ஒருபோதும் அதிக பாவமில்லை
“நான் வேதாகமத்தை தொட்டால், என்னுடைய கரத்தில் அது தீப்பிடித்துக்கொள்ளும்” என்று என்னுடைய கல்லூரி பேராசிரியர் கூறினார். என்னுடைய இதயம் கனத்தது. அந்தக் காலை வேளையில் நாங்கள் படித்த ஒரு நாவலில் வேதத்திலுள்ள ஒரு வசனம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் வாசிக்கும்படியாக நான் என் வேதத்தை எடுத்தப்போது அவர் கவனித்து இப்படியாக கருத்து தெரிவித்தார். என்னுடைய பேராசிரியர் தான் மன்னிக்கப்படுவதற்கு முடியாத ஒரு மகா பெரிய பாவியாயிருப்பதாக உணர்ந்தார். இருந்தாலும் தேவனின் அன்பையும் - நாம் எப்போதும் தேவனின் மன்னிப்பிற்காக அவரை நாடமுடியும் என்று வேதாகமம் கூறுகிறது என்றும் அவரிடம் சொல்வதற்கு எனக்கு தைரியமில்லை.
நெகேமியாவில் மனந்திரும்புதலைப்பற்றியும் மன்னிப்பைப்பற்றியும் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களினிமித்தம் நாடு கடத்தப்பட்டனர், ஆனால் இப்பொழுது அவர்கள் எருசலேமிற்கு திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு குடியேறியப் போது, வேதப்பாரகனாகிய எஸ்ரா நியாயப்பிரமாணத்தை வாசித்தார். (நெ. 7:73-8:3). அவர்கள் பாவிகளாயிருந்தாலும் தேவன் அவர்களை கைவிடவில்லை என்று நினைவுகூர்ந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் (9:17,19). அவர்கள் கூப்பிட்டப்போது அவர் கேட்டு, அவருடைய மிகுந்த இரக்கத்தின்படி அவர்களோடு பொறுமையாயிருந்தார் (வச. 27-31).
இதேப்போன்று, தேவன் நம்மிடத்திலும் பொறுமையாயிருக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பினால் அவர் நம்மை கைவிடமாட்டார். என்னுடைய பேராசிரியரிடம் சென்று அவருடைய பழைய வாழ்க்கை எப்படியிருந்தாலும் இயேசு அவரை நேசிக்கிறார் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க விரும்புகிறார் என்றும் சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களைக் குறித்தும் என்னைக் குறித்தும் இயேசு அப்படியே கருதுகிறார். நாம் அவரிடம் மன்னிப்பிற்காக நெருங்கினால் அவர் நம்மை மன்னிப்பார்.
இயேசு அவர்களை மன்னிக்க முடியாத பாவியாய் இருக்கிறதாக உணருகிற யாராவது உங்களுக்குத் தெரியுமா? இயேசு நீதிமான்களுக்காக அல்ல பாவிகளுக்காகவே வந்தார் என்ற சத்தியம் (மாற். 2:17) இப்படிப்பட்ட உணர்வுள்ளவர்களிடம் எப்படிப் பேசுகிறது?
சம்பாதிக்கப்பட்டதல்ல சுதந்தரிக்கப்பட்டது
உணவு விடுதியின் மேசையில் எனது டம்ளரை வைத்து விட்டு, “இந்த உணவுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன், அப்பா” என்றேன். நான் கல்லூரியிலிருந்து ஒரு சிறிய விடுமுறையில் என்னுடைய வீட்டிற்கு வந்தேன். என்னுடைய உணவிற்கு என் பெற்றோர் பணம் கொடுத்தது எனக்கு சற்று வினோதமாக இருந்தது. “உன்னை வரவேற்கிறேன், ஜூலி” என்றார் என்னுடைய தந்தை. “நீ எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் நன்றி கூறத்தேவையில்லை, நீ இப்பொழுது எங்களை விட்டுப் பிரிந்து தனியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் எங்களுக்கு மகள் தான், எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினர் தான்” என்றார். நான் சிரித்துக் கொண்டே, “நன்றி, அப்பா” என்றேன்.
என்னுடைய குடும்பத்தில், என்னுடைய பெற்றோரின் அன்பினைப் பெறவும், அவர்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்காகவும், நான் எதையுமே செய்ததில்லை. என்னுடைய அப்பா கூறியதைப் போல, நான் தேவனுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் தகுதியைப் பெறுவதற்கும், நான் எதையுமே செய்ததில்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.
