எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

அது இரவாயிருந்தது

எலி விஸேல் என்பவரின் “இரவு" என்ற நாவல், இனப்படுகொலையின் பயங்கரங்களால் நம்மை அச்சுறுத்துகிறது. நாசிப்படைகளின் மரண முகாம்களில் ஏற்பட்ட சொந்த அனுபவங்களை தழுவின இந்நாவலில், வேதாகமத்தின் யாத்திராகம புத்தகத்தின் சம்பவங்களை விஸேல் நேர்மாறாக ஒப்பிட்டுள்ளார். மோசேயும், இஸ்ரவேலர்களும் முதல் பஸ்காவிற்கு பின் அடிமைத்தனத்திலிருந்து தப்பினர் (யாத்திராகமம் 12). ஆனால் இங்கே பஸ்காவிற்கு பின்னர் நாசிகள் யூத தலைவர்களை கைது செய்தனர் என்று விஸேல் கூறுகிறார்.

விஸேலின் முரண்பாட்டை நாம் விமர்சிக்கும் முன், வேதாகமத்தின் அதேபோன்ற திருப்பம் நிறைந்த சம்பவம் ஒன்றுள்ளது. பஸ்காவின் இரவில், தேவ ஜனங்கள் தம் துன்பங்களிலிருந்து விடுவிக்க எதிர்பார்க்கப்பட்ட இயேசு, அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தன்னை கொல்லக்கூடியவர்கள் தம்மை கைதுசெய்ய அனுமதிக்கிறார்.

இயேசு கைதாவதற்கு முன்னான புனித சம்பவத்திற்கு யோவான் நம்மை அழைத்துச் செல்கிறார். தனக்கு முன்பாக இருந்ததைக் குறித்து “ஆவியில் கலங்கினவராக,” அக்கடைசி இரவு போஜனத்தில் தாம் காட்டிக்கொடுக்கப்படப் போகிறதை இயேசு முன்னறிவித்தார் (யோவான் 13:21). பின்னர், நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத செயலாக, தன்னை காட்டிக்கொடுக்க போகிறவனுக்கே அப்பத்தை பரிமாறினார். “அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது" (வச. 30) என்று அச்சம்பவம் சொல்கிறது. சரித்திரத்தின் மாபெரும் அநீதி ஆரம்பமானது, இருந்தபோதிலும் இயேசு, “இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்” (வச. 31) என அறிவித்தார். சில மணிநேரங்களில், சீஷர்கள் பீதியுற்று, தோல்வியையும், நிராகரிப்பையும் அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் இயேசுவோ தேவத் திட்டம் அப்படியே செயல்படுவதைப் பார்க்கிறார்.

அந்தகாரம் சூழ்வதைப்போல தோன்றினாலும், தேவன் தம் இருண்ட இரவை எதிர்கொண்டு வெற்றிபெற்றதை நாம் நினைவுகூரலாம். அவர் நம்மோடு வருகிறார். இரவு நீளாது.

தொலைந்த காரியங்கள்

தன் தேசத்தை பாழாக்கும் ஆடம்பரச் செலவுகளையும், ஊழல்களையும் கண்டு சோர்வடைந்த கொரியாவின் அரசர் யோங்ஜோ (1694-1776), காரியங்களை மாற்றத் தீர்மானித்தார். ஆனால், கூழுக்கு ஆசைப்பட்டு மீசையெடுத்த கதைப்போல பாரம்பரியமான தங்கநூல் தையல் கலையை தடைசெய்தார். இதனால், சீக்கிரமே இந்த நுணுக்கமான கலை அறிவு தேசத்தில் அழிந்துபோனது. 

2011ஆம் ஆண்டு, சிம் யியோன்-ஓக் எனும் பேராசிரியர் அந்த பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவர தீர்மானித்தார். தங்க இழைகளுக்கு பதிலாக கைகளால் கத்திரிக்கப்பட்ட மல்பெரி பேப்பர்களைக் கொண்டு அந்த பழமையான பாரம்பரிய வழக்கத்திற்கு புத்துயிர் கொடுத்தார். 

