எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

தனிமை, ஆனால் மறக்கப்படவில்லை!

நீங்கள் அவர்களின் கதைகளைக் கேட்கும்போது, கைதியாக இருப்பதில் மிகவும் கடினமான காரியம் தனிமைப்படுத்தபடுதல் என்பதை புரிந்துகொள்வீர்கள். சிறைக் கம்பிகளுக்கு உள்ளே அடைபட்டிருக்கும் கைதிகள் ஆண்டுக்கு இரண்டுமுறை மாத்திரமே அவர்களின் சிநேகிதரையோ அல்லது பிரியமானவர்களையோ பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. தனிமை என்பது ஒரு நிலையான உண்மை.

யோசேப்பு தவறாய் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசத்தை அனுபவித்தது மிகவும் வேதனையளிக்கக்கூடிய அனுபவமாய் நான் எண்ணுகிறேன். அங்கே நம்பிக்கையின் ஒளி உதித்தது. பார்வோனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனுடைய சொப்பனத்தை சரியாய் வியாக்கியானம் செய்யும்பொருட்டு தேவன் யோசேப்பைப் பயன்படுத்தினார். யோசேப்பு அவனிடம் பார்வோன் தன்னை விடுவிக்கும்பொருட்டு தன்னைக் குறித்து பார்வோனிடம் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டான் (ஆதியாகமம் 40:14). “ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்” (வச. 23). யோசேப்பு மேலும் இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டியதாயிற்று. அந்தக் காத்திருப்பு நாட்களில், அவனுடைய சூழ்நிலைகள் மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாதபோதிலும், யோசேப்பு தனிமையில் இல்லை; தேவன் அவனோடிருந்தார். இறுதியில், பார்வோனின் வேலைக்காரன் அவனுடைய வாக்குறுதியை நினைவு கூர்ந்தான். யோசேப்பு இன்னுமொரு சொப்பனத்திற்கு விளக்கமளித்த பின்பே விடுவிக்கப்படுகிறான் (41:9-14).

நாம் மறக்கப்பட்டதாக உணரும்போதும், தனிமையின் சோகம் நம்மை ஆழ்த்தும்போதும், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.

ஜெபத்தில் நினைவு கூறுங்கள்

ஆங்கிலேய ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் வருடாந்திர சேவைக்கான விருதான “மவுண்டி மனி” விருதை, 2021 ஆம் ஆண்டில் மால்கம் கிளவுட் இரண்டாம் எலிசபெத் மகாராணியிடம் பெற்றார். அச்சமயத்தில் நூறு வயதாக இருந்த கிளவுட், தனது வாழ்நாளில் ஆயிரம் வேதாகமங்களை வழங்கியதற்காக கௌரவிக்கப்பட்டார். கிளவுடிடம் வேதாகமத்தைப் பெற்ற அனைவரின் பெயர்களையும் எழுதி வைத்து, தொடர்ந்து‌ அவர்களுக்காக ஜெபிப்பார்.

 

கிளவுடின் உண்மையான ஜெபம், புதிய ஏற்பாட்டில் நிறைந்திருக்கும் பவுலின் எழுத்தில் அன்பிற்கான வல்லமையான எடுத்துக்காட்டை  நமக்கு காட்டுகிறது. பவுல் தனது கடிதங்களைப் பெறுபவர்களுக்காக, அடிக்கடி ஜெபிப்பதாக உறுதியளித்தார். அவரது நண்பரான பிலேமோனுக்கு அவர் எழுதுகிறார்: “நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி” (பிலேமோன் 1:4) என்று. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், ”நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து” (II தீமோத்தேயு 1:3) என எழுதினார். ரோமாபுரியில் உள்ள சபையாருக்கு, பவுல் அவர்களுக்காக ஜெபத்தில் "இடைவிடாமல்", "எல்லா நேரங்களிலும்" ஜெபிப்பதாக வலியுறுத்தினார் (ரோமர் 1:9-10).