“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு” தேவன் நம்மைத் தெரி ந்து கொண்டார் என பவுல் தன்னுடைய வாசகர்களுக்கு எழுதுகின்றார் (எபே.1:4). தேவனுக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாய் நிற்க தகுதியுள்ளவர்களாகும்படி அவர் நம்மைத் தெரிந்து கொண்டார் (5:25-27). ஆனால், இது இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கூடும். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்திபடியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (1:7). நாம் தேவனுடைய கிருபையையும், மன்னிப்பையும் பெறுவதும், மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவராவதும் நம்முடைய செயலினால் சம்பாதித்ததல்ல, இவற்றை நாம் தேவனிடமிருந்து ஈவாக பெற்றுக் கொள்கின்றோம்.
நம்முடைய வாழ்வை தேவனுக்கு நேராகத் திருப்பும் போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம், அப்படியானால் நாம் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்கின்றோம், நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படி பரலோகம் நமக்கு காத்திருக்கின்றது. இத்தனை அற்புதமான ஈவைத் தந்த தேவனை ஸ்தோத்தரிப்போம்!
நாம் செய்கின்ற காரியங்கள் முக்கியமானவையா?
நான் என் தலையை கரங்களால் தாங்கியவளாய் பெருமூச்சோடு, “நான் எல்லாவற்றையும் எப்படி முடிக்கப்போகின்றேன் என்றே தெரியவில்லை” என்றேன். என்னுடைய சிநேகிதனின் குரல் தொலைபேசியில் கரகரத்தது, “நீ உன்னைப் பாராட்டிக்கொள்ள வேண்டும், நீ நிறைய காரியங்களைச் செய்கின்றாய்” என்றான். அத்தோடு நான் செய்கின்ற காரியங்களைச் சொல்ல ஆரம்பித்தான். ஒரு சுகமான வாழ்க்கையை நடத்துகின்றாய், வேலைக்கு செல்கின்றாய், பள்ளியிலும் சிறப்பாகச் செய்கின்றாய், எழுதுகின்றாய், வேதாகம வகுப்புக்கும் செல்கின்றாய் என்றான். நான் இவற்றையெல்லாம் கர்த்தருக்கென்றே செய்கிறேன், நான் செய்கின்றவற்றில் கவனம் செலுத்துகிறேன், ஆனால் எப்படி செய்கின்றேன் என்பதைக் கவனிப்பதில்லை. ஒரு வேளை நான் அதிகமான காரியங்களைச் செய்ய முயற்சிக்கலாம்.
தங்களுடைய வாழ்வின் மூலம் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென கொலோசே சபை மக்களுக்கு பவுல் அறிவுறுத்துகின்றார். மொத்தத்தில், அனுதினமும் நாம் செய்கின்ற வேலைகளையும் விட அவற்றை எப்படிச் செய்கின்றோம் என்பதே முக்கியமாகும். அவர்கள் தங்களுடைய வேலைகளை, “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” செய்யக்கடவர்கள் என்கின்றார். “ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (வச. 13-14), இவை எல்லாவற்றின் மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் (வச. 14), நீங்கள் எதைச் செய்தாலும், அதைஎல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (வச. 17). கிறிஸ்துவைப்போல வாழும் போது, நம் வேலையை அதனின்று பிரிக்கமுடியாது.
நாம் செய்கிற வேலை முக்கியமானது தான், ஆனாலும் அதை ஏன், எப்படி, யாருக்காகச் செய்கிறோம் என்பதே மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் நாம் மன அழுத்தத்தோடு வேலை செய்வதையா அல்லது தேவன் மகிமைப் படும்படி வேலைசெய்து, அதில் இயேசு அர்த்தத்தைக் கொடுக்கும்படியாக செய்வதையா எதைத் தேர்ந்து கொள்கின்றோம். இரண்டாவதை நாம் தேர்ந்து கொண்டால், மனதிருப்தியைப் பெற்றுக்கொள்வோம்.
ஆவிக்குரிய களைப்பு?
ஜாக் எஸ்வின் தன்னுடைய புத்தகமான 'குறையுள்ள போதகர்" என்ற நூலில், 'நாம் உணர்வுப்பூர்வமாக, ஒரு நாள் வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விடுகிறோம்" என்று எழுதியுள்ளார். பொதுவாக இந்நூலில் அவர், போதகர்கள் படும் பாடுகளையும், சுமக்கும் பாரங்களையும் சொல்லியிருந்தாலும், இது நம்மெல்லாருக்கும் உரிய உண்மையாகும். பாரமான உணர்வுகள், பொறுப்புகள் போன்றவைகள் சரீரப்பிரகாரமாக, மனரீதியாக மற்றும் ஆவிக்குரிய வாழ்விலும் நம்மைக் களைப்படையச் செய்கிறது. நாம் தூங்குவதை மட்டுமே இச்சூழ்நிலையில் விரும்புகிறோம்.
