வீடற்றவராக வாழ தேர்ந்து கொள்ளல்
1989 ஆம் ஆண்டு முதல் கெய்த்வாசர்மேன் ஒவ்வொரு ஆண்டிலும் ஒருசில நாட்களை வீடற்ற நிலையில் கழிக்க தேர்ந்து கொள்வார். தனக்குள்ளே அன்பையும் மனதுருக்கத்தையும் வளர்த்துக்கொள்ள, இது உதவியாயிருக்கிறதெனக் கருதுகின்றார். 'நற்செயல்கள்" என்ற நிறுவனத்தின் இயக்குனரான கெய்த், 'தெருக்களில் வசிப்பவர்களோடு வாழும்போது என்னுடைய கண்ணோட்டத்தையும், புரிந்துகொள்வதையும் விரிவாக்கிக்கொள்ள முடிகிறது" என்கின்றார்.
தான் பணியாற்றும் நபர்களோடு ஒருவராக தன்னை இணைத்துக் கொள்ளும் கெய்த்தின் இந்த அணுகுமுறை, இயேசு நிறைவேற்றிய பணியின் ஒரு சிறிய பகுதியைப் போன்றுள்ளது. இந்த அகில உலகையும் படைத்த தேவன் தாமே, இந்த கொடிய உலகில் குழந்தையாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, நாம் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தானும் அனுபவிக்கவும், மனிதனின் கரத்தாலே மரிக்கவும் தன்னை அர்ப்பணித்தார். இதன்மூலம் நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை மீண்டும் ஏற்படுத்தினார்.
எபிரெயரை எழுதியவர், 'பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு... அப்படியானார்" (2:14) எனக் குறிப்பிடுகின்றார். இயேசுவும் தேவதூதர்களைக் காட்டிலும் சிறியவராகத் தன்னைத் தாழ்த்தினார் (வச. 9). அவரே அவர்களை உருவாக்கியவராயிருந்தும் தன்னைத் தாழ்த்தினார். அவர் முடிவில்லாத வாழ்வுடையவராயிருந்தும் மனிதனாகப் பிறந்து, மரித்தார். அவர் சர்வ வல்லவராயிருந்தும் நமக்காகப் பாடுபட்டார். ஏன் அவர் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், நாம் சோதிக்கப்படும்போது நமக்கு உதவும் பொருட்டும் தேவனுக்கும் நமக்குமிடையே ஒப்புரவாகுதலை ஏற்படுத்தவும் தன்னை ஒப்புக்கொடுத்தார் (வச. 17-18).
இன்று நாம் அவருடைய அன்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவர் நம்முடைய மனிதத் தன்மையைப் புரிந்து கொள்கின்றார். நாமும் நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று தூய்மையடைய ஒரு வழியைத் திறந்துள்ளார்.
கனிவான செயல்கள்
'எஸ்தர், உனக்கு நம்முடைய சிநேகிதி ஹெலனிடமிருந்து ஒரு பரிசு வந்தள்ளது" என பணியை முடித்து வீடு திரும்பிய என் தாயார் என்னிடம் கூறினார்கள். நாங்கள் வளர்ந்த பின்னர் பரிசுகள் அதிகம் வருவதில்லை. எனவே ஒரு பரிசை தபாலில் பெறுவது இரண்டாவது கிறிஸ்மஸ் போன்று மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அருமையான பெண்ணின் மூலம் தேவன் என்னையும் நேசிக்கின்றார், நினைக்கின்றார், என்னை கனப்படுத்தியுள்ளார்.
அந்த ஏழை விதவை தபித்தாள் (தொற்காள்) என்னைப் போன்ற அநேகருக்கு உடைகளை தயாரித்துக் கொடுத்தாள். அவள் யோப்பா பட்டணத்தில் வாழ்ந்து, இயேசுவைப் பின்பற்றி வந்த ஒரு பெண். அவளுடைய சமுதாயம் அவளின் அன்பின் கிரியைகளை நன்கு அறிந்திருந்தது. அவள் நற்கிரியைகளையும், தருமங்களையும், மிகுதியாகச் செய்து வந்தாள் (அப். 9:36). அவள் சுகவீனமாகி, மரித்துப்போனாள். அப்பொழுது பேதுரு அருகிலுள்ள ஒரு பட்டணத்திற்கு வந்திருந்தார். எனவே இரண்டு விசுவாசிகள் அவரிடம் சென்று அவரை யோப்பா பட்டணத்திற்கு வரும்படி வருந்திக் கேட்டுக்கொண்டனர்.
