நீ இருக்கும் இடத்திலிருந்தே துவங்கு
இன்று, பரந்த புல்வெளியில் தனிமையாக பூத்திருந்த ஒரு சிறிய ஊதா நிற பூவைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கவிஞர் தாமஸ் கிரேயின் “பாலைவனக் காற்றிலே தன் நறுமணத்தை வீணடித்துக்கொண்டிருந்த...” என்னும் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. கண்டிப்பாக இந்த பூவை எனக்கு முன் யாராவது பார்த்திருக்கக் கூடும் என எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை, இதை இனி ஒருவரும் பார்க்கக் கூடாமலும் போகலாம். பிறகு எதற்கு இந்த அழகிய படைப்பு இவ்விடத்தில் என எண்ணினேன்.
இயற்கை ஒருபொழுதும் வீணாகக் கடந்து போவதில்லை. அது தன்னைப் படைத்தவருடைய உண்மையையும், நன்மையையும், அழகையும் விவரிக்கின்றது. இயற்கையானது, ஒவ்வொரு நாளும், தேவனுடைய மகிமையை புதிது புதிதாய் அறிவிக்கிறது. நான் அவரை இயற்கையின் அழகில் காண்கிறேனா அல்லது அதின் மேல் ஒரு சிறு பார்வை வீசிவிட்டு அலட்சியமாய் சென்று விடுகிறேனா?
இயற்கை தன்னைப் படைத்தவருடைய அழகை முழுவதும் அறிவிக்கிறது. ஒரு சூரியகாந்திப் பூவின் அழகைக் காணும் பொழுதும், காலை கதிரவனின் பிரகாசத்தை காணும் பொழுதும், ஒரு மரத்தின் வடிவத்தைக் காணும் பொழுதும் அவற்றைப் படைத்தவரை நாம் ஆராதிக்கலாம், பக்தியுடன் தொழுது கொள்ளலாம் அல்லது நன்றி தெரிவிக்கலாம்.
ஒரு சுட்டெரிக்கும் கோடை நாளில் காட்டுப் பகுதியில் நண்பனோடு நடைபயணம் சென்றதை சி. எஸ். லூயிஸ் இவ்வாறு விவரிக்கிறார். அவர் தன் நண்பனிடம், தேவனை நோக்கிய நன்றியுள்ள இருதயமாக தன் இருதயம் விளங்க, அதை எவ்வாறு பண்படுத்துவது எனக் கேட்டதற்கு, அவருடைய நண்பர் அருகில் இருந்த ஒடையை நோக்கி திரும்பி, அதிலிருந்து கொட்டிய சிறிய அருவியிலிருந்து நீரை தன் முகத்திலும், கைகளிலும் தெளித்துக் கொண்டு, “இதிலிருந்து ஏன் துவங்கக்கூடாது?” என கூறினார். அப்பொழுதுதான்,
“நீ இருக்கும் இடத்தில் இருந்தே துவங்கு,’ என்கிற மகத்தான கோட்பாட்டை கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
மெதுவாய் கசியும் ஒரு சிறிய அருவி, வேப்ப மரத்தின் குளிர்ந்த காற்று, ஒரு சிட்டுக் குருவிக் குஞ்சு, ஒரு சிறிய மலர், இவற்றிற்காக நன்றி செலுத்தத் துவங்கலாமே.
இடியும் மின்னலும்
பல வருடங்களுக்கு முன்பு நானும், என்னுடைய நண்பரும் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, தீடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் அருகில் உள்ள ஒரு தோப்பில் ஒதுங்கி நின்றோம். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தபடியால், பேசாமல் கிளம்புவதே நன்று என முடிவு செய்து, எங்கள் வண்டியை நோக்கி ஓடினோம். வண்டியை அடைந்து கதவைத் திறந்தபொழுது, நாங்கள் நின்றுகொண்டிருந்த அத்தோப்பின் மீது பலத்த இடி ஓசையுடன் மின்னல் வெட்டி அக்கினி பந்தாக விழுந்தது. அதன் விளைவாக அம்மரங்களின் இலைகளும் பட்டைகளும் உரிந்து விழுந்து கொஞ்சம் கிளைகள் மாத்திரமே மிஞ்சியது. அதுவும் புகைந்து கொண்டிருந்தது. பின்பு அமைதி நிலவியது.