 

மால்கமைப் போல ஜெபிக்க ஆயிரம் பேர் இல்லை என்றாலும், நமக்கு அறிமுகமானவர்களுக்காக நாம் செய்யும் திட்டமிட்ட ஜெபம் வல்லமை மிகுந்ததாயிருக்கிறது ஏனெனில் தேவன் அவைகளுக்கு பதிலளிக்கிறார். ஒரு குறிப்பிட்ட தனிநபருக்காக ஜெபிக்கும்படி, அவருடைய ஆவியால் தூண்டப்பட்டபோது, ஒரு எளிய ஜெப நாள்காட்டி கூட பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டுகொண்டேன். பெயர்களை தினசரி நாட்காட்டியிலும், வாராந்திர நாட்காட்டியிலும் பிரித்து அவர்களுக்காக உண்மையாக ஜெபிக்க உதவியது . நாம் மற்றவர்களை ஜெபத்தில் நினைவு கூறுவது, என்னே ஓர் அழகிய அன்பின் வெளிப்பாடாக இருக்கிறது.

அனுதின அதிகாரம்

“ஒவ்வொரு வினாடியும் புனிதமானது” என்பது உணவைத் தயாரிப்பது, துணி துவைப்பது போன்ற பல்வேறு செயல்களுக்கான பிரார்த்தனைகளின் அழகான புத்தகமாகும். அதாவது மீண்டும், மீண்டும் செய்யக்கூடிய பணிகள் அல்லது அவசியமான‌ மற்றும் ‌சாதாரணமாக உணரக்கூடிய பணிகளைக் குறிக்கிறது. இப்பணிகள் சலிப்பூட்டுகிறவைகளாயிருக்கும். இவை எழுத்தாளரான ஜி.கே. செஸ்டெர்டென்னின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது. “உணவுக்கு முன் கிருபை வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது நல்லது தான். ஆனால் நான் வர்ணம் தீட்டுவதற்கு முன்னும், நீச்சல் அடிப்பதற்கு முன்னும், வேலி  இடுவதற்கு முன்னும், குத்துச்சண்டை போடும் முன்னும், நடக்கும் முன்னும், விளையாடும் முன்னும், நடனமாடும் முன்னும், பேனாவிற்கு மையை ஊற்றும் முன்னும் தேவனுடைய கிருபைக்காக கேட்கிறேன்.”

 

இத்தகைய ஊக்கம் எனது நாளின் செயல்பாடுகள் குறித்த எனது கண்ணோட்டத்தை மாற்றியமைக்கிறது. சில சமயங்களில் ஆவிக்குரிய வாழ்க்கையில், முக்கியமானது, முக்கியமற்றது என இரண்டு வகைகளாக பிரிக்க முற்படுகிறேன்.  இயேசுவுக்காக வாழத் தெரிந்துகொண்ட கொலோசே மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அந்தப் பிரிவினையை அழித்தார். அவர் இந்த வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: ”வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து”. (கொலோசெயர் 3:17). இயேசுவின் நாமத்தில் காரியங்களைச் செய்வதென்பது, நாம் அவற்றைச் செய்வது மட்டுமல்லாமல், அதன் மூலம் அவரைக் கனப்படுத்துவதும், அவற்றை நிறைவேற்றுவதற்கு அவருடைய ஆவி நம்மைப் பலப்படுத்துகிறது என்ற உறுதியைக் கொண்டிருப்பதும் ஆகும்.

 

"நீங்கள் எதைச் செய்தாலும்." நம் வாழ்வின் அனைத்து சாதாரண செயல்களையும், ஒவ்வொரு நேரமும், தேவ ஆவியால் பலப்படுத்தப்பட்டு, இயேசுவைக் கனப்படுத்தும் விதத்தில் செய்யலாம்.

ஆவியின் வல்லமை

பலத்த புயலினால் எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதை அறிந்திருந்தும் (நம்மைச் சுற்றிப் பொதுவாக நடைபெறுகின்ற அசோகரியங்கள்) எப்பொழுதும் போல நான் அறைக்குள் நுழைந்ததும் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்தேன். மின்விளக்கு வெளிச்சம் தரவில்லை. மின்விளக்கு வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நான் இருட்டுக்குள்தான் இருந்தேன்.

