எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் ஹுவாங்கட்டுரைகள்

சுவிசேஷத்தினிமித்தம்

நெல்சன், 1916ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருத்துவ பட்டம் பெற்றார். அந்த ஆண்டின் இறுதியில், அவரும் திருமணமாகி ஆறுமாதமான அவருடைய மனைவியும் சீனாவுக்கு வந்து சேர்ந்தனர். தன்னுடைய 22 வயதில் அந்த மருத்துவமனைக்கு மருத்துவராகப் பொறுப்பேற்றார். இரண்டு மில்லியன் மக்கள் வாழும் அந்த பகுதியில் இருக்கும் ஒரே மருத்துவமனை இது. 24 ஆண்டுகள் அந்த பகுதியில் குடும்பத்தோடு தங்கியிருந்து, மருத்துவமனையையும் நடத்திக்கொண்டு, அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சுவிசேஷத்தையும் நெல்சன் பகிர்ந்தார். ஆரம்பத்தில் “அந்நிய சத்துரு” என்று மக்கள் தங்கள் நம்பிக்கையில்லாமையை வெளிப்படுத்தினாலும், பின் நாட்களில், “சீன தேசத்து மக்களை நேசிக்கும் நெல்சன்” என்று அவரை அன்போடு அழைத்தனர். அவருடைய மகளான ரூத், சுவிசேஷகரான பில்லி கிரகாமை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திறமையான மருத்துவராகவும் நேர்த்தியான வேதாகம ஆசிரியராகவும் இருந்தாலும்; அவருடைய திறமை அல்ல, அவருடைய சுபாவங்களே மற்றவர்களைத் தேவனுக்கு நேராய் நடத்திற்று. கிரேத்தா தீவிலிருக்கும் திருச்சபைக்குப் பொறுப்பாயிருந்த தீத்து என்னும் புறஜாதி ஊழியனுக்கு பவுல் நிருபம் எழுதியபோது, கிறிஸ்துவைப்போல் வாழ்வது முக்கியமானது; ஏனெனில் அதுவே சுவிசேஷத்திற்கு அலங்காரம் என்று அறிவுறுத்துகிறார் (தீத்து 2:10). ஆகிலும் அதை நாம் நம்முடைய சுயபெலத்தோடே செய்ய முடியாது. கர்த்தருடைய கிருபையானது நம்மை “தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய்” மாற்றி (வச.12), ஆரோக்கியமான உபதேசத்துக்கு (வச.1) பாத்திரர்களாய் நம்மை உருவாக்கும்.
நம்மை சுற்றியுள்ள அநேகருக்கு கிறிஸ்துவின் நற்செய்தி தெரியாது. ஆனால் அவர்களுக்கு நம்மை தெரியும். அவருடைய நற்செய்தியை அலங்கரிக்கப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துவதற்குத் தேவன் நமக்கு உதவிசெய்வாராக.

நீ இன்னும் என்னை நேசிப்பாயா?

பத்து வயது நிரம்பிய லின்-லின் தத்தெடுக்கப்பட்டாள். ஆனால் அவள் மிகவும் பயந்திருந்தாள். அவள் வளர்ந்த ஆசிரமத்தில், சிறிய தவற்றுக்குக்கூட அவள் தண்டிக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். அவளைத் தத்தெடுத்த தாய், என்னுடைய சினேகிதி. அவள் தன் தாயைப் பார்த்து, “அம்மா, நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?’ என்று கேட்க, என்னுடைய சினேகிதியும் “ஆம்” என்ற தலையசைக்க, “நான் தவறு செய்தாலும் என்னை நேசிப்பீர்களா?” என்று ஆர்வத்துடன் கேட்டாளாம்.
நம்மில் சிலரும் தேவனை துக்கப்படுத்திவிட்டு, “நீர் இன்னும் என்னை நேசிக்கிறீரா?” என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டப்படலாம். இந்த உலகத்தில் நாம் வாழும்வரை நாம் சிலசமயம் பாவத்தால் வீழ்வோம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் என்னுடைய தப்பிதங்கள், என் மீதான தேவனுடைய அன்பை மாற்றக்கூடுமோ? என்று நாம் வியப்படையலாம்.
யோவான் 3:16, தேவனுடைய அன்பை நமக்கு உறுதியளிக்கிறது. அவர் தன்னுடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக தந்தருளினார், அவரை விசுவாசித்தால், நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர் மீது விசுவாசம் வைத்த பின்பு நாம் பாவம் செய்தால் என்ன நேரிடும்? அந்த தருணத்தில்தான், நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார் என்னும் மேலான சத்தியத்தை நினைவுகூரவேண்டும் (ரோமர் 5:8). நாம் பாவிகளாயிருக்கும்போதே அவர் நம்மீது அன்பு வைத்திருப்பார் என்றால், இன்று அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் நாம் எப்படி அவருடைய அன்பைச் சந்தேகப்பட முடியும்?
நாம் பாவம் செய்யும்போது நம்முடைய பரமபிதா அன்போடு சிட்சித்து, நம்மை உருவாக்குகிறார். அது நம்மை புறக்கணிப்பது அல்ல (8:1); அது அன்பின் பிரதிபலிப்பு (எபிரெயர் 12:6). நம் மீதான அவருடைய அன்பு சீரானது மற்றும் நிலையானது என்னும் நம்பிக்கையில், அவருடைய அன்பின் பிள்ளைகளாய் இளைப்பாறுவோம்.