இக்காட்சியை கண்டு நாங்கள் பிரமித்து நடுங்கிக் கொண்டிருந்தோம்.
எங்கள் இடாஹோ (Idaho) பள்ளத்தாக்கில் மின்னல்வெட்டுக்களையும், இடியோசைகளையும் காணலாம். மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தாலும், அவை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அதீத சக்தி எனக்கு மிகவும் பிடிக்கும். மின்சக்தி! அதிர்வு! அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு! இவை அனைத்தும் எனக்கு பிடிக்கும். பூமியும், அதிலுள்ள அனைத்தும் நடுநடுங்குகின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் பின் அமைதி நிலவுகிறது.
இடியும் மின்னலும் தேவனுடைய சத்தத்திற்கு அடையளமாய் இருப்பதினாலேயே எனக்கு அவை மிகவும் பிடிக்கும் (யோபு 37:4). அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் தம்முடைய அளவற்ற மகிமையையும், வல்லமையையும் வெளிப்படுத்துகிறார். “கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளை பிளக்கும்.. கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்” (சங். 29:7,11). நாம் பொறுமையோடிருக்கவும், அன்பாக இருக்கவும், சகித்துக் கொள்ளவும், அமைதியாக அமர்ந்திருக்கவும், எழுந்து செல்லவும் அல்லது ஒன்றுமே செய்யாமலிருக்கவும் அவர் நமக்கு பெலனளிப்பார்.
சமாதானத்தின் தேவன் உம்மோடு கூட இருப்பாராக.
திட்டமிடாத இரக்க செயல்கள்
1982ஆம் ஆண்டு ஒரு உணவகத்திலுள்ள தட்டை வைக்கும் சிறு மேஜை விரிப்பில் “திட்டமிடாத இரக்கச் செயல்களையும், காரணமற்ற அழகிய செயல்களையும் செய்யப் பழகுங்கள்” என அமெரிக்க எழுத்தாளராகிய ஆனி ஹெர்பட் (Anne Herbert) கிறுக்கியதாக சிலர் கூறுவார்கள். இக்கருத்து சினிமா மற்றும் இலக்கிய படைப்புகளின் மூலம் பிரபலமாக்கப்பட்டு இன்று நம் சொல் அகராதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இப்பொழுது கேள்வி என்னவெனில், “ஏன்?” ஏன் நாம் இரக்கம் பாராட்ட வேண்டும்? இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு, பதில் தெளிவாய் உள்ளது. அதாவது, தேவனுடைய அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தவே.
இந்த நியமத்திற்கேற்ற ஒரு உதாரணத்தை பழைய ஏற்பாட்டில் மோவாபியப் பெண்ணாகிய ரூத்தினுடைய கதையிலே காணலாம். அவள் அந்நிய தேசத்தை சேர்ந்தவள். ஆகையால் இத்தேசத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் அவள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி, அவள் மோசமான வறுமையில் இருந்தபடியினால், அவளைக் கவனியாமல் அசட்டை செய்த ஜனத்தின் உதவியையே முழுமையாக எதிர்பார்த்திருந்தாள்.
ஆனால், அந்த இஸ்ரவேலரில் ஒருவன் அவளுக்கு கிருபை பாராட்டி அவளுடைய இருதயத்தோடே பேசினான் (ரூத் 2:13). தன்னுடைய வயல்களில் அறுவடைக்கும் பின் மீதமுள்ள தானியங்களை அவள் எடுத்துக்கொள்ள அனுமதித்தான். ஆனால் சாதாரண உதவியைக் காட்டிலும், தன்னுடைய இரக்கத்தின் மூலம், செட்டைகளை விரித்து அடைக்கலம் அளிக்கும் கனிவான இரக்கத்தையும், அன்பான கிருபையையும் உடைய தேவனை வெளிப்படுத்தினான். பின்பு அவள் போவாஸின் மனைவியாக தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினராகி, உலக இரட்சகராகிய இயேசு பிறந்த வம்சாவளியின் முன்னோர்களில் ஒருவர் ஆனாள் (மத். 1:1-16).
இயேசுவின் நாமத்தினாலே நாம் செய்யும் ஒரு இரக்கமுள்ள செயல் என்ன விளைவை விளைவிக்கும் என நமக்கு தெரியாது.
