எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டாரா பேட்டன்கட்டுரைகள்

தெய்வீக ஞானம் உயிர்களை இரட்சிக்கிறது

ஒரு தபால்காரர், தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுத்த தபால்கள் அந்த பெட்டியிலிருந்து எடுக்கப்படாமல் அதிலேயே நாளுக்கு நாள் தேங்கியிருப்பதைக் கண்டு சந்தேகப்பட்டார். அந்த வீட்டில் ஒரு வயதான பெண்மணி தனியாக வசித்து வருவது அவருக்கு தெரியும். அவரும் அனுதிமும் தபாலை சேகரித்துக்கொள்வார் என்பதை அறிந்திருந்த அந்த தபால்காரர், அந்தப் பெண்மணியின் அண்டை வீட்டாரில் ஒருவரிடம் அதைக் குறித்து விசாரித்தார். சந்தேகப்பட்ட அவர்கள் இருவரும், ஒரு உதிரி சாவியின் மூலம் அந்த பெண்மணியின் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவள் நான்கு நாட்களுக்கு முன்பு தரையில் மயங்கி விழுந்துகிடப்பதை கண்டறிந்தனர். அவளால் எழுந்திருக்கவோ உதவிக்கு அழைக்கவோ முடியவில்லை. தபால் ஊழியரின் ஞானமும், அக்கறையும், செயலூக்கமான செய்கையும் அவளுடைய உயிரைக் காப்பாற்றியது.

“ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” (11:30) என்று நீதிமொழிகள் கூறுகின்றன. சரியானதைச் செய்வதன் மூலமும், கடவுளுடைய ஞானத்தின்படி வாழ்வதன் மூலமும் வரும் பகுத்தறிவு நம்மை மட்டுமல்ல, நாம் சந்திப்பவர்களையும் ஆசீர்வதிக்கும். அவரையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்துகிற கனிகொடுக்கிற வாழ்க்கையானது, நல்ல மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வாழ்க்கையாக அமையும். நம்முடைய கனிகள் மற்றவர்களை பராமரித்துக்கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையை பொருட்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது.

நீதிமொழிகளின் எழுத்தாளர் புத்தகம் முழுவதும் வலியுறுத்துவது போல, கர்த்தரை சார்ந்திருப்பதிலேயே நம்முடைய ஞானம் வெளிப்படுகிறது. “முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல” (நீதிமொழிகள் 8:11). தேவன் தரும் ஞானம் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்த போதுமானது. இது நித்தியத்திற்கு நேராய் ஆத்துமாக்களை வழிநடத்தக்கூடியது.

விசுவாசத்தில் பார்த்தல்

எனது காலை நடைப்பயணத்தின் போது, ஏரியின் நீரோடை மீது தன் கதிர்களை பாய்ச்சிய சூரியன் ஒரு அழகான காட்சியை ஏற்படுத்தியிருந்தது. நான் புகைப்படம் எடுப்பதற்காக என் கேமராவை நிலைநிறுத்தியபோது என் நண்பரை சற்று எனக்காக காத்திருக்கச் சொன்னேன். சூரியன் ஒளி மின்னியதால் நான் ஷாட்டை எடுப்பதற்கு முன்பு எனது தொலைபேசியின் திரையில் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இதை முன்பே செய்ததால், இது ஒரு சிறந்த படமாக அது இருக்கும் என்று உணர்ந்தேன். நான் என் நண்பரிடம், “இப்போது இதை நம்மால் பார்க்க முடியாது, ஆனால் இதுபோன்ற படங்கள் எப்போதும் நன்றாக வரும்” என்று சொன்னேன். 

நம்முடைய இந்த வாழ்க்கையில் விசுவாசத்தில் நடப்பது பெரும்பாலும் அந்த படத்தை எடுப்பது போன்றதாகும். நீங்கள் எப்போதும் திரையில் விவரங்களைப் பார்க்க முடியாது, ஆனால் அதற்காக அது நல்ல காட்சி இல்லை என்று அர்த்தமில்லை. தேவன் கிரியைசெய்வதை நீங்கள் எப்போதும் பார்க்க முடியாது, ஆனால் அவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்பலாம். எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் எழுதியது போல், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1). தேவன் நம்முடைய வாழ்க்கையில் என்ன கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறியமுடியாதபட்சத்தில், நாம் விசுவாசத்தினால் தேவன் மீது நம்பிக்கை வைக்கிறோம். 

