகத்திற்கும் சுகம்
இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் பல அலுவலர்களைக் கொண்ட ஒரு மருத்துவ அமைப்பு (ப்ரான்ஜா பார்டிசன் மருத்துவமனை), நாசிச கிளர்ச்சியாளர்களுக்கு மறைவாக, மேற்கு ஸ்லோவேனியாவின் ஒரு வனப்பகுதியில் மறைந்து செயல்பட்டனர். அதைக் கண்டுபிடிக்க நாசிச அமைப்பினர் ஏறெடுத்த பல முயற்சிகள் வீணாய் போனது. அவர்களின் கண்களுக்கு மறைந்து செயல்பட்டதே பெரிய சாதனை. அதை பார்க்கிலும் பெரிதானது, நேச நாடுகளிலிருந்தும், எதிரி நாடுகளிலிருந்தும் காயப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களையும் அந்த அமைப்பு பராமரித்தது தான். அந்த மருத்துவமனை அனைவரையும் வரவேற்றது.
முழு உலகமும் ஆவிக்குரிய சுகம் பெற நாம் உதவும்படி வேதம் நம்மை அழைக்கிறது. அதாவது, நாம் பாகுபாடில்லாமல் அனைவர் மீதும் இரக்கம் செலுத்தவேண்டும் என்று அர்த்தமாகிறது. யாராக இருந்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பிற்கும் இரக்கத்திற்கும் பாத்திரவான்கள். பவுல், “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க...” (2 கொரிந்தியர் 5:14) என்று அனைவரையும் அரவணைக்கும் இயேசுவின் அன்பை குறிப்பிடுகிறார். பாவ நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மன்னிப்பு எனும் சுகம் நம் அனைவருக்கும் அவசியம். அவர் நமக்கு மன்னிப்பைக் கொடுக்க நம்மிடத்தில் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.
தேவன் ஆச்சரியவிதமாய், “ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை” (வச.19) நம்மிடத்தில் ஒப்புவித்துள்ளார். நம்மைப் போல் காயப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்ய நம்மை அழைக்கிறார். தேவனோடு ஒப்புரவாகுதலின் மூலம், பாவநோயாளிகள் குணமாகும் மருத்துவ அமைப்பில் நாமும் அங்கத்தினராய் செயல்படுகிறோம். இந்த ஒப்புரவாகுதலும், சுகமும் விரும்புகிற யாவருக்கும் கொடுக்கப்படுகிறது.
ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு
அமினா, ஈராக் அகதி. ஜோசப், பிறப்பால் அமெரிக்கர். இருவரும் அரசியலில் எதிரெதிர் கட்சிகளின் சார்பில் அரசியல் போராட்டத்தில் பங்கேற்றனர். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் அரசியலில் மோதிக்கொண்டால், பெரிய பகை உண்டாகும் என்றறிவோம். ஒரு சிறிய கலவரக்காரக் கூட்டம் ஜோசப்பின் சட்டையை தீயிட முயற்சிக்க, அதைப் பார்த்த அமினா உடனே அவரைப் பாதுகாக்க ஓடினார். பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த ஜோசப், “இனி நாங்கள் மக்களாக பிரிந்திருப்பது இயலாதது, ஏனெனில் இச்செயலில் எங்கள் இருவருக்குமே (இரு கட்சியினருக்கும்) உடன்பாடில்லை"” என்று கூறினார்.
பிறரோடு நமக்கு நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், தவிர்க்க இயலாத உண்மையான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு நம்மை ஒன்றிணைக்கிறது. நாமெல்லோருமே தேவனால் உண்டாக்கப்பட்டு, மனிதம் எனும் ஒரே குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். பாலினம், சமுதாய அந்தஸ்து, இனம் மற்றும் அரசியல் என்று பல வேறுபாடுகள் நமக்குள் நிலவினாலும் தேவன் நம் அனைவரையும் “தம்முடைய சாயலாக” சிருஷ்டித்தார் (1:27). உண்மை எதுவானாலும், தேவன் என்னிலும் உன்னிலும் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதே மறுக்கமுடியாத உண்மை. மேலும் அவருடைய இவ்வுலகை நன்மையால் நிரப்பி, ஆண்டுகொள்ளவும் நாம் பகிரப்பட்ட நோக்கம் பெற்றுள்ளோம் (வச. 28).