ஒரு சிறிய தூக்கம்
முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த ஸ்காட்லாண்ட் (Scottland) போதகர், ஹென்றி டர்பன்வில்லே (Henry Durbanville) தங்கள் தேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு வயதான தாயாரைப்பற்றி ஓர் கதை கூறினார். அப்பெண்மணி எடின்பர்க் (Edinburgh) நகரத்தை காண வேண்டும் என மிகவும் விரும்பினார். ஆனால், அங்கு செல்ல வேண்டுமானால், ரயில் வண்டியில் ஒரு நீண்ட இருண்ட சுரங்க பாதையை கடந்து செல்ல வேண்டும் என்பதை எண்ணி அப்பயணத்தை தவிர்த்து வந்தார்.
ஆனால் ஒரு நாள் எடின்பர்க் (Edinburgh) செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரயில் வண்டி நகரத்தை நோக்கி செல்லச் செல்ல அவருடைய பதற்றம் கூடியது. ஆனால், ரயில் சுரங்கப்பாதையை கடக்கும் முன்பு கவலையுற்றதின் களைப்பினால் உறங்கிப் போனார். அவர் கண் விழித்த பொழுது நகரத்தை அடைந்து விட்டார்!
நம்மில் ஒரு சிலர் மரணத்தை காணாமல் இருக்கக் கூடும். இயேசு திரும்ப வரும்பொழுது, நாம் உயிரோடு இருப்போமானால், அவரை “மேகங்கள்மேல்” எதிர்கொள்வோம்
(1 தெச. 4:13-18). ஆனால் நம்மில் அநேகர் மரணத்தை ருசிபார்த்து பரலோகம் செல்வோம். இந்த காரியம் அநேகருக்கு மிகப்பெரியப் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மரண வழி மிகவும் கடினமாக இருக்கும் என நினைத்து கலங்குகிறோம்.
ஆனால், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அளித்த உத்தரவாதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களாய், இந்த பூமியிலே நாம் கண்மூடி, கண் விழிக்கும் பொழுது தேவ பிரசன்னத்திலே இருப்போம் என்பதால், இளைப்பாறக்கடவோம். “ஒரு சிறு உறக்கத்திற்கு பின் நித்தியத்திலே கண் விழிப்போம்” என ஜான் டான் (John Donne) கூறியுள்ளார்.
நிலையான தயவு
நான் சிறுபிள்ளையாக இருந்தபொழுது, எல். ஃபிரான்க் பாம் (L. Frank Baum) அவர்களுடைய ஓஸ் தேசம் (Land of Oz) புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன். சமீபத்தில், அசல் வரைபடங்கள் அடங்கிய ‘ஓஸ் தேசத்தில் ரின்கிடின்க்’ (Rinkitink in Oz) என்னும் புத்தகத்தை படிக்கநேர்ந்தது. அதில் உண்மைமிக்க கட்டுக்கடங்காத நல்ல இருதயமுள்ளவரான ரின்கிட்டின்க் (Rinkitink) ராஜாவின் கோமாளித்தனமான சேட்டைகளை வாசித்து சிரித்தேன். “அவன் இளகிய மனமும், தயவும் நிறைந்தவன். ஞானமாய் இருப்பதைக் காட்டிலும் இது சிறந்தது,” என அவனைக் குறித்து இளவரசன் இன்கா (Prince Inga) விவரிக்கிறார்.
எவ்வளவு எளிமையும், விவேகமுள்ள கூற்று இது! ஆயினும், நமக்கு பிரியமானவரின் இருதயத்தை ஒரு கடினவார்த்தையினால் காயப்படுத்தாதவன் யார்? அப்படிசெய்யும் பொழுது, சமாதானத்தைக் கலைத்துப் போடுவது மட்டுமின்றி, நாம் நேசிப்பவர்களுக்கு நாம் செய்த நன்மைகளை கடினவார்த்தைகளினால் நாமே ரத்துசெய்துவிடுகிறோம். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹான்னா மோர் (Hannah More) என்னும் ஆங்கில எழுத்தாளர், “ஒரு சிறிய அன்பற்ற தன்மை பெரிய குற்றமாகும்,” என கூறியுள்ளார்.