அவர் நாமத்தை நம்புங்கள்

நான் சிறுவயதாக இருக்கும் போது பள்ளிக்கு செல்வதென்றாலே எனக்கு ஒரு பயம். ஏனெனில் சில மாணவிகள் என் மனம் நோகும்படியாக என்னைக் கேலி செய்வர். ஆகவே இடைவேளையின்போது நூலகத்தில் ஒளிந்துகொண்டு, அங்கேயிருந்த கிறிஸ்தவ கதைபுத்தகங்களை வாசிக்கத் துவங்கினேன். "இயேசு" என்ற பெயரை முதன்முதலாக வாசித்ததும், இது என்னை நேசிக்கும் ஒருவரின் பெயரென்று அறிந்துகொண்டேன். அடுத்து வந்த மாதங்களில், நான் பள்ளிக்குள் நுழையும்போதெல்லாம் எனக்கு முன்னிருந்த பயமுறுத்தும் காரியங்களை எண்ணி, "இயேசுவே, என்னைக் காத்தருளும்" என்று ஜெபிப்பேன். அவர் என்னைப் பார்க்கிறார் என்றறிந்து, தைரியமாகவும், அமைதியாகவும் இருந்தேன். இடைப்பட்ட நேரத்தில், அந்த மாணவிகளும் என்னைக் கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டனர். ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவனை நம்புவதென்பது என் வாழ்வில் தொடர்ந்து கொண்டேயிருந்தது. தேவன் உண்மையுள்ளவர் என்றெண்ணி, அவருடைய நாமத்தை நம்பி, அவரையே சார்ந்து கொண்டேன். தேவனுடைய நாமத்தை நம்புவதிலுள்ள பாதுகாப்பை தாவீதும் அறிந்திருந்தார். அவர் சங்கீதம் 9 ஐ இயற்றுகையில், தேவனே நீதியாய் நியாயம் செய்யும் சர்வவல்ல நியாயாதிபதி (வ.7–8, 10, 16) என்பதை அனுபவித்திருந்தார். எனவே தன்னுடைய பகைவர்களுக்கு எதிராக யுத்தஞ்செய்கையில், தன்னுடைய ஆயுதங்களையோ, இராணுவ சாமர்த்தியத்தையோ நம்பாமல், "நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்" (வ. 9) என்று தேவனை நம்பி, அதையே வெளிக்காட்டினார்.

அவருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு அவரைக் கூப்பிடுகையில், எவ்வாறெல்லாம் அவர் உதவிசெய்வார் என்பதை, ஒரு சிறுமியாக நான் அனுபவித்துள்ளேன். நம் அனைவரையும் நேசிக்கும் நாமமான "இயேசு" என்ற நாமத்தை எப்பொழுதும் நாம் நம்புவோமாக.

உங்களுக்கு உதவி தேவைப்படும்போது

அது ஒரு திங்கட்கிழமை காலை நேரம். என்னுடைய நண்பர் தீபக் அலுவலகத்தில் இல்லை. அவர் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். ஒரு மாத காலமாய் வேலை இல்லாமையினால் சிரமப்பட்டார். கோவிட்-19 தொற்று காரணமாக அவருடைய நம்பிக்கை தகர்க்கப்பட்டு, எதிர்காலத்தைக் குறித்த பயம் அவரை ஆட்கொண்டது. அவருடைய குடும்பத்தை அவர் தாங்கவேண்டும் என்று அவர் எண்ணினார். உதவிக்கு எங்கு போவது? 