நாம் தேவனில் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை மறக்கையில், நமக்கும் மற்றவர்களுக்கும் தீங்குண்டாக்குகிறோம். ஆனால் தேவனின் கிருபையிலும், உண்மையிலும் ஒன்றுபடுகையில், நன்மையான, செழிப்பான உலகை ஸ்தாபிக்கும் அவருடைய சித்தத்தில் பங்கேற்கிறோம்.
கடும் போராட்டம்
1896ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் ஒரு தொலைக்கோடியான இடத்தில், 36 கிலோ எடையுள்ள சிறுத்தை ஒன்று கார்ல் அகேலி என்ற ஆய்வாளரை துரத்தியது. அவரை எட்டிப்பிடித்த அந்த சிறுத்தை, தன்னுடைய தொண்டையை கவ்வ துடித்ததை அவர் நினைவுகூருகிறார். அது முடியாதபோது, அவருடைய வலது கையை தன்னுடைய கொடூரமான பற்களால் கவ்வியது. இருவரும் மணலில் கட்டிப் புரண்டனர். ஒரு நீளமான, கடும் போராட்டம் நிகழ்ந்தது. அகேலி வலுவிழந்தார். யார் முதலில் பலியாவது என்ற நிலை. பின்னர், தன் முழு பலத்தையும் ஒன்றாய் சேர்த்து, அந்த பெரிய மிருகத்தை வெறுங்கையால் மூச்சுத் திணரச் செய்தார்.
இயேசுவை விசுவாசிக்கும் நம் ஒவ்வொருவரும் கடும் போராட்டத்தை தவறாமல் எதிர்கொள்வோமென்றும், நாம் தோற்றதாக எண்ணி நம் முயற்சிகளை கைவிடும் தருணங்களையும் பவுல் அப்போஸ்தலன் விளக்குகிறார். அதற்கு பதிலாக, “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” (எபேசியர் 6:11,14) நம்மை அறிவுறுத்துகிறார். நம் இயலாமையை எண்ணி பயந்து நடுங்காமல், நாம் நமது பெலத்தை நம்புகிறவர்கள் அல்லவென்றும், தேவனை நம்பி விசுவாசத்தில் அடியெடுத்து வைக்கவும் ஊக்குவிக்கிறார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (வச. 10) என்று எழுதுகிறார். நம் போராட்டங்களின் மத்தியில், ஜெபத்தில் நாம் கூப்பிடும் தூரத்தில்தான் தேவன் உள்ளார் (வச. 18).
ஆம்! நமக்கு அநேக போராட்டங்கள் உண்டு. நம்முடைய சுய பெலத்தையும், சாமர்த்தியத்தையும் வைத்து அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. நாம் எதிர்கொள்ளும் சகல தீமைகளையும், எதிரிகளையும் காட்டிலும் தேவன் பெரியவர்.
மெய்யாகவே ஜீவிக்கிறார்
ஈஸ்டர் ஞாயிறு முடிந்து அடுத்தவாரம் என்பதால், எங்கள் ஐந்து வயது மகன் அநேக உயிர்த்தெழுதல் செய்திகளைக் கேட்டிருந்தான். அவன் பொதுவாக அநேக கேள்விகளைக் கேட்பான். அவற்றுள் பெரும்பாலும் எங்களை திக்குமுக்காடச் செய்யும். நான் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்க, அவன் பயணியர் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருந்தான். வெளியே வேடிக்கை பார்த்தவாறே, ஏதோ ஆழமான சிந்தையிலிருந்தான். “அப்பா” என்றழைத்தவன் சற்று நிறுத்தி, கடினமானதைக் கேட்கும் ஆயத்தத்தோடே, “இயேசு நம்மை மறுபடியும் உயிரோடெழுப்புகையில், நாம் உண்மையாகவே உயிரோடிருப்போமா? அல்லது அது நம்முடைய கற்பனைதானா?” என்று கேட்டான்.
இதைப்பற்றி தாராளமாக பேச நமக்கு துணிச்சல் இல்லையென்றாலும், நம்மில் அநேகருக்கு இதே கேள்வியுண்டு. உண்மையாகவே தேவன் நம்மை குணப்படுத்தப் போகிறாரா? உண்மையாகவே அவர் நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்புவாரா? தம்முடைய வாக்குத்தத்தங்களை உண்மையாகவே நிறைவேற்றுவாரா?
