இயேசு கையை நீட்டி
சில வேளைகளில் நம் வாழ்வு அநேக வேலைகளால் நெருக்கப்பட்டு விடுகிறது. கடினமான வகுப்புகள், சோர்வடையச் செய்யும் வேலை, குளியல் அறை கழுவப்பட வேண்டும், அந்த நாளில் ஒருவரோடு காப்பி அருந்த அழைக்கப்பட்டுள்ளோம். இங்கேதான் நான் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது வேதத்தை வாசிக்க என்னைக் கட்டாயப்படுத்திக்கொண்டு, அடுத்த வாரம் நான் அதிக நேரம் என் தேவனோடு செலவழிப்பேன் என எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். எந்த உதவியையும் கேட்க மறந்துவிட்டேன் என்று எண்ணி அவருக்கு நேராகத் திருப்பப்பட்டேன்.
பேதுரு இயேசுவை நோக்கி, தண்ணீர் மேல் நடந்தபோது, காற்றும் அலைகளும் அவனைத் திசை திருப்பிவிட்டன. என்னைப் போன்று அவன் மூழ்க ஆரம்பித்தான் (மத். 14:29-30). ஆனால், அவன் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, “உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்துக் கொண்டார்” (வச. 30-31).
நான் என்னுடைய வேலைகளில் மிகவும் மூழ்கி விட்டபின்புதான், திருப்பப்பட்டு இவற்றையெல்லாம் தேவனிடம் கொடுத்திருக்கலாமே என பின்னர் நினைத்ததுண்டு. ஆனால், தேவன் அப்படி வேலை செய்பவரல்ல. நாம் எப்பொழுது அவரிடம் உதவிக்காகத் திரும்புகிறோமோ அப்பொழுது தேவன் எந்த தயக்கமுமின்றி தம் கையை நீட்டுகின்றார்.
நம் வாழ்வின் குழப்பங்களோடு நாம் போராடிக் கொண்டிருக்கும் போது, அந்தப் புயலின் மத்தியில் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதைக் காண மறந்து விடுகிறோம். இயேசு பேதுருவிடம், “அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார் (வச. 31). நாம் எந்தப் பிரச்சனை வழியே சென்று கொண்டிருந்தாலும் சரி, தேவன் அங்கிருக்கின்றார், தேவன் இங்கிருக்கின்றார், நம் அருகிலிருக்கின்றார். இப்பொழுதும் தம் கைகளை நீட்டி நம்மைக் காப்பாற்ற ஆயத்தமாயிருக்கிறார்.
குப்பைக் கூடையினுள் மோதிரம்
என்னுடைய கல்லூரி விடுதியில், ஒருநாள் காலை எழுந்தபோது, என்னுடைய அறைத் தோழி கேரல் பயத்தால் பீதியடைந்து உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். அவளுடைய முத்திரை மோதிரம் தொலைந்துவிட்டது. நாங்கள் எல்லாவிடத்திலும் தேடினோம், அடுத்த நாள் காலையில் நாங்கள் குப்பைக் கூடையினுள் தேடினோம். நான் வேகமாகக் குப்பைப் பையைத் திறந்தேன். “நீ இதைத் தேடுவதில் மிகவும் அர்ப்பணத்தோடிருக்கின்றாய்” என்றாள். “இருநூறு டாலர் மோதிரத்தை நான் இழக்கப் போவதில்லை” என்று உறுதியாயிருந்தாள்.
கேரலின் உறுதியான எண்ணம் இயேசு கூறிய ஓர் உவமையை எனக்கு நினைவுபடுத்தியது. “பரலோக இராஜ்ஜியம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்கிறான்” (மத். 13:44) என்றார். சில பொருட்கள் அதிக முயற்சியெடுத்துத் தேடக் கூடிய மதிப்பைப் பெற்றுள்ளது.
தேவனைத் தேடுகின்றவர்கள் கண்டடைவார்கள் என்று தேவன் வேதாகமத்தில் பல இடங்களில் வாக்களித்துள்ளார். உபாகமத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி, முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தேவனைத் தேடும் போது அவரைக் கண்டடைவார்கள் என கூறப்பட்டுள்ளது (4:28-29). 2 நாளாகமத்தில் ஆசா இராஜாவும் இதே வாக்குத்தத்தத்தால் ஊக்குவிக்கப்படுகின்றார் (15:2) எரேமியா புத்தகத்தில் சிறையிருப்பிலிருக்கின்ற இஸ்ரவேலரிடம் தேவன் இந்த வாக்குத்தத்தத்தையே எடுத்துரைக்கின்றார். தேவன் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து மீட்பாரென உரைக்கின்றார் (29:13-14).
நாம் தேவனை நம் அனுதின வாழ்வில் அவருடைய வார்த்தையின் மூலமாயும், அவரை ஆராதிப்பதாலும் அவரைக் கண்டுகொள்ள முடியும். நாளடைவில் அவரை நன்கு ஆழமாகத் தெரிந்துகொள்வோம். அதுவே, கேரல் தன்னுடைய மோதிரத்தை அந்த குப்பைப் பையிலிருந்து எடுத்த போதிருந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இனிமையான அனுபவமாகும்.
தேவனுடைய வழி நடத்தலுக்கு நம்முடைய பதில்
2015 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதத்தில் என்னுடைய வீட்டிலிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவிலுள்ள ஒரு பல்கலைகழகத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய பட்டமளிப்பு முடிந்து மீண்டும் நான் வீட்டிற்கு வர இயலாததென உணர்ந்தேன். என் சிந்தனைகள் வட்டமிட்டன. எப்படி வீட்டை விட்டுச் செல்வது? என்னுடைய குடும்பம்? என்னுடைய தேவாலயம்? ஒரு வேளை தேவன் என்னை வேறொரு மாநிலம் அல்லது தேசத்திற்கு அழைத்தால் என்னவாகும்? என என் சிந்தனையில் ஓடியது.