நாம் காணமுடியாத காட்சிகள் நம்மை படம் எடுப்பதிலிருந்து தடுப்பதில்லை. அது நம்மை அதிகமாக ஜெபிக்கவும் தேவனின் வழிநடத்துதலையும் நாடவும் செய்யலாம். கடந்த காலத்தில் விசுவாசத்தில் நடந்த உதாரணங்களையும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் உதாரணங்களையும் அடிப்படையாய் வைத்து நம் விசுவாச பயணத்தை தொடர்ந்து நடத்தமுடியும் (வச. 4-12). கடந்த காலத்தில் கிரியை செய்த அதே ஆண்டவர், இப்போதும் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

தேர்ந்தெடுப்பு

எனது ஆருயிர் நண்பன் மரித்து சில வாரங்கள் கழித்து அவனுடைய தாயாரிடத்தில் நான் பேசினேன். அவர்கள் துக்கமாயிருக்கும் அந்த தருவாயிலும் எப்படியிருக்கிறீர்கள் என்னும் கேள்வி பொருந்தாத கேள்வி என்று தெரிந்தும் அவர்களிடத்தில் நான் அதைக் கேட்டேன். ஆனால் “நான் மகிழ்ச்சியாய் இருப்பதை தெரிந்துகொண்டேன்” என்ற அவர்களுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. 

என் சொந்த வாழ்க்கையில் சில விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தாண்டிச் செல்ல நான் போராடியபோது அவர்களுடைய வார்த்தைகள் எனக்கு உதவியது. உபாகமத்தின் முடிவில் இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் கட்டளையையும் அவளுடைய வார்த்தைகள் எனக்கு நினைவூட்டின. மோசேயின் மரணத்துக்கும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர்கள் நுழைவதற்கும் சற்று முன்பு, அவர்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். மோசே, “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்... நீங்கள் ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்” (உபாகமம் 30:19) என்று கட்டளையிடுகிறார். அவ்வாறு ஜீவனை தெரிந்துகொண்டால், அவர்கள் தேவனுடைய கட்டளைகளை பின்பற்றி நலமாக வாழமுடியும். இல்லையென்றால், தேவனை விட்டு விலகி, “மரணத்தையும் தீமையையும்” (வச. 15) தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்புவதின் மூலம் நாம் மகிழ்ச்சியை தேர்வுசெய்யலாம். அல்லது நம்முடைய வாழ்க்கைப் பாதையின் எதிர்மறையான காரியங்களை தேர்வுசெய்து நம்முடைய மகிழ்ச்சி பறிபோகும்படிக்கும் அனுமதிக்கலாம். அது பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொண்டு செய்யப்படவேண்டியது. “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக” (ரோமர் 8:28) நடத்துகிற தேவனாலே நாம் மகிழ்ச்சியை தேர்ந்தெடுக்கலாம்.

தேவன் நம் பாவத்தை மூடுகிறார்

1950களில் ஒரு ஒற்றைத் தாய் தனது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேலை தேட வேண்டியிருந்தபோது, அவருக்கு தட்டச்சு வேலை கிடைத்தது. ஒரே பிரச்சினை என்னவென்றால், அவள் நேர்த்தியாய் தட்டச்சு செய்பவள் அல்ல; தொடர்ந்து தவறுகளைச் செய்தாள். அவள் தனது பிழைகளை மறைப்பதற்கான வழிகளைத் தேடினாள். இறுதியில் தட்டச்சுப் பிழைகளை மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெள்ளைத் திருத்த திரவமான, திரவக் காகிதம் என்று அழைக்கப்படும் ஒன்றை கண்டுபிடித்தாள். அது காய்ந்ததும், பிழைகள் இல்லாதது போல் வெண்மையான பின்பு, மீண்டும் அதின் மீது புதிதாய் தட்டச்சு செய்யமுடியும். 

நம்முடைய பாவத்தை சமாளிக்க நேர்த்தியான சக்திவாய்ந்த வழியை இயேசு நமக்கு கொடுக்கிறார். மூடிமறைத்தல் இல்லை, அது முழுமையான மன்னிப்பு. இதற்கு ஒரு நல்ல உதாரணம் யோவான் 8 ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் விபச்சார பாவத்தில் சிக்கிய ஒரு ஸ்திரீயின் சம்பவத்திலிருந்து காட்டப்படுகிறது (வச. 3-4). அந்த ஸ்திரீக்கும் அவள் செய்த பாவங்களுக்கும் இயேசு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்கிருந்த நியாயதிபதிகள் விரும்பினர். அவள் கல்லெறியப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. ஆனால் இயேசு நியாயப்பிரமாணம் என்ன சொல்லுகிறது என்பதைக் குறித்து சற்றும் யோசிக்கவில்லை. மாறாக, எல்லாரும் பாவம் செய்தவர்கள் தான் என்று (ரோமர் 3:23ஐப் பார்க்கவும்), உங்களில் பாவமில்லாதவன் அந்த ஸ்திரீயின் மீது கல்லெறியக்கடவன் (யோவான் 8:7) என்று சொல்லுகிறார். ஒரு கல்லும் எறியப்படவில்லை. 