யாத்திராகமத்தில், ஆடம்பரமான முறையில் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டினார்கள், ஆரோனின் ஆசாரிய வஸ்திரத்தில் தங்க இழைகள் கோர்க்கப்பட்டன. திறமையான கைவேலைக் கலைஞர்கள், “அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.” (யாத்திராகமம் 39:3). அந்த நேர்த்தியான கைவினைத் திறனுக்கு என்ன ஆனது? வஸ்திரம் கிழிந்துவிட்டதா? அவைகள் சூரையாடப்பட்டதா? எல்லாம் வீணாய் போனதா? இல்லவே இல்லை. அவர்கள் அதை நேர்த்தியாய் செய்தனர் ஏனெனில் தேவன் அவர்களுக்கு தெளிவான ஆலோசனைகளை கொடுத்திருந்தார்.

நாம் ஒவ்வொருவரும் செய்ய தேவன் ஏதோவொன்றை நமக்கும் கொடுத்திருக்கிறார். அது நாம் மற்றவர்களுக்கு செய்யும் ஒரு சிறிய அன்பின் உதவியாக இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் சேவைசெய்வதின் மூலம் ஏதாகிலும் ஒன்றை அவருக்கு நாம் தரலாம். கடைசியில் நம்முடைய முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று நாம் கவலைப்படத் தேவையில்லை (1கொரிந்தியர் 15:58). நாம் பரமதகப்பனுக்காய் செய்யும் ஒவ்வொரு காரியமும் நித்தியத்திற்கு பலனளிக்கக் கூடியதாயிருக்கிறது. 

நட்சத்திரங்களின் சவால்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே, இத்தாலிய கவிஞர் எப்.டி. மறிநேட்டி  வருங்காலவியல் என்ற கலை இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் கடந்த காலத்தை புறக்கணித்து, அழகை குறித்ததான பாரம்பரிய கருத்துக்களை ஏளனம் செய்தது, மாறாக இயந்திரங்களை அது உயர்வாக கருதியது. 1909ஆம் ஆண்டு மறிநேட்டி, வருங்காலவியலின்  கொள்கை விளக்கத்தை எழுதினார், அதில் அவர்: பெண்களை குறித்து இழிவாகவும், வன்முறையை உயர்வாகவும் அறிவித்திருந்தார். மேலும், "நாம் யுத்தங்களை மேன்மைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார். அவருடைய கொள்கை விளக்க உரை இவ்வாறு நிறைவடைந்தது: "உலகத்தின் உச்சியில் நின்று கொண்டு நாங்கள் மீண்டுமாக நட்சத்திரங்களுக்கு விரோதமான கொடூரமான யுத்தத்தை துவங்குகிறோம்"

மறிநேட்டி கொள்கை விளக்கத்தை அறிவித்து, ஐந்து ஆண்டுகளில் நவீன போர் மிகவும் தீவிரமாக ஆரம்பமானது. முதலாம் உலகப் போர் யாருக்கும் எந்த புகழையும் கொண்டு வரவில்லை. மறிநேட்டியே 1944-ல் மரித்தார். ஆனால் இவைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், நட்சத்திரங்கள் அதினதின் இடத்திலே நிலைத்திருந்தன.

 தாவீது ராஜா, இந்த நட்சத்திரங்களை குறைத்து கவித்துவமாக பாடியிருந்தார் ஆனால் வியப்பூட்டும் வகையில் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு. அவர் எழுதுகிறார்,"உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்."(சங்கீதம்) என்று. தாவீதின் இந்தக் கேள்வி அவிசுவாசத்தினால் வந்தது அல்ல ஆனால் வியப்பினால் தன்னை தாழ்த்தினார். இந்த அகண்ட அண்ட சராசரங்களை உண்டாக்கின தேவன், மெய்யாகவே நம் மீது சிந்தையாய் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்முடைய ஒவ்வொரு விபரத்தையும் கவனிக்கிறார், நம்முடைய நன்மை, தீமை, தாழ்மை, கொடூரம், ஏன் அபத்தத்தை கூட கவனிக்கிறார்.