நற்செய்தி என்னவெனில், யார் வேண்டுமானாலும் இரக்கமுள்ளவனாகலாம். ஒரு எழுச்சியூட்டும் பிரசங்கத்தை பிரசங்கிக்க அல்லது கடினமான கேள்விகளுக்கு பதில் கூற அல்லது பெரும் கூட்டத்திற்கு சுவிசேஷம் கூற திராணியில்லாமல் போகலாம். ஆனால், நாம் இரக்கமுள்ளவர்களாய் இருக்கமுடியும். அது எப்படி? ஜெபத்தின் மூலம். நம் இருதயங்களை இளகச்செய்யும் ஒரே வழி அதுவே. “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3-4) என்று ஜெபிப்பதே.
அன்பு தணிந்துபோன இவ்வுலகில் தேவனுடைய இருதயத்திலிருந்து பொங்கும் இரக்கத்தைக் கொண்டுதான் பிறருடைய காயங்களை குணமாக்கி உதவமுடியும்.
சிவப்பு தூண்டில்
சில வருடங்களுக்கு முன்பதாக ஏதேச்சையாக இரண்டாம் நாற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளரான ஏலியனின் (Aelian) மீன் பிடிக்கும் கதையை வாசிக்க நேர்ந்தது. அது ஓர் மீனவ நாட்டுப்புற கதையாகும். “பொரோக்காவிற்கும் தெசலோனிக்காவிற்கும் இடையே ஓர் ஆறு உள்ளது. அதன் பெயர் ஆஸ்ட்ரகஸ். அதில் நிறைய புள்ளிகளுள்ள ட்ரவுட் (Trout) மீன்கள் உள்ளன”. மேலும் அவற்றை எப்படி அந்த மக்கள் பிடிப்பார் என்பதை விவரித்திருந்தார். “ஒவ்வொரு மீனுக்கும் ஒரு பொறியைத் தயாரித்து, கருஞ்சிவப்பு நிற கம்பளி நூலை ஓர் கொக்கியில் மாட்டி, அதில் இரண்டு பறவையின் இறகுகளையும் சேர்த்து, பின் அந்த பொறியை தண்ணீரில் தூக்கி வீசுவர். சிவப்பு வண்ணத்தினால் கவரப்பட்ட மீன் அருகில் வந்து, தீனியை தின்பதற்கு அதைக் கவ்வும்” (On the Nature of Animals).
இதே தந்திரத்தை தான் மீனவர் இன்றும் பயன்படுத்துகின்றனர். இதற்கு பேர் தான் ரெட் ஆக்கிள் (சிவப்பு தூண்டில்). முதன் முதலில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இதை பயன்படுத்தினர். இன்றும் கூட நேர்த்தியாய் மீன்களைப் பிடிக்க இந்த தூண்டில்கள் உதவுகின்றன.
இந்தப் பழங்கதையை படித்தவுடன் ஓர் எண்ணம் தோன்றியது. பழைய காரியங்கள் எல்லாம் காலம் கடந்து விட்ட, ஒன்றுக்கும் உதவாத, கட்டுக்கதைகள் அல்ல – முக்கியமாக மனிதர்கள். முதுமையில் மன நிறைவுடனும், சந்தோஷத்துடனும் வலம் வந்து, நாம் தேவனை ஆழமாக அறியும் அறிவையும், நிறைவையும் எடுத்துரைத்து வாழ்ந்து வந்தால், நமது முதுமையிலும் நாம் பலருக்கு மிகவும் பயனுள்ளவராய் இருப்போம். முதுமைக் காலத்தில் குறையும் ஆரோக்கியத்தையும் கடந்த காலத்தையும் பற்றி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அது அமைதியும், மகிழ்ச்சியும், தைரியமும் கனிவும் நிறைந்த அற்புத கால கட்டமாக இருக்கலாம்; தேவனோடு நடந்து, வாழ்ந்து, வளர்ந்தவர்கள் தங்கள் கனிகளை பிறர் சுவைக்க வெளிப்படுத்தும் அழகிய காலம் அது.
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்... அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்
(சங். 92:13-15).
ஒரு கடினமான மலை
இடாஹோ (Idaho) என்னும் இடத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு மேற்கில் ஜூக்கான்டால் (Jughandle) சிகரத்தின் மலைமடிப்புகளின் மத்தியில் ஒரு பனிப்பாள ஏரி உள்ளது. இந்த உறைந்த ஏரிக்குச் செல்லும் பாதை மிகவும் செங்குத்தான, பாதுகாப்பற்ற வழி. அதுமட்டுமன்றி வழியெங்கும் கற்பாறைகளும், சிதறுண்டு கிடக்கும் கற்களும் இருக்கும். அது ஒரு கடினமான மலையேற்றமாகும்.