மின்சாரம் இல்லாமல் இருந்தும் வெளிச்சத்தை எதிர்பார்த்த அந்த அனுபவம் எனக்கு ஒரு ஆவிக்குரிய உண்மையை தெளிவாக நினைவூட்டியது. நாம் ஆவியானவரைச் சார்ந்திருக்கத் தவறினாலும், பல நேரங்களில் நாம் வல்லமையை எதிர்பார்க்கிறோம்.

1தெசலோனிக்கேயரில் பவுல் எப்படியாக சுவிசேஷ செய்தியை தேவன் வரப்பண்ணினார் என்பதை எழுதுகிறார் “வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது”(1:5). நாம் தேவ மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்பொழுது, விசுவாசிகளாகிய நம் வாழ்வில் அவருடைய ஆவியின் வல்லமையை உடனடியாக அனுபவிக்க முடியும். அவ்வல்லமையானது அன்பு, சந்தோஷம், சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை நம்மில் வளர்க்கிறது (கலாத்தியர் 5:22-23). மேலும் வரங்களினால் நம்மைத் தகுதிப்படுத்தி சபைக்கு ஊழியம் செய்யவும், போதிக்கவும், உதவவும், வழி நடத்தவும் செய்கிறது (1 கொரிந்தியர் 12:28).

பவுல் தனது வாசகர்களுக்கு “ஆவியை அவித்து போடுதல்” என்பது சாத்தியமே என எச்சரித்தார் (1தெசலோனிக்கேயர் 5:19). நாம் தேவனுடைய பிரசன்னத்தையும், அவருடைய எச்சரிப்பையும் புறக்கணித்து, அவருடைய ஆவியின் வல்லமையை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன (யோவான் 16:8). ஆனால் தேவனுக்குள்ளான நம் தொடர்பிலிருந்து பிரிந்து நாம் இருக்கத் தேவையில்லை. தேவனின் வல்லமை அவருடைய பிள்ளைகளுக்கென்று எப்போதும் இருக்கிறது.                                                                 

தேவனுடைய மகத்தான வல்லமை

திசைமாற்றியபோது சாத்தியமற்ற ஒன்று நிகழ்ந்தது. ஆகஸ்ட் 2021இல், ஐடா என்ற சூறாவளிக் காற்று, லூசியானா கடற்கரையில் கரையொதுங்கியது. அங்கே ஆச்சரியமான “எதிர்மறையான ஓட்டத்தை” தோற்றுவித்தது. பலமணி நேரங்கள் தண்ணீர் மேல்நோக்கி பாய ஆரம்பித்தது. 

ஒரு சூறாவளியானது அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பத்தாயிரம் அணுகுண்டுகளுக்குச் சமமான ஆற்றலைச் செலவழிக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! ஓடும் நீரின் போக்கை மாற்றும் இத்தகைய நம்பமுடியாத ஆற்றலானது, யாத்திராகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள “எதிர்மறையான ஓட்டத்தை” எனக்கு நினைவூட்டியது. 

நூற்றாண்டுகளாய் எகிப்தியரிடம் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் அங்கிருந்து புறப்பட்டு செங்கடலின் கரைக்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு முன்பாக பெரிய சமுத்திரமும், அவர்களைத் துரத்திக்கொண்ட பார்வோனின் சேனைகளும் வந்துகொண்டிருந்தது. அதுபோன்ற சாத்தியமற்ற சூழ்நிலைகளில், “கர்த்தர், இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்... இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்” (யாத்திராகமம் 14:21-22). அந்த ஆச்சரியமான சம்பவத்தை சாட்சியிட்ட பின்பு, “ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்(தனர்)” (வச. 31). 