நட்சத்திரங்களுக்கு சவால் விடுவது என்பது முட்டாள்தனமானது, மாறாக அவைகள் நம்முடைய சிருஷ்டிகரை துதிக்கும்படி நமக்கு சவால் விடுகின்றன.

நமக்கு தேவையானதை பெறுதல்

ஆரோன் பர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமநிலை உடைக்கும் வாக்கெடுப்பின் முடிவிற்காக கவலையோடு காத்திருந்தார். 1800ல் தாமஸ் ஜெபர்ஸனுடனான அதிபருக்கான தேர்தல் போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில், தன்னையே அதிபராக தேர்வுக்குழு அறிவிக்கும் என்று ஆரோன் பர் நம்ப காரணமிருந்தது. எனினும் அவர் தோற்றார், கசப்பு அவரை ஆழமாய் ஊடுருவியது. அலெக்சாண்டர் ஹாமில்டன் தன்னை அதிபர் வேட்பாளராக ஆதரிக்காத காரணத்தால் அவருக்கு எதிராக மனக்கசப்பை வளர்த்துக்கொண்ட பர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே ஹாமில்டனை துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொன்றார். இந்த கொலையால் வென்குண்டெழுந்த முழு தேசமும் அவருக்கு விரோதமாக திரும்ப, பர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட முதியவராக மரித்தார்.

அரசியல் விளையாட்டுக்கள் சரித்திரத்தில் கொடுமையான பங்காற்றியுள்ளன. தாவீது ராஜா மரிக்கும் தருவாயில் இருக்கையில், அவருடைய குமாரன் அதோனியா என்பவன் தாவீதின் தளபதியையும், மிக முக்கியமான ஆசாரியனையும் தன்னை ராஜாவாக்கும்படி தனக்கென்று பணியமர்த்திக்கொண்டான் (1 இராஜாக்கள் 1:5-8). ஆனால் தாவீது சாலொமோனையே ராஜாவாக தெரிந்து கொண்டார் (வ.17). தீர்க்கதரிசியான நாத்தானின் உதவியோடு இந்த கிளர்ச்சி முறியடிக்கப்படுகிறது (வ.11-53). அதோனியா சற்று ஓய்ந்தாலும், மீண்டும் இரண்டாம் முறை அரியணை ஏற திட்டம் தீட்டினான், எனவே சாலொமோன் அவனை கொல்ல வேண்டியிருந்தது (1 இராஜாக்கள் 2:13-25).

நம் மனுஷீக சுபாவமே நமக்கு உரிமை இல்லாதவைகளை சொந்தமாக்கிக்கொள்ள தூண்டுகிறது! நம் எவ்வளவுதான் கடினமாய் அதிகாரம், கவுரவம் அல்லது சொத்துக்களை அடைய முயன்றாலும் அது ஒரு போதும் நமக்கு நிறைவை தராது. அது எப்போதுமே நமக்கு பற்றாக்குறையாய் தான் இருக்கும். ஆனால் இயேசுவோ நம்மை போலல்லாமல் "மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:8)

இதற்கு முரணாக, சுயநலமாக நம்முடைய சொந்த விருப்பங்களையே நாம் தொடர்ந்தால் நம்முடைய ஆழமான, உண்மையான ஏக்கங்கள் தீராது. முடிவுகள் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் விட்டுவிடுவதே சமாதானதிற்கும், சந்தோஷத்திற்குமான ஒரே வழி.

அடிப்படைக்குச் செல்வோம்

தீர்மானங்கள் எடுப்பதே அதை உடைப்பதற்காக என்று தோன்றுகிறது. அது சாத்தியம் என்று புத்தாண்டின்போது சிலர் இதை கேலியாக சொல்வதுண்டு. அவ்வாறு சமூக ஊடகத்தில் உலா வந்த சிலவைகள்: போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது சக வாகன ஓட்டிகளைப் பார்த்து கை அசையுங்கள். மாரத்தான் ஓடுவதற்கு கையெழுத்திட்டு, ஓடாமல் இருங்கள். தள்ளிப் போடுவதை நாளைக்கு நிறுத்திக்கொள்ளலாம். சிரி செயலியின் துணையில்லாமல் தொலைந்து போகலாம். உடற்பயிற்சி பதிவுகளை பதிவிடுபவர்களை நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிடவும்.  