1 இராஜாக்கள் 19ஆம் அதிகாரத்தில் எலியா தீர்க்கதரிசி எப்பக்கமும் நெருக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் தன்னைக் காணுகிறார். யேசபேல் ராணி அவரை கொன்றுவிடுவதாக மிரட்டினதை நாம் வாசிக்கிறோம் (வச. 1-2). ஏனெனில், எலியா பாகால் தீர்க்கதரிசிகளில் 450 பேர்களைக் கொன்று போட்டதை அவள் கேள்விப்படுகிறாள் (வச. 18:16-40). இதனால் எலியா பயந்துபோய் வனாந்திரத்திற்கு ஓடிச்சென்று தன்னை எடுத்துக்கொள்ளும்படி ஆண்டவரிடம் ஜெபித்தார் (19:3-4). அவருடைய துக்கத்தில் அவர் படுத்துக்கொள்ளுகிறார். ஒரு தூதன் இரண்டு தரம் அவரைத் தட்டியெழுப்பி 'எழுந்திருந்து போஜனம் பண்ணு" என்று கூறுகிறார் (வச. 5,7). இரண்டாம் முறைக்கு அப்புறமாக எலியா தேவன் கொடுத்த ஆகாரத்தினால் பெலப்பட்டு, அந்த பெலத்தினால், '40 நாட்கள் மற்றும் 40 இரவுகள்" பயணம் செய்து ஒரு குகைக்கு வருகிறார் (8-9). அங்கே தேவன் அவரை சந்தித்து அவருக்கு உரிய வேலைகளை மறுபடியும் கொடுக்கிறார் (9-18). அதன் பிறகு, அவர் களைப்பு நீங்கி, தேவன் தனக்குக்கொடுத்த வேலையைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினார்.
சில சமயங்களில் நாம் கூட தேவனுக்குள் ஊக்கப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த நிலை ஒருவேளை நாம் சக விசுவாசிகளோடு பேசும்போதோ, ஒரு ஆராதனைப்பாடல் மூலமாகவோ அல்லது ஒரு ஜெபநேரத்திலோ, அல்லது தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினாலோ ஏற்படலாம்.
களைப்படைந்திருக்கிறீர்களா? உங்கள் பாரங்களைக் கர்த்தரிடம் கொடுத்து விட்டு உற்சாகமடையுங்கள் அவர் உங்கள் பாரங்களைச் சுமப்பார்.
புதிய பார்வை தேவை
“வெறுமனே பச்சைபசேலென்று மங்கலாக ஒரு உருவத்தைப் பார்ப்பதைவிட மரத்தையும் அதன் ஒவ்வொரு இலைகளையும் பார்ப்பது அற்புதமாக இருக்கும்” என்று என் அப்பா சொன்னார். அது எவ்வளவு உண்மையென்பது எனக்குத் தெரியும். அப்போது எனக்கு பதினெட்டு வயது; புதிதாக கண்ணாடி அணிந்திருந்தேன், அது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொன்றையும் ஒரு புதிய விதத்தில் பார்க்கமுடிந்தது; மங்கலாகக் தெரிந்தவை எல்லாம் தெளிவாக அழகாகத் தெரிந்தன!
கண்ணாடி அணியாமல் மரங்களைப் பார்ப்பதுபோலத்தான் சிலசமயங்களில் வேதாகமத்தின் சில புத்தகங்களை வாசிக்கும்போதும் உணர்கிறேன். அவற்றில் அறிந்துகொள்வதற்கு அதிகம் இல்லாததுபோலத் தோன்றுகிறது. ஆனால் சலிப்பூட்டுவதுபோலத் தெரிகிற வசனங்களில் உள்ள விபரங்களைக் கவனிக்கும்போது, ஆச்சரியமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.
