நொஸோமி நம்பிக்கை!
கி.பி. 2011ல் (9 ரிக்டர்) அளவிலான கொடிய பூகம்பமும் அதனால் ஏற்பட்ட சுனாமியும் டோக்கியோ நகரின் வடகிழக்கேயுள்ள பகுதியில் சுமார் 19,000 பேரைக் கொன்றது. 2,30,000 வீடுகள் அழிக்கப்பட்டது. ஜப்பானிய மொழியில் ‘நம்பிக்கை’ என்னும் அர்த்தமுடைய நொஸோமி திட்டம் பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான வருமானம், சமூக நலம், உரிய மரியாதை மற்றும் தேவன் அளிக்கும் நம்பிக்கை ஆகியவற்றை அளிக்க உருவாக்கப்பட்டது.
நொஸோமித் திட்டம் மூலம் பெண்கள், சிதைந்துபோன வீடுகள், மற்றும் உடைந்த மரச் சாமான்கள், உடைந்த பீங்கான் துண்டுகளைச் சேகரித்து பொடியாக்கி மணலோடு கலந்து நகைகளைச் செய்தனர். இந்த நகைகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. இந்தப் பெண்கள் அவற்றால் வருமானத்தைப் பெற்றதோடு, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள தங்களது நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், அந்த நகைகள் உதவியது.
புதிய ஏற்பாட்டுக் காலத்தின் மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்களில் விலைமதிப்புள்ளவைகளை ஒளித்துவைப்பது வழக்கமாயிருந்தது. இயேசுவின் சீஷர்களது மண்பாண்டமாகிய சரீரங்களில் சுவிசேஷமானது பொக்கிஷமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதை ( 2 கொரி. 4:7) பவுல் இங்கு விளக்கிக் கூறுகிறார். மிகவும் சிறிதான, எளிதில் உடையக்கூடிய நமது வாழ்வென்னும் பாத்திரங்களில் நமது பரிபூரணமற்ற நிலையையும் தாண்டி, தேவ வல்லமை வெளிப்பட முடியுமென பவுல் கூறுகிறார்.
பூரணமற்ற, உடைந்த துண்டுகளான நமது வாழ்வில் தேவன் குடிகொள்ளும் போது, தேவ வல்லமையின் சுகமளிக்கும் நம்பிக்கையைப் பிறரால் நம்மில் காணக்கூடும். ஆம், அவர் நம்மைச் சீர்ப்படுத்தும்போது, நமது இருதயங்களில் சில சிறு கீறல்களும் தழும்புகளும் தோன்றலாம். ஆனால், நம்மில் ஏற்படும் அச்சிறு கோடுகள் அவரது குணாதிசயத்தை பிறருக்கு இன்னும் அதிகமாக காண்பிக்கக் கூடும்.