புதிய துவக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சிறைபிடிக்கப்பட்ட யூத மக்களுக்கு ஒரு புதிய துவக்கம் அவசியமாயிருந்தது. அவர்களின் 70 ஆண்டுகள் சிறையிருப்பு பயணத்தில், இருபதாம் ஆண்டு கடந்தபோது, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம், “நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி" (எசேக்கியல் 39:26) என்று தேவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பாக மோசேயின் மூலமாக தேவன் அவர்களுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணம் என்னும் அடிப்படைக்கு அவர்கள் மீண்டும் திரும்பவேண்டும். புத்தாண்டில் பண்டிகையை அனுசரிப்பதும் அதில் ஒன்று (45:18). தேவனுடைய குணாதிசயங்களையும் எதிர்பார்ப்புகளையும் நினைவுபடுத்துவதே பண்டிகைகளை அனுசரிப்பதின் பிரதான நோக்கம். தேவன் அதிபதிகளிடம், “நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்" (வச. 9) என்றும் உத்தமமாய் நடங்கள் என்றும் வலியுறுத்தினார் (வச. 10).

இந்த பாடம் நமக்கும் பொருந்தும். நமது விசுவாசம் கிரியைகள் இல்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும் (யாக்கோபு 2:17). இந்த புத்தாண்டில் நம்முடைய தேவைகளை தேவன் நமக்கு சந்திப்பதுபோல, அவருடைய அடிப்படைக் கற்பனைகளாகிய, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக" மற்றும் “உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22:37-39) என்னும் கற்பனைகளைக் கைக்கொள்ள தீர்மானிப்போம். 

இன்றைய தலைமுறை

“முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை ஒருபோதும் நம்பவேண்டாம்” என்று 1964இல் ஜாக் வெண்பெர்க் என்ற ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சொன்னார். அவருடைய அந்த கருத்து அந்த தலைமுறையையே பாதித்தது குறித்து அவர் பின்னர் வருந்தினார். பின்னர் அவர், “என்னுடைய தலையின் உச்சியிலிருந்து நான் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டேன்... அது சிதைந்து முற்றிலும் தவறாய் புரிந்துகொள்ளப்பட்டது” என்று வருந்தினார். 

பல்லாயிரக்கணக்கான மக்களை இலக்காகக் கொண்ட இழிவான கருத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது அதற்கு நேர்மாறாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு தலைமுறையிலிருந்து மறுதலைமுறைக்கு தொடர்புகொள்ளப்படும் தவறான கருத்துக்கள், இருதரப்பினராலும் தவிர்க்கப்பட வேண்டும். நிச்சயமாக ஒரு சிறந்த வழி இருக்கிறது. 

எசேக்கியா ஒரு நல்ல ராஜாவாய் இருந்தபோதிலும், அடுத்த தலைமுறையைக் குறித்த அவருடைய அக்கறை குறைவாயிருந்தது. அவருடைய இளம்பிரயாத்திலேயே அவர் வியாதிகண்டான் (2 இராஜ. 20:1). அவருடைய ஜீவனுக்காய் தேவனிடத்தில் மன்றாடினார் (வச. 2-3). தேவன் அவருடைய ஆயுசுநாட்களை 15 வருடங்கள் கூட்டுகிறார் (வச. 6).

ஆனால் அவருடைய தலைமுறை சிறைபிடிக்கப்பட்டு போகும் என்னும் தகவலை கேள்விப்படும்போது அவர் அதை பொருட்படுத்தவில்லை (வச. 16-18). “என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே” என்று எண்ணுகிறார் (வச. 19). தன்னுடைய நலத்தின் மீது எசேக்கியாவுக்கு இருந்த அக்கறையை அடுத்த தலைமுறையின் மீது காண்பிக்கவில்லை. 

நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கோட்டைக் கடக்கும் துணிச்சலுள்ள அன்பிற்கு தேவன் நம்மை அழைக்கிறார். பழைய தலைமுறைகளுக்கு இன்றைய இளைய தலைமுறையினரின் இலட்சியமும் படைப்பாற்றலும் தேவை. அதேபோன்று, இளைய தலைமுறையினரும் மூத்தவர்களின் ஞானத்தினாலும் அனுபவத்தினாலும் பயனடையவேண்டும். இது மற்றவர்களைக் குறித்து, கருத்துக்களையும் கோபங்களையும் பரிமாறும் நேரமல்ல. நல்ல சிந்தனைகளை பரிமாறுவோம். நாம் இதில் இணைந்து செயல்படுவோம். 

இயேசுவுக்காக மற்றவர்களை சந்தித்தல்

பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்கள் இயேசுவின் நாமத்தை அறியவில்லை. பிலிப்பைன்ஸின் மைண்டானோவ் மலைப்பகுதியில் வசித்த பேண்வோன் என்ற மக்கள் கூட்டம் வெளியுலகத்தோடு அதிக தொடர்பில் இருந்ததில்லை. கரடுமுரடான அந்த மலைப்பாதையின் வழியாய் பயணித்து, அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை கொண்டுசேர்ப்பதற்கே இரண்டு நாட்கள் ஆகும். உலகம் அவர்களை கண்டுகொள்ளவில்லை. 

ஆனால் மிஷனரி குழுவினர் அவர்களை கண்டுபிடித்தனர். ஹெலிகாப்டரின் உதவியோடு அந்த இடத்திற்கு போக வர துவங்கினர். இது பேண்வோன் மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களையும், மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளவும், உலகம் மிகவும் பெரியது என்று பார்க்கவும் அவர்களுக்கு உதவியது. அது அவர்களுக்கு இயேசுவையும் அறிமுகப்படுத்தியது. ஆவி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அந்த மக்கள், இப்போது தங்களுடைய பாடல்களுக்கு புதிய வார்த்தைகளை ஏற்படுத்தி ஒன்றான மெய்தேவனை ஆராதிக்கிறார்கள். மிஷன் ஊழியம் ஒரு அழகான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இயேசு பரமேறிச் செல்லும்போது தன்னுடைய சீஷர்களுக்கு இந்த கட்டளையைக் கொடுக்கிறார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து..” (மத்தேயு 28:19). அந்த கட்டளை இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது. 

சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்கள் எங்கோ மலைப்பகுதிகளில் வாழ்கிறவர்கள் மட்டுமல்ல. அவர்கள் நம் மத்தியிலும் வாழுகிறார்கள். பேண்வோன் மக்கள் கூட்டத்தை சந்திப்பதற்கு அனுகூலமான வழியும், பொருளாதாரமும் தேவைப்பட்டது. அதுபோல நம்முடைய சந்திக்கப்படாத மக்களை சந்திப்பதற்கு சாதகமான வழியை கண்டுபிடிப்போம். அது நீங்கள் கண்டுகொள்ளாத உங்களுடைய அருகாமையில் வசிக்கும் உங்களுக்கு தொடர்பில்லாத நபர்களாகக் கூட இருக்கலாம். மற்றவர்களை இயேசுவுக்காக ஆதாயப்படுத்த தேவன் உங்களை எப்படி பயன்படுத்தலாம்? 

காலங்களை மீட்டெடுத்தல்

பருவகாலத்தைமீட்பதற்கான வழியை கண்டுபிடிக்க லெய்சா விரும்பினாள். ஆகையினால் அவள் கண்காட்சியில் பார்த்த பெரும்பாலான அலங்காரங்கள் பயங்கரமான மற்றும் கொடூரமான வழிகளில் மரணத்தை கொண்டாடுவதாக காணப்பட்டது. 