தேவனுடைய வல்லமையை சாட்சியிடும்போது ஆச்சரியத்தில் மூழ்குவது இயல்பானது. ஆனால் அதோடு மக்கள் நின்றுவிடவில்லை, தேவன் மீது “விசுவாசம் வைத்தார்கள்” (வச. 31). 

தேவனுடைய படைப்பில் அவருடைய வல்லமையை நாம் சாட்சியிடும்போது, நாமும் அவருடைய மகத்துவத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு அவர் மீது நம்பிக்கை வைக்க முடியும். 

சுதந்திரமாய் வாழு

நான் வளர்ந்த அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில், ஒவ்வொரு ஜூன் 19 அன்றும் கறுப்பின சமூகத்தினரின் பண்டிகை அணிவகுப்புகள் மற்றும் கேளிக்கைகள் நடக்கும். என்னுடைய இளமைப்பருவத்தில் அந்த ஜீன் 19ஆம் தேதியின் இருதயத்தை நொறுக்கும் முக்கியத்துவத்தை அறிந்தேன். 1865ஆம் ஆண்டில் டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் அளிக்கும் விடுதலைப் பிரகடனத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார் என்பதை அறிந்து அந்த நாளை கொண்டாடுவது வழக்கம். ஆனால் அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டுவிட்டார். அதை அவர்கள் தாமதமாகவே தெரிந்துகொள்ள நேரிட்டது. டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தாங்கள் விடுவிக்கப்பட்டதை அறியாததால் தொடர்ந்து அந்த இரண்டரை ஆண்டுகளும் அடிமைத்தனத்தில் வாழ்ந்துவந்தனர். 

விடுதலையாக்கப்பட்ட பின்னரும் அடிமையாய் வாழ்தல் என்பது சாத்தியம். கலாத்தியர் நிருபத்தில்  பவுல் மற்றொரு வகையான அடிமைத்தனத்தைப் பற்றி எழுதுகிறார்: நெருக்கும் மார்க்க விதிமுறைகளுக்கு நடுவில் ஜீவித்தல். இந்த முக்கியமான வசனத்தில், பவுல் விசுவாசிகளை “நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்” (கலாத்தியர் 5:1) என்று உற்சாகப்படுத்துகிறார். நாம் என்ன சாப்பிடவேண்டும், யாரை சிநேகிதராக்க வேண்டும் என்ற வெளிப்புறமான மார்க்க விதிமுறைகளுக்கு கிறிஸ்தவர்கள் நீங்கலாக்கப்பட்டுள்ளனர். பலர், இன்னும் அதே அடிமைத்தனத்திற்குள்ளாகவே வாழ பழகிக்கொண்டனர். 

துரதிருஷ்டவசமாய் இன்றும் நாம் அதையே செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இயேசுவை நம்பின மாத்திரத்தில், மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்க கட்டுகளுக்கு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியுள்ளார். நமக்கான சுதந்திரம் அறிவிக்கப்பட்டாயிற்று. அவருடைய வல்லமையில் நாம் ஜீவிப்போம். 

துண்டுகளை ஒன்றாக்குதல்

தொற்றின் நிமித்தம் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் அடைபட்டிருக்கும்போது, எங்களுடைய குடும்பம் ஒரு உத்வேகமான முயற்சியை ஏறெடுத்தோம். பதினெட்டாயிரம் துண்டுகளை ஒன்றிணைக்கும் ஒரு புதிர் விளையாட்டை மேற்கொண்டோம். அந்த விளையாட்டை ஒவ்வொரு நாளும் நாங்கள் விளையாடினாலும், அது முடிவடைவதாக தெரியவில்லை. நாங்கள் அதைத் துவங்கி ஐந்து மாதங்கள் ஆன பின்பு, ஒன்பதுக்கு ஆறடி அளவுள்ள அந்த படத்தின் கடைசி துண்டை இணைத்தோம். அது எங்கள் உணவு அறையின் தளம் முழுவதையும் நிரப்பிற்று. 