யாத்திராகமப் புத்தகத்தை வாசிக்கும்போது இத்தகைய அனுபவத்தைப் பெற்றேன். இஸ்ரவேலர் மத்தியில் தாம் வாசஞ்செய்வதற்கு தற்காலிகமாக ஆசரிப்புக்கூடாரம் ஒன்றை தேவன் கட்டச்சொல்கிறார். அதன் கட்டுமான விவரங்களைச் சொல்லுகிறார். அதை வாசிக்கும்போது சற்று சலிப்புத் தட்டுகிறது. 25ம் அதிகாரத்தில் குத்துவிளக்கு குறித்த விவரங்களை தேவன் கொடுக்கிறார். அதை சற்று ஆராய்ந்து பார்த்தேன். அதன் தண்டு, கிளைகள், மொக்குகள், பழங்கள், பூக்கள் அனைத்தையும் ‘பசும்பொன்னினால்’ அடிப்புவேலையாய்ச் செய்யச் சொல்லுகிறார். வச 31. அதன் கிண்ணங்கள் “வாதுமை பூக்களை” போல இருக்கவேண்டுமாம். வச 34.
வாதுமை மரங்கள் அற்புதமானவை. அதே இயற்கை அழகு தம்முடைய ஆசரிப்புக்கூடாரத்திலும் காணப்பட தேவன் சொன்னார்!
“காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என்று பவுல் எழுதினார். ரோமர் 1:20. தேவனுடைய அழகைக் காண சிலசமயங்களில் சிருஷ்டிப்பையும், சலிப்புத்தட்டுகிற சில வசனங்களையும் புதிய பார்வையோடு பார்க்கவேண்டும்.
தேவன் தருவார்
ஆதியாகமம் 22:2-14
வாழ்வின் சோதனைகளைப் புரிந்து கொள்ளல்
என்னுடைய நண்பனின் தந்தையுடைய மருத்துவ ஆய்வு அறிக்கை, அவருக்கு புற்று நோயிருப்பதாகத் தெரிவித்தது. ஆனாலும் கீமோ சிகிச்சையின் போது அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். அத்தோடு குணமடைந்த நிலையையும் அடைந்தார். அவர் பதினெட்டு மாதங்கள் புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றவராக வாழ்ந்தார். ஆனால், அது திரும்பவும் வந்தது. முன்னிலைமையையும் விட மோசமாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவரும் அவருடைய மனைவியும் கரிசனையோடும், ஏன் என்ற கேள்வியோடும் சந்தித்தபோதும் தேவன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடவில்லை. ஏனெனில், முதல்முறை நோய் தாக்கிய போது தேவன் அவரை எவ்வாறு காத்துக் கொண்டார் எனக் கண்டு கொண்டனர்.
நாம் ஏன் சோதனைகளின் வழியே கடந்து செல்கின்றோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுவே யோபுவின் நிலையும் கூட, அவர் மிகவும் கொடுமையான விவரிக்க இயலாத துயரத்தையும், நஷ்டத்தையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய அநேகக் கேள்விகளுக்கிடையே யோபு 12ல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றார். “இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது. அவர் மனுஷரை அடைத்தால் விடுவிக்க முடியாது” (வச. 14) “அவரிடத்தில் பெலனும் ஞானமும் உண்டு (வச. 16) “அவர் ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறார்” (வச. 23). இந்த நீண்ட பட்டியலில் யோபு, தேவன் ஏன் வேதனையையும் துன்பங்களையும் அனுமதித்தார், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து குறிப்பிடவேயில்லை. யோபுவிடம் அதற்கு பதிலும் இல்லை. ஆனாலும் இவை அனைத்தின் மத்தியிலும் அவன் தைரியமாகச் சொல்கின்றான். “தேவனிடத்தில் ஞானமும், வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும். அவருக்குத்தான் ஆலோசனையும், புத்தியும் உண்டு” (12:13).
தேவன் ஏன் சில போராட்டங்களை நம் வாழ்வில் அனுமதிக்கின்றாரென நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னுடைய நண்பனின் பெற்றோரைப் போன்று நாமும் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைப்போம். தேவன் நம்மை நேசிக்கின்றார். மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கின்றது (வச. 10) அவர் நம்மை விசாரிக்கின்றவர் (1 பேது. 5:7) ஞானமும், வல்லமையும், புத்தியும் கொள்ளலும் அவருக்கேயுரியது.
ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கின்றது
என்னுடைய சிநேகிதியும் அவளுடைய பேரக் குழந்தைகளும் நானும் ஒரு சிறிய நடை பயிற்சிக்குச் சென்றோம். அவள் குழந்தையின் தள்ளுவண்டியைத் தள்ளியபடியே நடந்தாள். தன்னுடைய நடைகளெல்லாம் வீணாகின்றன என்றாள். ஏனெனில், தான் கையில் அணிந்திருக்கும் கணிப்பானில் இவை எண்ணப்படுவதில்லை. தான் கைகளை விசி நடக்கவில்லையாதலால், அவை எண்ணப்படுவதில்லை என்றாள். ஆனால், இந்த நடைகளெல்லாம் அவளுடைய உடல் சுகாதாரத்திற்கு உதவுமே என்றேன். 'ஆம்" என்று பதிலளித்து, சிரித்தாள். 'ஆனால், நான் அந்த எலக்ட்ரானிக் கருவியில் தங்க நட்சத்திரம் பெற விரும்புகிறேன்" என்றாள்.