இயேசு அவளுக்கு ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்தினார். அவளை அவர் குற்றவாளியாய் தீர்க்கவில்லை என்று சொல்லி, “இனிப் பாவஞ்செய்யாதே” (வச. 11) என்று சொல்லுகிறார். அவளுடைய பாவ வாழ்க்கைக்கான் தீர்வையும், இனி அவள் பாவம் செய்யாமல் வாழும் வாழ்க்கைக்கான புதிய துவக்கத்தையும் இயேசு அருளுகிறார். அவருடைய கிருபையினாலே அந்த வாய்ப்பை தேவன் நமக்கும் அருளுகிறார். 

ஆசீர்வாதமான முகமூடி

தொற்றுநோயின் நாட்களில் முகமூடி அணியும் சட்டம் சற்று தளர்த்தப்பட்டதால், என்னுடைய மகளுடைய பள்ளி போன்ற முக்கியமான இடங்களில் கூட அவற்றை எடுத்துச் செல்ல மறந்து நான் சிரமப்பட்டேன். ஒரு நாள் எனக்கு முகமூடி தேவைப்பட்டபோது, எனது காரில் ஒரு முகமூடி இருந்ததை கண்டேன். அதில் “ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று வாசகம் எழுதப்பட்டிருந்ததால், அதை அணிவதற்கு தயங்கி, காரிலேயே வைத்திருந்தேன். 

எந்த வாசகமும் இல்லாத முகமூடியை அணிவதற்கு நான் விரும்புவேன். ஆனால் அந்த முகமூடியில் வாசகம் மிகவும் பெரிதாய் எழுதப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு வேறுவழியில்லை என்பதினால் அதை அணிந்துகொண்டேன். பள்ளியில் வரவேற்பாளரிடம் என் கோபத்தை வெளிப்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, என் முகமூடியில் இருந்த வாசகத்தின் காரணமாக நான் சற்று தயங்கி, சுதாரித்துக்கொண்டேன். என் முகமூடியில் ஆசீர்வதிக்கும் வார்த்தைகளை மிளிரச்செய்து, பார்ப்பவர்களிடம் வெறுப்பைக் காண்பிக்கும் பாசாங்கு செய்வதற்கு நான் விரும்பவில்லை.

என் முகமூடியில் தென்பட்ட அந்த வார்த்தைகள் கிறிஸ்துவின் சாட்சியாய் நாம் இருக்கவேண்டியதின் அவசியத்தை நமக்கு வலியுறுத்தினாலும், மற்றவர்களோடு நாம் பொறுமையாய் இருக்கவேண்டியதின் முக்கியத்துவத்தை வேதத்தின் வார்த்தைகள் என் இருதயத்தில் உணர்த்தின. கொரிந்தியருக்கு பவுல் எழுதும்போது, “நீங்கள்... கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல… இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது” ( 2 கொரிந்தியர் 3:3) என்று சொல்லுகிறார். நமக்கு ஜீவனை அருளும் ஆவியானவர், “அன்பு, சந்தோஷம், சமாதானம்” மற்றும் “நீடிய பொறுமை” (கலாத்தியர் 5:22) ஆகியவற்றை பெற்றுக்கொள்ள நமக்கு துணைசெய்வாராக. நமக்குள் கிரியை செய்யும் அவருடைய பிரசன்னத்தினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

பிள்ளையின் விசுவாசம்

நாங்கள் தத்தெடுத்துக்கொண்ட எங்களது பாட்டி பக்கவாதநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய மூளை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மருத்துவர்களால் கணிக்கமுடியவில்லை. அதை தெரிந்துகொள்வதற்கு அவர்கள் சரீரப்பிரகாரமாக இன்னும் தேர்ச்சியடையவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். படுக்கையிலிருந்த அவர் ஒரு சில வார்த்தைகளையே பேசினார். அவற்றிலும் சிலவற்றையே புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பன்னிரெண்டு வருடங்களாக என் மகளை பராமரித்து பாதுகாத்த எண்பத்தாறு வயது மூதாட்டி என்னைப் பார்த்ததும், தன்னுடைய வாயைத் திறந்து “கெய்லா எப்படி இருக்கிறாள்?” என்று என் மகளைக் குறித்து விசாரித்தார். அவர் மிகவும் ஆழமாகவும் முழுமையாகவும் நேசித்த என்னுடைய மகளைக் குறித்த கேள்வியே அந்த கடினமான சூழ்நிலையில் அவர் என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி.

