அன்பும், பழைய காலணிகளும்
சில சமயங்களில் நானும், என்னுடைய மனைவியும் ஒருவர் மற்றொருவருடைய வாக்கியங்களை நிறைவு செய்வோம். எங்களுடைய 30 வருட திருமண வாழ்வில் ஒருவர் மற்றவர் எண்ணுவதையும், பேச நினைப்பதையும் அதிகதிகமாய் அறிந்து வைத்துள்ளோம். சொல்லப் போனால் சில சமயங்களில் ஒரு வாக்கியத்தை முடிக்கக்கூட தேவையில்லை; ஒரே வார்த்தை அல்லது சிறு பார்வை கூட போதும், எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த.
நமக்கு மிகவும் சவுகரியமாக இருப்பதினால் நம்முடைய பழைய காலணிகளை தொடர்ந்து உபயோகிப்பது போல, இதிலும் ஒரு சவுகரியம் உண்டு. சில சமயங்களில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “என் பழைய செருப்பே” என ஆசையாய்க் கூறிக்கொள்வோம். ஆனால் எங்களை நன்கு அறியாதவர்கள் இதைக்கேட்டால் ஒன்றும் புரியாமல் திகைப்பார்கள்! அநேக ஆண்டுகளைக் கடந்து வந்த எங்களுடைய உறவு அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகளைக் கொண்ட ஒரு மொழியை தனக்கென உருவாக்கிக்கொண்டுள்ளது.
நம்மை ஆழ்ந்து அறிந்தவராய் தேவன் நம்மை நேசிக்கிறார் என்னும் வெளிப்பாடு நமக்கு ஆறுதல் அளிக்கிறது. “என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்,” என தாவீது எழுதியுள்ளான் (சங். 139:4). இயேசுவோடு கூட அமர்ந்து உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலுள்ள காரியங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்த நீங்கள் திணறும் பொழுது, அதை அறிந்தவராய் புன்னகை புரிந்து நீங்கள் கூற நினைத்ததை அப்படியே அவர் வெளிப்படுத்துவார். தேவனோடு உரையாட நாம் ஏற்ற வார்த்தைகளை கூற வேண்டிய அவசியமில்லை என்பது நமக்கு எவ்வளவு நிம்மதியளிக்கக்கூடிய விஷயம்! அவர் நம்மை நேசிப்பதுமட்டுமின்றி நம்மை முழுவதுமாக அறிந்தும் வைத்திருக்கிறார்.
இயேசுவின் மீது சாய்ந்து
இரவு நேரங்களில் சில சமயம் தலையணையில் தலை சாய்த்து ஜெபிக்கும் பொழுது, நான் இயேசுவின் மீது சாய்ந்து கொள்வது போல கற்பனை செய்து கொள்வேன். அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அப்போஸ்தலனாகிய யோவானைக் குறித்து வேதாகமம் குறிப்பிடுவது என் நினைவிற்கு வரும். கடைசி இராப்போஜனத்தில் இயேசுவோடு கூட தான் அமர்ந்திருந்த விதத்தைக் குறித்து யோவான் தாமே இவ்வாறு கூறுகிறார்: “அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான் (யோவா. 13:23).
தன் பெயரைக் கூறாமல், “இயேசுவுக்கு அன்பாயிருந்த ஒருவன்” என்று தன்னைக் குறித்து விவரித்தான். அதுமட்டுமன்று முதல் நூற்றாண்டு காலத்தில் இஸ்ரவேலில் அனுசரிக்கப்பட்ட பந்தி முறையையும் விவரிக்கிறான். அக்காலக்கட்டத்தில் நம் முழங்கால் உயரத்தில் தான் மேஜைகள் இருக்கும். ஆகவே மேஜையைச் சுற்றி பாய்களிலோ அல்லது மெத்தைகளிலோ சாய்ந்த வண்ணம் அமர்ந்திருப்பார்கள். யோவான் இயேசுவுக்கு மிக அருகில் உட்கார்ந்திருந்தபடியால், அவரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பும் பொழுது தன் தலையை “இயேசுவினுடைய மார்பிலே சாய்த்து கொண்டிருந்தான்” (யோவா. 13:25).