அந்த மரண இருளை சுலபமான வழியில் எதிர்கொள்ள எண்ணிய லெய்சா, ஒரு பூசணிக்காயை எடுத்து அதில் அழியாத எழுதுகோலினால் எழுத ஆரம்பித்தாள். “சூரியஒளி” என்று முதலில் எழுதினாள். பார்வையாளர்கள் தொடர்ந்து அதில் எழுத ஆரம்பித்தனர். சிலர் விசித்திரமான காரியங்களையும் அதில் எழுதினர்: உதாரணத்திற்கு “கிறுக்குதல்” போன்ற வார்த்தைகள். சிலர் நடைமுறைக் காரியங்களையும் எழுதினர்: “அழகான வீடு,” “ஓடும் கார்.” மரித்த தங்களுடைய நேசத்திற்குரிய நபர்களின் பெயர்களையும் எழுதி சிலர் தங்கள் வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். அந்த பூசணிக்காயைச் சுற்றி மக்களின் நன்றியுணர்வு என்னும் சங்கிலி தொடர ஆரம்பித்தது. 

நாம் எளிதில் பார்வையிடக்கூடிய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்து சங்கீதம் 104 தேவனுக்கு நன்றி சொல்லுகிறது. “அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்” என்று சங்கீதக்காரன் பாடுகிறார் (வச. 10). “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்” (வச. 14). இருளையும் நன்மையாகவும் நோக்கத்தோடும் சிருஷ்டித்ததாக அறிவிக்கிறார். “நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும் ; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்” (வச. 20). அதற்கு பின்பாக, “சூரியன் உதிக்கையில்... அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்” (வச. 22-23). கடைசியாக இவைகள் எல்லாவற்றிற்காகவும், “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்” (வச. 33) என்று முடிக்கிறார். 

மரணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாத இந்த உலகத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்காக நாம் சிருஷ்டிகருக்கு நன்றி சொல்லி பழகும்போது ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

நிலைநிற்கும் விசுவாசம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாமஸ் கார்லே தன்னுடைய எழுத்துக்களை சரிபார்க்கும் பொருட்டு அதை தத்துவமேதை ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவரிடம் ஒப்படைத்தார். தெரிந்தோ தெரியாமலோ அந்த பிரதி நெருப்பில் பொசுங்கியது. அது கார்லைனிடம் இருந்த ஒரே பிரதி. சற்றும் பதறாமல், எரிந்துபோன பகுதிகளை மீண்டும் எழுத ஆரம்பித்தார். அவர் சிந்தையில் பதிந்திருந்த நிகழ்வுகளை தீயின் தழல்களால் எரிக்கமுடியவில்லை. இந்த பெரிய இழப்பின் மத்தியிலும், “பிரெஞ்சு புரட்சி” என்னும் தன்னுடைய பிரம்மாண்டமான படைப்பை கார்லைன் வெளியிட்டார். 

பண்டைய யூதேயா ராஜ்யத்தின் கடைசிநாட்களில், தேவன் எரேமியா தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ புத்தகச்சுருளை எடுத்துஉன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது” என்றார் (எரேமியா 36:2). இது தன் ஜனங்களை முழுவதுமாய் அழிக்காமல் அவர்களை மனந்திரும்புதலுக்கு அழைக்கும் தேவனுடைய மென்மையான இருதயத்தைப் பிரதிபலிக்கிறது (வச.3). 

எரேமியாவும் சொன்னபடியே செய்தான். அதைக் கைப்பற்றிய யூதேயாவின் ராஜாவாகிய யோயாக்கீன், அதை துண்டுதுண்டாக்கி, தீயிலிட்டு பொசுக்கினான் (வச.23-25). ராஜாவின் இந்த செய்கை சூழ்நிலையை இன்னும் கடினமாக்கியது. தேவன் அதே செய்தியை மீண்டும் எழுதும்படிக்கு எரேமியாவிடம் சொல்லுகிறார். மேலும் யோயாக்கீனைக் குறித்து, “தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்து விடப்பட்டுக்கிடக்கும்” (வச.30) என்றும் சொல்லுகிறார். 

கர்த்தருடைய வார்த்தையைத் தீயிலிட்டு எரிப்பது சாத்தியமே. ஆனால் அது பிரயோஜனமற்ற முயற்சி. வார்த்தைகளுக்கு பின்பாக இருக்கும் வார்த்தையானவர், என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் நித்தியமானவர்.