இயேசு குழந்தைகளை அதிகமாய் நேசித்தார். அவருடைய சீஷர்கள் தடைசெய்தபோதும் இயேசு குழந்தைகளை தன்னிடமாய் வரவழைத்துக்கொண்டார். அங்கிருந்த சில பெற்றோர்கள் இயேசுவிடத்திற்கு தங்களுடைய பிள்ளைகளை கொண்டுவர விரும்பினர். இயேசு தன்னுடைய கரங்களை அந்த பிள்ளைகளின் மீது வைத்து அவர்களை ஆசீர்வதித்தார் (லூக்கா 18:15). ஆனால் அவர் சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கிறதை அங்கிருந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சீஷர்கள் இயேசுவை தொந்தரவுசெய்யவேண்டாம் என்று பெற்றோர்களை அதட்டுகின்றனர். ஆனால் இயேசு குறுக்கிட்டு, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” (வச. 16) என்றார். அவர் சிறுபிள்ளைகளை முன்னிலைப்படுத்துவதின் மூலம் தேவனுடைய இராஜ்யத்தை எந்த அளவிற்கு எளிமையுடனும், நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு மாதிரிப்படுத்திக் காண்பித்தார்.

சிறுபிள்ளைகளுக்கு ஒளிவுமறைவு கிடையாது. எதைப் பார்க்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள விரும்புவர். இந்த குழந்தைகளின் விசுவாசத்தை நாம் பெற்றுக்கொள்ள நம்முடைய பரமபிதா உதவுகிற தருவாயில், ஒரு சிறுபிள்ளையைப் போல நம்பிக்கையோடு அவரை சார்ந்திருக்க நாம் பிரயாசப்படுவோம்.

தாழ்மையை தரித்தல்

“ஃப்ரோசன் ட்ரீட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி “அண்டர்கவர் பாஸ்” என்ற தொலைக்காட்சித் தொடரில், காசாளர் சீருடை அணிந்தவராக நடித்தார். அவரது செயற்கை முடியும், ஒப்பனையும் அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, ஒரு புதிய பணியாளரைப் போல் தோற்றம் தரவே, தனது நிறுவனத்தின் அங்காடிகளில் ஒன்றில் பணியாற்றினார். தனது நிறுவனத்தில் விஷயங்கள் உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவர் அவ்வாறு மாறுவேடத்தில் சென்றார்.  மேலும் அதன் மூலம் அங்காடி எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அவரால் தீர்க்க முடிந்தது.

 

நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இயேசு ஒரு "தாழ்மையான நிலையை" (பிலிப்பியர் 2:7) எடுத்தார். அவர் மனிதனாகி பூமியில் இருந்து, தேவனைப் பற்றி நமக்குக் கற்பித்தார், இறுதியில் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (வச. 8). இந்தப் பலி கிறிஸ்துவின் மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. அவர் கீழ்ப்படிதலுடன் தம் ஜீவனை நமது பாவநிவாரன பலியாக கொடுத்தார். அவர் பூமியில் ஒரு மனிதனாக இருந்து, நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அவரும் அனுபவித்தார்.

 

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், நம் இரட்சகரைப் போலவே "அதே மனப்பான்மையுடன்" இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக மற்ற விசுவாசிகளுடனான நமது உறவுகளில் (வ.5) மனத்தாழ்மையை அணிந்துகொள்ள தேவன் நமக்கு உதவுவார் (வ.3). கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாயிருந்து (வ.5) மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் ஊழியர்களாக வாழ அவர் நம்மை அழைக்கிறார். அவர்களை நேசிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செய்யவும், தேவன் நம்மை சிறந்த நிலையில் பயன்படுத்துவார்.

மெய்யான மார்க்கம்

எனது இரண்டாம் ஆண்டு கல்லூரியின் கோடை விடுமுறைக்கு பிறகு, என்னுடைய ஒரு வகுப்புத் தோழர் எதிர்பாராத விதமாக இறந்துபோனார். நான் அவரை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன், அவர் நன்றாக இருந்தார். நானும் என்னுடைய வகுப்பு தோழர்களும், வாழ்நாள் முழுவதும் நாம் சகோதர சகோதரிகளாய் இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். 