அன்று இயேசுவுடனான யோவானுடைய நெருக்கமான அத்தருணம், இன்று நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானதொன்றை காட்சிப்படுத்தி காட்டுகின்றது. இன்று இயேசுவை சரீரப் பிரகாரமாக நாம் தொட இயலாமல் போகலாம். ஆனால் நம்முடைய பாரமான சூழ்நிலைகளை அவரிடம் ஒப்படைத்து விடலாம். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என இயேசு கூறுகிறார் (மத். 11:28). நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடைய நம்பிக்கைக்கு பாத்திரரான இரட்சகர் நமக்கு உண்டு என்பது எவ்வளவு பெரிய கிருபை! இன்று நீங்கள் அவர் மீது “சாய்ந்து” கொண்டிருக்கிறீர்களா?
எப்பொழுது என நினைவுகூரு
எங்கள் மகன் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் போராடிக்கொண்டிருந்த ஏழு ஆண்டுகளும், நானும் என்னுடைய மனைவியும் அநேக கடினமான நாட்களை அனுபவித்தோம். எங்கள் மகனுடைய பரிபூரண விடுதலைக்காக ஜெபித்து காத்திருந்த பொழுது, சின்னஞ்சிறு வெற்றிகளை கொண்டாடக் கற்றுக்கொண்டோம். தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் எவ்வித மோசமான சம்பவமும் நிகழவில்லை என்றால், நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இன்றைய நாள் நன்றாகவே இருந்தது,” எனக் கூறிக் கொள்வோம். சின்ன காரியங்களிலும் வெளிப்படும் தேவனுடைய உதவியை எண்ணி நன்றிகூற நினைப்பூட்டும் வாக்கியமாக அது மாறியது.
ஆனால், இதைக்காட்டிலும் ஒரு சிறந்த வாக்கியம், “கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்” சங்கீதம் 126:3ல் புதைந்துள்ளது. இது தேவனுடைய கனிவான இரக்கங்களையும், அதினால் தேவன் நமக்கு பாராட்டின இரக்கத்தை நினைவூட்டி அதை நம் இருதயத்திலே பதிய வைக்க சிறந்த வசனம். நாம் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வின் துயரங்கள், எவ்விளைவை உண்டாக்கினாலும், ஏற்கனவே தேவன் வெளிப்படுத்திய அன்பு, “அவர் கிருபை என்றுமுள்ளது,” (சங். 136:1) என்கிற சத்தியத்தை பறைசாற்றுகிறது.
நாம் ஒரு கடினமான சூழ்நிலையை கடந்து வந்து, தேவன் உண்மையுள்ளவர் என்பதை அறிந்து, அதனை மனதிலே பதிய வைத்துக் கொண்டால், ஒருவேளை மறுபடியும் அதே பாதையைக் கடக்க நேர்ந்தால், அவ்வெளிப்பாடு நமக்கு பெலனளிக்கும். நம்முடைய சூழ்நிலைகளைக் கடந்து வர தேவன் எவ்வாறு உதவி செய்வார் என்பதை நாம் அறியாமலிருக்கலாம், ஆனால் கடந்த காலத்தில் அவர் நமக்கு பாராட்டின இரக்கம், அவர் நிச்சயமாக இப்பொழுதும் உதவி செய்திடுவார் என விசுவாசிக்க உதவிடும்.
கொண்டாட வேண்டிய ஒருவர்
இயேசுவினுடைய பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளில் மேய்ப்பர்கள் இயேசுவை மாட்டுத் தொழுவத்தில் கண்ட அதே வேளையில், கிழக்கத்திய ஞானிகளும் பெத்தலகேமிலே இயேசுவைக் கண்டது போல விவரிக்கப்பட்டிருக்கும். மத்தேயு சுவிசேஷத்தில் மாத்திரமே சாஸ்திரிகள் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஞானிகளின் வருகை சிறிது காலம் கழித்தே நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் இயேசுவை மாட்டுத் தொழுவத்திலன்றி ஒரு வீட்டிலேயே கண்டார்கள். “அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” என்று மத்தேயு 2:11 கூறுகிறது.
புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் நமக்கு, கிழக்கத்திய ஞானிகள் சிறிது காலம் கழித்து இயேசுவுக்கு செலுத்திய கனமும், துதியும் அவர் எப்பொழுதும் போற்றுதலுக்கும் ஆராதனைக்கும் உரியவர் என்பதை நினைவுபடுத்துகிறது. நம்முடைய விடுமுறை நாட்களெல்லாம் முடிந்து, சகஜ வாழ்க்கைக்கு நாம் திரும்பிய பின்பும், நம்முடைய கொண்டாட்டங்களுக்கு உரியவர் இப்பொழுதும் நம்மோடு உண்டு.
எல்லா காலக்கட்டத்திலும் “நம்மோடிருக்கும் தேவன்” இம்மானுவேலாகிய இயேசு கிறிஸ்துவே (மத். 1:23). “சகல நாட்களிலும்” அவர் நம்மோடு இருப்பதாக வாக்கு பண்ணியுள்ளார் (மத். 28:20). அவர் எப்பொழுதும் நம்மோடு இருப்பதினால், நம்முடைய இருதயங்களில் ஒவ்வொரு நாளும் அவரை துதித்து, ஆராதித்து இனி வரும் வருடங்களிலும் அவர் நமக்கு உண்மையுள்ளவராய் இருப்பார் என நம்பிக்கை கொள்வோமாக. கிழக்கத்திய ஞானிகள் அவரை தேடிக் கண்டடைந்தது போல நாமும் நாம் இருக்கும் இடத்திலேயே நம்முடைய இருதயங்களில் அவரைத் தேடி ஆராதிப்போமாக.
நம்முடைய ஜெபத்தின் மூலம் தேவனை சேவித்தல்
அநேகந்தரம் நம்முடைய ஜெபங்களின் மூலமே தன்னுடைய வேலையை செய்து முடிப்பதை தேவன் தெரிந்துக்கொள்கிறார். இஸ்ரேல் தேசத்திலே மூன்றரை வருடங்களாய் இருந்த வறட்சியை நீக்க “உங்கள் தேசத்திலே நான் மழையை வருஷிக்கப்பண்ணுவேன்”, என்று எலியாவை நோக்கி தேவன் கூறியதின் மூலம் இதை அறியலாம் (யாக். 5:18). தேவன் மழையை வாக்கு பண்ணியிருந்தாலும், சில நேரம் கழித்து, “எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,” மழை வரும்படி ஊக்கமாய் ஜெபம் பண்ணினான் (1 இரா. 18:42). ஜெபம் செய்து கொண்டிருந்த பொழுது, தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி மழை வருவதற்கு ஏதாவது அறிகுறி உண்டோ என்று அடிவானத்தை நோட்டமிடும்படியாய், “ஏழு முறை” சமுத்திரத்தை கண்டு வரும்படியாய் அனுப்புகிறான் (வச. 43).
தாழ்மையுடன் கூடிய உறுதியான ஜெபத்தின் மூலம் தன்னுடைய கிரியையிலே பங்கு கொள்ளும்படியாய் தேவன் விரும்புகிறார் என்பதை எலியா அறிந்துக்கொண்டான். மனுஷனுடைய இயலாமைகளையும் தாண்டி, அதிசயமான வழிகளில் நம்முடைய ஜெபத்தின் மூலம் செயல்படுவதை தேவன் தெரிந்துக்கொள்கிறார். ஆகவே தான், “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது...” என்று கூறும் அதே வேளையில், “எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாய் இருந்தும்” (யாக். 5:16-17) என்று யாக்கோபு தான் எழுதின புத்தகத்திலே நினைவு படுத்துகிறார்.
எலியாவைப் போல உண்மையுள்ளவர்களாய், நம்முடைய ஜெபத்தின் மூலம் தேவனை சேவிப்பதை நம்முடைய நோக்கமாகக் கொண்டால், எந்த நொடியிலும் நாம் ஒரு அற்புதத்தைக் காணக்கூடிய ஒரு அருமையான உரிமையிலே நாம் பங்கு கொள்கிறோம்.