மோசேயிடம் தேவன் ‘‘நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” என்று சொன்னபோது மோசே பயந்தான் (யாத். 3:10). நானும் மிகவும் பயந்தேன். நான் என்னுடைய வசதி எல்லையை விட்டுச் செல்ல விரும்பவில்லை. ஆனால் மோசே கீழ்ப்படிந்து தேவனைப் பின்பற்றினான். ஆனாலும் அதற்கு முன் தேவனை வினாவவும், வேறொருவரை தனக்குப் பதிலாக அனுப்பும்படியும் கேட்டபின் தான், தேவனுக்குக் கீழ்ப்படிந்தான் (வச. 11-13; 4:13).
மோசேயின் எடுத்துக்காட்டிலிருந்து, நமக்கொரு தெளிவான அழைப்பு இருக்கும் பொழுது நாம் எதைச் செய்யக் கூடாதென்பதைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் சீடர்களைப் போல இருக்க முயற்சிப்போம். இயேசு அவர்களை அழைத்த போது, அவர்கள் யாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள் (மத். 4:20-22; லூக். 5:28). பயம் வருவது இயல்புதான். ஆனால் தேவத் திட்டத்தை நம்பலாம்.
வீட்டை விட்டு அதிகத் தொலைவில் செல்வதென்பது கடினமாகத்தானிருந்தது. ஆனால் நான் தொடர்ந்து தேவனைத் தேட ஆரம்பித்தபோது, அவர் எனக்கு கதவுகளைத் திறந்தார். அது, நான் தேவன் குறித்த இடத்தில்தான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தியது.
வசதி எல்லையிலிருந்து நம்மை வெளியேற்றி, வழி நடத்தப்படும்போது நாம் மோசேயைப் போன்று தயக்கத்தோடு செல்லலாம் அல்லது சீடர்களைப் போன்று மனப்பூர்வமாகச் செல்லலாம். சில வேளைகளில் நம்முடைய வசதி வாழ்க்கையை விட்டு சில நூறு மைல்கள் அல்லது ஆயிரம் மைல்கள் கூட செல்ல நேரலாம். அது எத்தனை கடினமானதாயினும் தேவனைப் பின்பற்றுவது மதிப்பு மிக்கது.
நீங்கள் ஆயத்தமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
நான் உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, இரண்டு ஆண்டுகளாக ஒரு துரித உணவு விடுதியில் பணி செய்து கொண்டிருந்தேன். அந்த வேலையில் சில காரியங்கள் மிகவும் கடினமானவைகளாக இருக்கும். உதாரணமாக வாடிக்கையாளர்களின் ரொட்டித் துண்டுகள் மேல் மற்ற பணியாட்கள் தெரியாமல் வைத்த பாலாடை கட்டிக்காக (Chese) என்னைக் கடினமான வார்த்தைகளால் கடிந்து கொள்வார்கள். நான் அந்தப் பணியை விட்டபின், எனது பல்கலைக்கழகத்தில் ஒரு கணினி மையத்தில் பணிக்குச் சேர விண்ணப்பித்தேன். என்னை பணியில் அமர்த்தினவர்கள் எனது கணினி திறமைகளைவிட, நான் துரித உணவு விடுதியில் பெற்ற அனுபவங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதாவது மக்களை எவ்வாறு கையாளுவது என்று நான் அறிந்திருக்கிறேனா என்பதை அறிய விரும்பினார்கள். துரித உணவு விடுதியில் இருந்த மோசமான சூழ்நிலைகளில் நான் பெற்ற அனுபவங்கள் சிறந்த ஒரு பணிக்கு என்னை ஆயத்தப்படுத்தியது.
நாம் மோசமான சூழ்நிலைகள் என்று கருதும் சூழ்நிலைகளின் வழியாக வாலிபனான தாவீது உறுதியுடன் செயல்பட்டான். கோலியாத் அவனை எதிர்த்துப் போராட இஸ்ரவேல் மக்களிடம் சவால் விட்டபொழுது, அவனை எதிர்க்க யாரும் முன் வரவில்லை. தாவீது மட்டும்தான் முன் வந்தான். கோலியாத்திற்கு எதிராக போராட தாவீதை அனுப்புவதற்கு சவுலுக்கு விருப்பமில்லை. ஆனால், தாவீது, அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை ஒரு சிங்கமும், ஒரு கரடியும் ஓர் ஆட்டை கவ்விக் கொண்டு சென்ற பொழுது, அவைகளை எதிர்த்துப் போராடி, கொன்று போட்டதை சவுலிடம் விளக்கிக் கூறினான் (1 சாமு. 17:34-36). “பின்னும் தாவீது; என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் (வச. 37) என்று திட நம்பிக்கையோடு கூறினான்.
ஒரு மேய்ப்பனாக இருந்தபொழுது தாவீது மதிக்கப்படவில்லை. ஆனால், அவன் மேய்ப்பனாக இருந்தபொழுது பெற்ற அனுபவங்கள் கோலியாத்தை எதிர்த்துப் போராடவும் முடிவில் இஸ்ரவேலில் மிகப் பெரிய அரசனாகவும் ஆவதற்கு அவனை ஆயத்தப்படுத்தியது. நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கலாம்; ஆனால், அவைகளின்மூலமாக தேவன் நம்மை மிகச் சிறந்த காரியத்திற்கு ஆயத்தப்படுத்தலாம்.