“புதிய வானம், புதிய பூமி” (வெளி 21:1), என்று அப்போஸ்தலர் யோவான் நம் எதிர்காலத்தை வர்ணிக்கிறார். அந்த பரிசுத்த நகரத்தில், “தேவன்தாமே நம்மோடேகூட இருந்து நம்முடைய தேவனாயிருப்பார்” (வச. 3). கிறிஸ்து ஜெயித்ததினால், நமக்கு கண்ணீரற்ற எதிர்காலம் வாக்குப்பண்ணப்பட்டுள்ளது. தேவனுக்கும் அவர் ஜனத்திற்கும் எதிராக எந்த தீமையும் ஆளுகை செய்யப்போவதில்லை. இச்சிறந்த எதிர்காலத்தில்தான், “மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” (வச. 4) என்று வாக்குப்பண்ணப்பட்டுள்ளது.
அதாவது, தேவன் நமக்கு வாக்குப்பண்ணும் எதிர்காலத்தில், நாம் மெய்யாகவே ஜீவனோடிருப்போம். இப்போது நாம் வாழும் வாழ்வு வெறும் நிழலே என்று சொல்லுமளவிற்கு நாம் மெய்யான வாழ்வை அனுபவிப்போம்.
இது அனைத்தையும் மாற்றும்
நெடுங்காலமாய், யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய யரோஸ்லாவ் பெலிகன், தன் மிகையான கல்விபட்டங்களுக்கு பேர்பெற்றவரும், “தன் தலைமுறையில் மிகக் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ வரலாற்று நிபுணர்களில்” ஒருவருமாய் திகழ்ந்தார். அவர் முப்பது புத்தகங்களுக்கு மேல் பிரசுரித்துள்ளார். மேலும், தன் மிகப்பெரிய எழுத்து சேவைக்காக வாழ்நாள் விருதான கௌரவமிக்க க்ளுக் பரிசையும் (முடரபந Pசணைந) பெற்றுள்ளார். எனினும், அவருடைய மாணவர்களில் ஒருவர், மரணப்படுக்கையில் தன் ஆசிரியர் கூறிய, “கிறிஸ்து எழுந்ததுண்டானால் வேறு எதுவுமே முக்கியமில்லை, கிறிஸ்து எழாதிருந்தால் எதற்குமே அர்த்தமில்லை” என்ற இவ்வார்த்தைகளே அவர் கூறிய மிகச்சிறந்த வார்த்தைகளாக நினைவுகூருகிறார்.
பவுலின் திட நம்பிக்கையையே பெலிக்கனும் எதிரொலித்தார், “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:14). அப்போஸ்தலன் இவ்வளவு துணிவோடு சொல்லக் காரணம், உயிர்த்தெழுதல் வெறுமனே ஒரு அற்புதம் மட்டுமல்ல; மாறாக, மனித சரித்திரத்தில் தேவ மீட்பின் செயலில் உச்சக்கட்டம் இதுவே என்று அறிந்திருந்தார். உயிர்தெழுதலின் வாக்குத்தத்தம், இயேசு மரித்தோரிடமிருந்து எழுவார் என்று அவர் அளித்த உறுதி மட்டுமல்ல, ஆனால் மரித்து, பாழான வாழ்க்கைகள், சுற்றுப்புறங்கள், உறவுகள் போன்றவைகளும் கிறிஸ்துவின் மூலமாக ஒருநாளில் திரும்ப உயிர்பெறும் என்று அவர் கொடுத்த வாக்குறுதியையும் உறுதிசெய்கிறது. உயிர்த்தெழுதல் மட்டுமில்லையென்றால், நாம் குழுப்பத்தில் சிக்கியிருப்போம் என பவுல் அறிந்திருந்தார். உயிர்த்தெழுதல் இல்லையெனில் மரணம் தான் வெற்றிபெறும்.
ஆனால், நிச்சயமாகவே “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்(தார்)” (வச. 20). ஜெயம்கொண்டவராலே அழிக்கப்பட்டு, மரணமும் தோற்றது. பின்வரப்போகும் அனைத்து உயிர்தெழுதலின் “முதற்பலன்” இயேசுவே. அவர் தீமையையும், மரணத்தையும் மேற்கொண்டுவிட்டதால், நாம் இன்று விடுதலையாக தைரியமாய் வாழலாம். இதுவே அனைத்தையும் மாற்றுகிறது.