பேதுரு அங்கு வந்த போது விதவைகளெல்லாரும் 'தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து..." (வச. 39) அவளுடைய கனிவான செயல்களை எடுத்துரைத்தனர். அவர்கள் பேதுருவிடம் செயல்படுமாறு கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால், பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பேதுரு ஜெபித்தார். தேவன் அவளை உயிர் பெறச் செய்தார். தேவனுடைய இரக்கம் அதைச் செய்தது. 'இது யோப்பா பட்டணம் எங்கும் தெரிய வந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்" (வச. 42).
நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் கனிவாக நடந்து கொண்டால், அதன் மூலம் அவர்கள் தேவனிடம் திருப்பப்படுவர். தேவனால் கனம் பெறுவர்.
ஒரு சாதாரண மனிதன்
இங்கிலாந்து தேசத்தில் நார்த்தாம்டன் என்ற இடத்தில், ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் வில்லியம் கேரி. அவர் சிறுவனாக இருந்த போது ஒரு சுகவீனமானப் பையனாக இருந்தார். அவருடைய எதிர்காலத்தை அவர் பிரகாசமாக நினைத்ததேயில்லை. ஆனால். தேவன் அவருக்கு வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். எல்லாக் குறைகளின் மத்தியிலும் அவர் இந்தியாவுக்கு வந்தார். இங்கு அவர் மிகப் பெரிய சமுதாயச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். வேதாகமத்தை அநேக இந்திய மொழிகளில் பெயர்த்தார். அவர் தேவனையும் மக்களையும் நேசித்தார். தேவனுக்காக அநேகக் காரியங்களை நிறைவேற்றினார்.
ஈசாயின் மகனான தாவீது ஒரு சாதாரண இளம்வாலிபன். தன் வீட்டின் இளைய மகன். அவன் பெத்லகேமின் மலைகளில் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு மேய்ப்பனாயிருந்தான் (1 சாமு. 16:11-12). ஆனால், தேவன் தாவீதின் இருதயத்தைக் கண்டார். அவனுக்கு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். சவுல் தேவனுக்குக் கீழ்படியாததால் தேவன் அவனை புறக்கணித்தார். சாமுவேல் தீர்க்கதரிசி சவுலுக்காக துக்கத்தோடிருந்தபோது, தேவன் சாமுவேலை அழைத்து வேறொரு ராஜாவை அபிஷேகம் பண்ணும்படி, ஈசாயின் மகனைக் காண்பிக்கின்றார்.
சாமுவேல் எலியாப்பின் வசீகரத்தையும், அவனுடைய சரீர வளர்ச்சியையும் கண்டபோது, “கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுகிறவன் இவன்தான்" என எண்ணினான் (வச. 6) ஆனால், தேவன் ஒரு இராஜாவைத் தேர்ந்தெடுக்கும் திட்டமும் செயலும், சாமுவேலின் பார்வையிலிருந்து வேறுபட்டது. ஈசாயின் ஒவ்வொரு மகனையும் தேவன் நிராகரித்தார். இளையவனையே தேர்ந்தெடுத்தார். தாவீதை அரசனாகத் தேர்ந்தெடுத்தது, அவனுடைய திறனின் அடிப்படையிலல்ல. வெறுமனே வெளித் தோற்றத்தைப் பார்த்தும் எடுத்த முடிவில்லை. ஓர் இளம் மேய்ப்பனிடம் தன் ஜனங்களுக்கும், தன் தேசத்திற்கும் கொடுக்கும்படியாக என்ன இருக்கக் கூடும்?
தேவன் நம் உள்ளங்களையறிவார். அவர் நமக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பதை நினைக்கும் போது எத்தனை ஆறுதலாகவுள்ளது.