சிலவேளைகளில் என்னுடைய வாழ்க்கை இந்த பெரிய புதிரின் துண்டுகளைப் போல் தளத்தில் சிதறியிருக்கிறது. தேவன் என்னை முற்றிலும் இயேசுவைப் போல் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்னும் நிஜத்தை நான் தெரிந்துகொள்ளும்போதும், அது ஒழுங்காய் நிறைவுபெறாததுபோலவே தெரியும். 

பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபத்தில் பவுல், அவர்கள் செய்த நல்ல கிரியையின் காரணமாக அவர்களுக்காக மகிழ்ச்சியுடன் ஜெபிப்பதாகக் கூறி அவர்களை ஊக்குவித்தது எனக்கு ஆறுதலளித்தது (1:3-4). ஆனால் அவருடைய நம்பிக்கை அவர்களுடைய திறமைகளில் அல்ல, “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று” (வச. 5) நம்புகிறார். 

தேவன் அவருடைய கிரியையை நமக்குள் நிறைவாக்குவார் என்று வாக்களித்திருக்கிறார். அந்த புதிரைப் போல நம்முடைய வாழ்க்கையில் அதிக கவனம் தேவைப்படுகிற காரியங்கள் இருக்கலாம். சிலவைகள் எந்த வளர்ச்சியும் இல்லாமல் தேங்கியிருக்கலாம். ஆனால் நம்முடைய உண்மையுள்ள தேவன் நம்முடைய சிதறிய துண்டுகளை நிச்சயமாய் ஒன்று சேர்த்து நம்மை நிறைவாக்குவார் என்று நாம் உறுதியாய் நம்பலாம். 

அன்பான தலைமைத்துவம்

ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது. 

ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும். 

நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம். 

செந்நீர்

ஸ்காட்டிஷ் தேசிய ஓவிய கண்காட்சி வழியாக நடந்து செல்லும்போது, டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோக் வரைந்த பல ஒலிவ மர ஓவியங்களில் ஒன்றின் அழகு என்னை வெகுவாய் ஈர்த்தது. பல வரலாற்று நிபுணர்கள், இந்த வேலைப்பாடு ஒலிவ மலையில் உள்ள கெத்செமனே தோட்டத்தில் இயேசுவுக்கு உண்டான அனுபவத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்புகிறார்கள். அந்த ஓவியத்தில் என்னை அதிகமாய் ஈர்த்தது என்னவென்றால், அந்த பழைய ஒலிவ மரங்களின் மீது சில சிறிய சிவப்பு தீற்றல்கள். 

ஒலிவ மலையில் ஒலிவ மரங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்பதை அறிந்திருந்த இயேசு, அந்த இரவில் ஜெபிப்பதற்காய் அங்கு கடந்த சென்றார். தன் சீஷர்களில் ஒருவனான யூதாஸ் தன்னை காட்டிக்கொடுப்பான் என்பதையும் முன்னறிவித்தார். அந்த காட்டிக்கொடுக்கப்படுதல் சிலுவையில் அறையப்படுதலுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த இயேசு கவலையினால் நிரப்பப்பட்டார். அவர் ஜெபிக்கும்போது, “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44). அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையில், தன்னுடைய அடிக்கப்படுதலுக்கும் பாடுகளுக்கும் இயேசு ஆயத்தமாயிருந்தார் என்பதற்கு அவருடைய அந்த கெத்சமெனே ஜெபமே ஆதாரமாயிருக்கிறது. 

வான் கோக் வரைந்த ஓவியத்தில் சிதறியிருந்த அந்த இரத்தத் துளிகள், “மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு... ஆகாதவனென்று தள்ளப்பட்டு” (மாற்கு 8:31) உபத்திரவத்தை அனுபவிப்பார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உபத்திரவம் அவருடைய பாதையில் அனுமதிக்கப்பட்டாலும், அது அவருடைய வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. மரணத்தின் மீது இயேசு கொண்ட ஜெயமானது, நம்முடைய உபத்திரவத்தை மேற்கொள்ளச் செய்து, தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கும் அழகான வாழ்க்கைக்கு நம்மை தகுதிப்படுத்துகிறது.