எனது வகுப்புத் தோழனின் மரணம் பற்றி எனக்கு அதிகம் ஞாபகம் இருப்பது என்னவென்றால், அப்போஸ்தலர் யாக்கோபு, “சுத்தமான பக்தி” (யாக்கோபு 1:27) என்று அழைப்பதற்கு ஏற்ற ஒரு வாழ்க்கையை என் நண்பர்கள் தெரிந்தெடுத்தார்கள். இறந்துபோன அந்த தோழனின் சகோதரிக்கு நாங்கள் சகோதரர்களாய் இருப்போம் என்று தீர்மானித்தோம். அவளுடைய சகோதரன் மரித்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் நாங்கள் சகோதரனுடைய ஸ்தானத்தில் அவளுடைய திருமணம் மற்றும் வளைகாப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்றோம். அவளுக்கு எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போது அழைப்பு விடுப்பதற்காக எங்களில் ஒருவர் அவளுக்கு ஒரு செல்போனையும் பரிசளித்தார். 

யாக்கோபின் கூற்றுப்படி, திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதே சுத்தமான பக்தியாகும் (வச. 27). என்னுடைய சிநேகதனின் சகோதரி யாருமில்லாத திக்கற்றவள் இல்லையெனினும், அவளுடைய சகோதரன் இனி இல்லை. அவளுடைய புதிய சகோதரர்கள் அந்த இடத்தை நிரப்பினர். 

இயேசுவில் சுத்தமான மற்றும் மெய்யான வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்கள், தேவையிலுள்ளவர்களை பராமரித்து (2:14-17),  “(திருவசனத்தின்படி) செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்ற ஆலோசனைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு உதவும்போது,உலகின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும்போது, அவர்மீது நமக்குள்ள நம்பிக்கையானது தேவையில் உள்ளவர்களை பராமரிக்க நம்மைத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே தேவன் அங்கீகரிக்கும் சுத்தமான பக்தி.

தேவன் பெயர்களை அறிந்திருக்கிறார்

நான் திருச்சபையின் வாலிபர் குழு தலைவியாய் பொறுப்பேற்று, பல வாலிபர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த வேளையில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது தன் தாயின் அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு இளம் வாலிப பெண்ணிடம் பேசினேன். அதிக வெட்கப்படும் அந்த பெண்ணைப் பார்த்து, ஒரு புன்னகையோடு அவளுடைய பெயரை நான் சொல்லி அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டேன். அவள் தன்னுடைய தலையை உயர்த்தி, அழகான கண்கள் விரிய என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்னுடைய பெயர் ஞாபகம் இருக்கிறதா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். வயதில் மூத்தவர்களாய் நிறைந்திருந்த அந்த திருச்சபையில் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அழைத்ததால், அவளுடன் நம்பிக்கையான ஒரு உறவை ஏற்படுத்த என்னால் முடிந்தது. அவளை ஒரு பொருட்டாக எண்ணுகிறார்கள் என்ற நம்பிக்கை அவளுடைய சுயமதிப்பை கூடச் செய்தது. 

ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் அதேபோன்ற ஒரு செய்தியை இஸ்ரவேலர்களுக்கு சொல்லும்படிக்கு தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை பயன்படுத்துகிறார். தேவன் இஸ்ரவேலர்களை காண்கிறார் மற்றும் அவர்களை மதிப்பிடுகிறார் என்பதே அச்செய்தி. சிறையிருப்பிலும் வனாந்திரத்திலும் தேவன் அவர்களைக் கண்டு அவர்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார் (வச. 1). அவர்கள் வேறுயாரோ அல்ல; அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள். அவர்கள் கைவிடப்பட்டவர்களாய் தெரிந்தாலும், அவர்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அவர்களைக் குறித்த அவருடைய அன்பு மாறாதது (வச. 4). தேவன் அவர்களை பேர்ச் சொல்லி அழைக்கிறார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுவதின் மூலம் அவர்களுடைய அந்த இக்கட்டான தருணத்தில் தேவன் அவர்களுக்கு செய்யப்போகிற நன்மைகளை அறிவிக்கிறார். அவர்கள் பாடுகளின் பாதையில் பயணிக்கும்போது தேவன் அவர்களோடே இருப்பார் (வச. 2). தேவன் அவர்களின் பெயர்களை அறிந்திருப்பதால் அவர்கள் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை. 

நாம் நம்முடைய வாழ்க்கையின் ஆழமான ஆழிகளைக் கடக்கும்போது தேவன் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயர்களையும் அறிந்திருக்கிறார் என்பதே நமக்கான நற்செய்தி.