அமைதியான உரையாடல்கள்
நீங்கள் எப்பொழுதாவது உங்களிடமே பேசிக்கொள்வதுண்டா? நான் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் அவ்வேலையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளை சத்தமாக நான் என்னிடமே சொல்லிக்கொள்வேன். பொதுவாக நான் என் கார் இஞ்சின் மூடிக்கடியில் (Bonnet / hood) இருக்கும் பொழுது இது நடக்கும். நம்மிடமே நாம் பேசிக்கொள்ளும் பழக்கம் அன்றாட வழக்கமாக நம் அனைவருக்கும் இருந்தாலும், என்னுடைய ‘உரையாடலை’ யாரவது கேட்க நேர்ந்தால் எனக்கு சங்கடமாக இருக்கும்.
சங்கீதப் புஸ்தகத்திலுள்ள சங்கீதக்காரர்கள் பொதுவாக அவர்களிடமே அவர்கள் பேசிக்கொள்வார்கள். 116வது சங்கீதத்தின் ஆசிரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏழாம் வசனத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு” என்று எழுதுகிறார். கடந்த காலத்திலே தேவன் தமக்கு பாராட்டின கிருபையையும், நீதியையும் தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்வது நிகழ்காலத்திற்கு ஏற்ற ஆறுதலும், துணையுமாகும். இப்படிப்பட்ட “உரையாடல்களை” நாம் அதிகமாக சங்கீதப் புஸ்தகத்தில் காணலாம். 103வது சங்கீதத்தில், தாவீது, “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி
(வச. 1) என்று தன்னிடமே கூறிக்கொள்கிறான். மேலும், 62ம் சங்கீதம் 5ம் வசனத்திலே, “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்” என்று தன்னைத்தானே திடப்படுத்துகிறார்.
தேவன் உண்மையுள்ளவர் என்பதையும், அவரின் மேல் உள்ள நம்முடைய நம்பிக்கையையும் நமக்கு நாமே நினைவுகூர்வது நல்லது. சங்கீதக்காரனைப் பின்பற்றி, கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை சொல்லி நன்றி செலுத்தலாம். அப்படி செய்யும் பொழுது, நாம் பெலனடைவோம். கடந்த காலத்திலே நமக்கு உண்மையுள்ளவராய் இருந்த தேவன், நம்முடைய எதிர்காலத்திலும் அவருடைய அன்பை விளங்கச் செய்வார்.
வீட்டை எண்ணி ஏங்கி
பண்டையகால அலமாரி உயர கடிகார பெட்டிக்குள் (Grand Father’s Clock) என் தலையை நீட்டிக்கொண்டிருந்த பொழுது, அந்த அறைக்குள்ளே என் மனைவி நுழைந்தாள். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். தயக்கத்துடன், “என் பெற்றோர் வீட்டிலுள்ள வாசனை, இந்த கடிகாரத்திலும் உள்ளது. அதனால், ஒரு கணம் என் வீட்டிற்கே நான் சென்றுவிட்டேன்,” என்று அதன் கதவை பூட்டியவாறு கூறினேன்.
வாசனைகளை நுகரும்பொழுது, அவை பல ஞாபகங்களைத் தூண்டி விடலாம். அந்த கடிகாரத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் தேசத்தின் மறுபக்கத்திலுள்ள என் பெற்றோர் வீட்டிலிருந்து கொண்டு வந்தோம். ஆனால், இப்பொழுதும் அந்த கடிகாரத்தின் மரக்கட்டையின் வாசம் என் சிறுவயதை எனக்கு ஞாபகமூட்டுகிறது.
எபிரெய புத்தகத்தின் ஆசிரியர், வேறு விதமாக தங்கள் வீட்டை குறித்து ஏங்கிக் கொண்டிருந்தவர்களைப் பற்றிக் கூறுகிறார். பின்னோக்கிப் பார்ப்பதற்குப் பதில், விசுவாசத்தோடு தங்கள் பரலோக வீட்டை எதிர்நோக்கி இருந்தார்கள். அவர்கள் விரும்பியதைப் பெற நெடுநாள் ஆனாலும், வாக்குத்தத்தம் பண்ணின தேவன் அவரோடு என்றென்றும் இருக்கும்படியாக நம்மை அழைத்துக்கொள்வார் என்பதில் உறுதியாய் இருந்தார்கள் (எபி. 11:13-16).