ஆனால், இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு ஓடை உள்ளது. பாசிபடர்ந்த லேசான மணற்பரப்பிலிருந்து நீருற்று கசிந்து ஒரு பசுமையான புல்வெளியின் ஊடாய் ஓடுகின்றது. இது கடினமான மலையேற்றத்திற்குமுன் நன்கு நீர் அருந்தி, நம்மை தயார்படுத்திக் கொள்ள ஏற்ற ஒரு அமைதியான இடம்.
கிறிஸ்தவ வாழ்வை சிறப்பாக உருவகப்படுத்திய ஜான் பனியனின் “மோட்சப் பிரயாணம்” (The Pilgrim’s Progress) என்னும் இலக்கியத்தில், ‘கடின மலை’ என்று அழைக்கப்படும்; செங்குத்தான மலையின் அடிவாரத்திற்கு கிறிஸ்தியான் வருகிறான். “அந்த அடிவாரத்தில் ஓர் ஓடை இருந்தது. கிறிஸ்தியான் அந்த ஓடைக்கு சென்று நீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மலையேறத் தொடங்கினான்.”
ஒரு வேளை நீங்கள் எதிர்கொள்ளும் அந்தக் கடினமான மலை உங்கள் முரட்டாட்டமான பிள்ளையாக இருக்கலாம் அல்லது ஒரு முக்கியமான மருத்துவ சோதனையின் முடிவாக இருக்கலாம். நீங்கள் எதிர்கொள்ளும் சவால் உங்களால் தாங்க முடியாத ஒன்றாகத் தோன்றலாம்.
ஆகவே நீங்கள் உங்களுடைய அடுத்த முக்கியமான பணியை மேற்கொள்ளும் முன்பு, புத்துணர்வளிக்கும் நீருற்றுக்கு செல்லுங்கள். அதாவது தேவனிடம் செல்லுங்கள். உங்களுடைய பெலவீனம், சோர்வு, உதவியற்ற நிலை, பயம், சந்தேகம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவருடைய வல்லமையை, பெலத்தை, ஞானத்தை நிறைவாய்ப் பருகுங்கள். தேவன், உங்களுடைய எல்லா சூழ்நிலைகளையும் அறிவார், ஆவிக்குரிய பெலத்தையும், சமாதானத்தையும் அளவில்லாமல் அளிப்பார். அவர் உன் தலையை உயர்த்தி, நீ செல்லுவதற்கு வேண்டிய பெலத்தை உனக்களிப்பார்.
படிப்படியாக
வேதாகமத்திலுள்ள எண்ணாகமம் 33ம் அதிகாரத்தை ஆழ்ந்த சிந்தனை எதுவுமில்லாமல் நாம் வாசிக்கலாம். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலுள்ள ராமசேஸ் பட்டணத்தை விட்டு, மோவாப் சமவெளியை அடையும் வரை அவர்கள் கடந்து வந்த இடங்களின் பட்டியலைத்தவிர, வேறு ஏதும் அந்த அதிகாரத்தில் இல்லை. ஆனால், அப்பகுதி மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும். ஏனென்றால் இந்த ஒரு பகுதி மட்டும்தான் “மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே… எழுதினான்” (வச. 2) என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏன் இப்படியான குறிப்புகளை பதிவு செய்து வைக்க வேண்டும்? வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாக பயணம் செய்த இஸ்ரவேல் மக்கள், அவர்கள் கடந்து வந்த இடங்களையும், அந்தந்த இடங்களில், தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராக இருந்து, செய்த நன்மைகளையும், அவர்களது மனதில் நினைத்துப் பார்ப்பதற்கு அந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும்.