அவளுடைய எண்ணத்தை நான் புரிந்துகொண்டேன்! ஆனால், நாம் ஏதோ ஒன்றினைக் செய்யும்போது அதற்கான விளைவு உடனடியாகக் கிடைக்காவிடில், அது நம் இருதயத்தைச் சோர்வடையச் செய்யும். ஆனாலும் பலாபலன்கள் எப்பொழுதும், உடனடியாகக் கிடைப்பதில்லையே அல்லது உடனடியாகத் தெரிவதில்லையே.
அப்படியானால், நாம் செய்யும் நல்ல காரியங்கள், அதாவது ஒரு நண்பனுக்கு உதவுவது, அல்லது அறியாத ஒருவரிடம் கனிவாக நடந்துகொள்ளல் போன்றவை பயனற்றது என நினைக்கத் தோன்றுமல்லவா! கலாத்தியாவிலுள்ள சபைக்கு பவுல் விளக்கும் போது, 'மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" (கலா. 6:7) என்கின்றார். எனவே நாம், 'நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக் நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (வச. 9). நன்மை செய்வது மட்டும் இரட்சிப்பைப் பெறுவதற்கான வழியல்ல. நாம் அறுவடை செய்வது இவ்வுலகிலோ அல்லது பரலோகத்திலோ என்பதைக் குறித்து வேதாகமம் தெளிவாகக் கூறவில்லை. ஆனால், நாம் உறுதியாக சொல்லலாம், 'நாம் ஓர் ஆசீர்வாதத்தை அறுவடை செய்வோம்" (வச. 9).
நன்மை செய்வது கடினம் தான். ஏனெனில், அதற்கான பலனை நாம் எப்பொழுது அறுவடை செய்வோம் என்பது தெரியாது. ஆனால், என்னுடைய சிநேகிதி நடப்பதால் உடல் வலிமையைப் பெற்றுக்கொள்ள முடிவதால் நாமும் நன்மையானவற்றை தொடர்ந்து செய்வோம். ஏனெனில், ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கின்றது.
பாசிகளும், நுண்பாசிகளும்
“நுண்பாசி என்பது என்ன?" என நான் என் சிநேகிதியைக் கேட்டேன். நான் அவளுடைய தோள்மீது சாய்ந்து, அவள் நுண்ணோக்கி மூலம் எடுத்துக் கொண்ட படங்களை, அவளுடைய அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். “ஓ, இது பாசியைப் போன்றது. இதனைப் பார்ப்பது சற்றுக் கடினமானது. சிலவேளைகளில் லென்சுகளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டுக் கொண்டு தான் பார்க்க முடியும் அல்லது அவை இறந்த பின் தான் பார்கக் முடியும்" என விளக்கினாள். அவள், ஒன்றன் பின் ஒன்றாக படங்களைக் காட்டி விளக்கிய போது, நான் வியந்துபோனேன். நுண்ணோக்கிகளின் மூலம் பார்க்கக் கூடிய அத்தனை சிறிய உயிரினங்களில் தேவன் வைத்துள்ள நுணுக்கமான அமைப்புகளைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன்.
தேவனுடைய படைப்புகளுக்கும் அவருடைய செயல்களுக்கும் முடிவேயில்லை. இதனைக் குறித்து யோபுவின் நண்பனான எலிகூகூட, யோபு தன் இழப்புகளின் மத்தியில் போராடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு சுட்டிக் காட்டுகின்றான். எலிகூ தன் நண்பனிடம்," யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும். தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைளையும்... அறிவீரோ?" (யோபு 37:14-16). தேவனுடைய படைப்புகளையும், அவற்றின் சிக்கலான நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள மனித அறிவு போதாது.
நாம் கண்களால் காணமுடியாத அவருடைய படைப்புகளும், தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய மகிமை நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் எவற்றின் வழியே கடந்து சென்றாலும், அவைகளைக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியாவிட்டாலும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை நாம் இன்று போற்றுவோம், ஏனெனில், “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார்" (யோபு. 5:9).