“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” என்று பிலிப்பியர் 3:20 நமக்கு ஞாபகப்படுத்துவதால், “அங்கேயிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” நாம் இயேசுவைக் கண்டு, அவரின்மூலம் தேவன் நமக்கு வாக்குப்பண்ணின எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்கிற விசுவாசம், நம் நோக்கத்தில் உறுதியாய் இருக்க உதவுகிறது. நம்முடைய கடந்தகாலமோ நிகழ்காலமோ நமக்கு முன்னாக இருப்பதோடு ஒப்பிடவே முடியாது.
மாறாத அன்பு
சமீபகாலத்தில் நான் மேற்கொண்ட விமானப் பயணத்தில் விமானம் தரை இறங்குவது சற்று கடினமாக இருந்ததினால், விமானம் ஓடுதளத்தில் ஓடினபொழுது, விமானத்திற்குள்ளிருந்த நாங்கள் அங்கும் இங்குமாக அலைக்கப்பட்டோம். சில பயணிகள் மிகவும் பயத்துடன் இருந்தார்கள். ஆனால் எனக்குப்பின் அமர்ந்திருந்த சிறுமிகள் “ஆம், நாம் மறுபடியும் முன்புபோல வலது இடதுபுறமாக அசைவோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினபொழுது அந்த பயம் நிறைந்த சூழ்நிலை மாறிவிட்டது.
பொதுவாக குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான செயல்களை ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடனும், எளிய திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். “சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” (மாற். 10:15) என்று இயேசு கூறினபொழுது, குழந்தைகளின் இத்தன்மையை மனதில் வைத்துதான் ஒருவேளை அவர் அப்படி கூறியிருக்கலாம்.
வாழ்க்கையில் சவால்களும், இருதயத்தை நொறுக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் ஏற்படலாம். “அழும் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் எரேமியா இதைக்குறித்து, நாம் அறிந்ததை விட அதிகமாக அறிந்திருந்தான். ஆனால் எரேமியாவின் கஷ்டங்கள் மத்தியில் “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது”(புலம். 3:22–23) என்ற ஓர் ஆச்சரியமான உண்மையை அவனிடம் கூறி தேவன் அவனை ஊக்குவித்தார்.
நம்முடைய வாழ்க்கையில், தேவனுடைய புதிய கிருபைகள் எந்த நேரத்திலும் அருளப்படலாம். அவருடைய கிருபை எப்பொழுதுமே உள்ளது. ஆனால், தேவன் ஒருவரால் மட்டுமே செய்யப்படக்கூடிய காரியங்களுக்காக, சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்புடன், விழிப்புடன் காத்திருக்கும்பொழுது மட்டுமே அவரது கிருபைகளை நம்மால் பார்க்க இயலும். நமது உடனடியான சூழ்நிலைகளை வைத்து தேவனுடைய நன்மைத் தன்மையை விளக்க இயலாது என்றும், வாழ்க்கையின் மிகக்கடினமான பகுதிகளை விட அவருடைய உண்மை பெரிதென்றும் எரேமியா அறிந்திருந்தான். இன்று, தேவனுடைய புதிய கிருபைகளைத் தேடி கண்டுபிடியுங்கள்.
“நீ விண்ணப்பம் பண்ணினதினாலே”
நீங்கள் உங்கள் கவலைகளைக் குறித்து என்ன செய்வீர்கள்? அவற்றை உங்களுடைய உள்ளத்திற்குள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது பரத்துக்கு நேராக திருப்புவீர்களா?
சனகெரிப் எனும் கொடிய அசீரியா தேசத்து ராஜா, எருசலேம் பட்டணத்தை அழித்துப் போடும்படி ஆயத்தம் பண்ணுகையில் எசேக்கியா ராஜாவுக்கு, செய்தி அனுப்பி, பிற தேசங்களைக் கைப்பற்றினது போலவே யூதாவையும் கைப்பற்றுவேன் என்று அறிவித்தான். எசேக்கியா ராஜா, அச்செய்தி அடங்கிய ஓலையை எடுத்துக்கொண்டு, எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய், “கர்த்தருக்கு முன்பாக அதை விரித்து” (ஏசா. 37:14), கர்த்தரை நோக்கி தங்களை இரட்சிக்கும்படி விண்ணப்பம் பண்ணினான்.…