ஒரு கூடாரத்திற்கு வெளியே திறந்த வெளியில் மூட்டப்பட்ட நெருப்பின் அருகில் ஓர் இஸ்ரவேல் தகப்பனார் அமர்ந்து, அவருடைய மகனிடம், “ரெவிதீமை என்னால் மறக்கவே இயலாது! அங்கு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு எங்கு பார்த்தாலும் மணலும், வறண்ட பிரதேச தாவரங்கள்தான் இருந்தன. நான் தாகத்தால் செத்துக்கொண்டிருந்தேன். பின்பு தேவன், மோசேயிடம் அவனது கோலை ஓங்கி கன்மலையை அடிக்கும்படி கூறினார். அது ஒரு கருங்கல் பாறை. மோசே அதை அடித்தது ஒரு பயனற்ற செயல். அந்தக் கடினமான கல்லிலிருந்து எதையும் பெற்றுக்கொள்ள இயலாது. ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தக் கன்மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேல் மக்களின் தாகத்தைத் தீர்க்குமளவிற்கு அதிகமான தண்ணீர் அதிலிருந்து வந்தது. அந்த நாளை என்னால் மறக்கவே இயலவில்லை” (சங். 114:8; எண். 20:8–13; 33:14 பார்க்க) என்று அந்த தகப்பனார், அவர் கடந்து வந்த இடங்களில் நடந்தவற்றை மறுபடியும் நினைவில் கொண்டுவந்து கூறுவதாக நான் என் மனதில் கற்பனை பண்ணுகிறேன்.
ஆகவே நீங்களும் ஏன் இந்தவித முயற்சியை எடுக்கக்கூடாது? உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நடந்த காரியங்களை நினைவு கூர்ந்து, தேவன் வாக்குப்பண்ணின அவரது அன்பை உண்மையாக உங்கள் மீது ஒவ்வொரு நிலைமையிலும் காண்பித்து நடத்தி வந்ததை நினைவு கூறுங்கள்.
இந்த வரம்
நான் சேகரித்து வைத்திருந்த பிரம்புகள், தடிகள், கைத்தடிகள் பற்றி அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கட்டுரை எழுதினேன். அவற்றை நான் பயன்படுத்த வேண்டிய காலம் வரும் என்று எனக்குள் நானே சிந்தித்தேன். அந்த நாளும் வந்தது. முதுகில் ஏற்பட்ட பிரச்சனையுடன் கூட நரம்புத்தளர்ச்சியும் சேர்ந்து, மூன்று சக்கரங்களையுடைய நடக்க பயன்படும் உபகரணத்தை (Walker) பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. என்னால் நீண்ட தூர நடைப்பயிற்சி செய்ய இயலாது; மீன் பிடிக்க இயலாது; எனக்கு மகிழ்ச்சியை அளித்த அநேக செயல்களை என்னால் செய்ய இயலாது.
என்னுடைய செயல்பாடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் உட்பட்டு இருந்தாலும், அவை அனைத்தும் தேவன் எனக்கு அருளிய வரங்கள் என்றும், அந்த வரங்களோடு நான் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்பதையும் கற்றுக்கொண்டு வருகிறேன். தேவன் எனக்கு அளித்துள்ளது இந்த வரம்தான், மற்றப்படி வேறு வரம் அல்ல. நமது செயல்களை எல்லைக்கு உட்படுத்தும் இந்தக் காரியங்கள் - நமது உணர்வுகள் சார்ந்ததாகவோ, சரீரப்பிரகாரமானதாகவோ அல்லது அறிவாற்றல் சார்ந்ததாகவோ இருக்கலாம். இது நம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. பவுல் அவரது பலவீனத்தில் தேவனுடைய வல்லமை அவர்மேல் தங்கத்தக்கதாக அவருடைய பலவீனங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவேன் என்று தைரியமாகக் கூறினார் (2 கொரி. 12:9).
நம்முடைய குறைகளை இந்தக் கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பது, நமது செயல்பாடுகளை நம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுத்த உதவுகிறது. நமது குறைபாடுகளை எண்ணி குறைவுபடவோ, சுயபரிதாபமடையவோ விட, அவைகளின்று அவருடைய சித்தத்தை நம்மில் நிறைவேற்ற நம்மை அவரிடம் ஒப்புக்கொடுப்போம்.
உங்களைக் குறித்தோ, என்னைக் குறித்தோ தேவன் என்ன சித்தம் கொண்டுள்ளார் என்று தெரியாது. ஆனால், அது குறித்து நாம் கவலைப்படக்கூடாது. காரியங்களை இருக்கிற வண்ணமாகவே ஏற்றுக்கொண்டு அதில் திருப்தியாக இருந்து, அன்பில், ஞானத்தில், தேவன் அருளும் காரியங்கள் அனைத்திலும் இந்த நிமிடம் மிகச் சிறந்ததாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதே இன்று நாம் செய்ய வேண்டிய காரியமாகும்.