சங்கீதம் 121:1இல் எருசலேமுக்கு பரதேசப் பயணம் மேற்கொண்ட சங்கீதக்காரன் தனக்கு ஒத்தாசை எங்கிருந்து வரும் என்ற அதே கேள்வியை கேட்கிறான். சீயோன் பர்வதத்தில் இருக்கும் பரிசுத்த நகரத்திற்கு போகும் பயணமானது நீண்ட ஆபத்தான பயணம். பல மலைகளை கடக்கவேண்டியிருக்கும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களும் ஏறத்தாழ அவர்கள் சந்திக்கும் சவால்களைப் போன்றதே, வியாதி, உறவுமுறை பிரச்சனைகள், துயரம், வேலையில் மன உளைச்சல் என்பன. தீபக் பணத்தேவை மற்றும் வேலையில்லாமை ஆகிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தரிடத்திலிருந்து நமக்கு ஒத்தாசை வரும் என்று நம்முடைய இருதயத்தை தேற்றிக்கொள்ள முடிகிறது (வச. 2). 

அவர் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்  (வச. 3,5,7-8), நம்முடைய தேவை என்ன என்பது அவருக்குத் தெரியும். பார்த்துக்கொண்டிருத்தல் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட “ஷாமர்” என்னும் எபிரெய வார்த்தைக்கு “பாதுகாத்தல்” என்று பொருள். உலகத்தை உண்டாக்கிய தேவன் நமக்கு பாதுகாவலராயிருக்கிறார். அவருடைய பாதுகாப்பில் நாம் இருக்கிறோம். “தேவன் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதுகாத்தார்: சரியான தருணத்தில் எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்கச் செய்தார்” என்று சமீபத்தில் தீபக் சாட்சி சொல்லக்கேட்டேன்.

நாம் தேவனை நம்பி ஒவ்வொரு அடியிலும் அவருக்கு கீழ்ப்படியும்போது, நாம் தேவனுடைய ஞானம் மற்றும் அன்பு என்னும் பாதுகாப்பு வளையத்திற்குட்பட்டிருக்கிறோம் என்பதை நாம் பார்க்க முடியும்.

தேவன் உன்னை காண்கிறார்

தகப்பனால் கைவிடப்பட்ட குடும்பத்தில், இரண்டு பிள்ளைகளுக்கு தாயாயிருக்கும் எனது தோழி அல்மாவுக்கு அதிகாலைகள் வேதனையாக இருக்கும். அவள், “எல்லாம் அமைதியாக இருக்கும்போது, கவலைகள் மேலெழுகின்றன. நான் வீட்டு வேலைகளைச் செய்யும்போது, எங்களின் பொருளாதாரக் கவலைகள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் படிப்புகளைப் பற்றி யோசிப்பேன்” என்று சொல்லுவாள். 

கணவன் அவளைக் கைவிட்டபோது, தன் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அல்மா சுமந்தாள். “இது கடினம், ஆனால் தேவன் என்னையும் என் குடும்பத்தையும் காண்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் எனக்கு இரண்டு வேலைகளைச் செய்ய பலத்தைத் தருகிறார்; எங்கள் தேவைகளை சந்திக்கிறார், மேலும் ஒவ்வொரு நாளும் அவருடைய வழிகாட்டுதலின் படி என் குழந்தைகளை நடக்க உதவிசெய்கிறார்” என்று அவள் சொல்கிறாள். 

எகிப்திய அடிமைப் பெண்ணான ஆகார், தேவனால் பார்க்கப்படுவதின் அர்த்தம் என்னவென்று புரிந்துகொண்டாள். அவள் ஆபிரகாமால் கர்ப்பமான பிறகு, அவள் சாராளை வெறுக்க ஆரம்பித்தாள் (ஆதியாகமம் 16:4). சாராளும் அவளை தவறாக நடத்தினாள். இதனால் ஆகார் வனாந்திரத்திற்கு தப்பி ஓடினாள். ஆகார் தனக்கும், தனக்கு பிறக்கப்பபோகிற பிள்ளைக்குமான எதிர்காலம் இருண்டிருப்பதைக் கண்டு தனிமையாக உணர்ந்தாள். 

ஆனால் வனாந்திரத்தில் “கர்த்தருடைய தூதன்” (வச. 7) அவளைச் சந்தித்து, “கர்த்தர் உன் துயரத்தைக் கேட்டிருக்கிறார்” (வச. 11) என்று கூறினார். தேவதூதன், ஆகாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டினார். மேலும் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று அவர் அவளுக்கு உறுதியளித்தார். அவளிடமிருந்து நாம் தேவனின் பெயர்களில் ஒன்றான – எல்ரோயீ “என்னைக் காண்கின்ற தேவன்” (வச. 13) என்ற நாமத்தைப் பெற்றுக்கொண்டோம். 

ஆகாரைப் போலவே, நீங்களும் வாழ்க்கையின் கடினமான பயணத்தில் தொலைக்கப்பட்டவர்களாய் தனிமையை உணரலாம். ஆனால் வறண்ட நிலத்திலும் தேவன் உங்களைப் பார்க்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவரை அணுகி, அவர் உங்களை வழிநடத்துவார் என்று நம்புங்கள்.