வேலை பாா்க்கும் இடத்தில் அலமாரி சாவியைத் தொலைத்ததாக சீமா மீது குற்றம் சாட்டப்பட்டபோது, அவர் கோபப்படவோ அல்லது தன்னை நியாயப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கவோ இல்லை. தன்னுடன் பணிபுரிபவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், மேலும் அவருக்கே தீங்கு விளைவிக்கக்கூடிய கடுங்கோபத்துடன் இதற்குப் பதிலுரைப்பார் என்பதும் அவளுக்குத் தெரியும். அதனால், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சீமா அவரை அமைதிப்படுத்தும் வார்த்தைகளுடன் ஒரு கோப்பை தேநீர் கொண்டு வந்தார். பதட்டமான சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடிவு செய்தாள்.
தாவீதைக் கொல்லத் துரத்தியபோது சவுல் ராஜா எதிர்பாராத இரக்கத்தைப் பெற்றுக்கொண்டதை வேதாகமம் பதிவு செய்கிறது (வ.1-2). ஆனால் சவுல் தாவீதை எவ்வாறு நடத்தினானோ, அவ்வாறே சவுலை நடத்த நியாயமான வாய்ப்பு கிடைத்தபோது, சவுலின் அங்கியின் ஒரு முனையை மட்டும் கத்தரிக்கத் தீர்மானித்தார் (வ.4). தாவீதின் மனசாட்சி கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்க அனுமதிக்கவில்லை. தாவீது தன்னைக் கூப்பிட்டு அதை விளக்கும் வரை, தான் மரணத்திற்கு அவ்வளவு சமீபமாக இருந்ததைச் சவுல் உணரவில்லை (வ.7-11). தேவநீதியை நம்பி சவுலால் மோசமாக நடத்தப்பட்ட போதிலும், தாவீது கருணையுடன் எதிர்வினையாற்ற முடிந்தது (வ.12-13). இதைக் கண்டு நெகிழ்ந்த சவுல், தாவீதிடம் அழுது, “நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்” (வ.17) என்றான்.
நியாயமற்ற சூழ்நிலைகளில், நம்மைப் புண்படுத்தும் நபர்களைத் திட்டவும், தீங்கிழைக்கும் வகையில் பேசவும் அல்லது அடிப்பதி்ன் மூலமோ கூட அவர்களைக் காயப்படுத்த விரும்பலாம். ஆனால், தாவீது மற்றும் சீமாவைப் போல, பதட்டமான சூழ்நிலைகளில் தேவன் விரும்புவதைப் போலவே நாமும் எதிர்வினையாற்ற முயல வேண்டும். வெறுப்புண்டாக்கும் பகையை வளர்ப்பதற்கு மாறாக நாம் கருணையுடன் செயல்படுவதும் இதில் அடங்கும். சிலுவையில் கூட தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்த கிறிஸ்துவின் முன்மாதிரியை தேவபிள்ளைகளாகிய நாம் போற்றுவோம்.
நியாயமற்ற சூழ்நிலைகளில் நீங்கள் எவ்வாறு நடந்துகொண்டீர்கள்? குறிப்பாக உங்கள் வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் நீங்கள் எந்த விதத்தில் பணிவுடன் எதிர்வினையாற்ற முடியும்?
அன்புள்ள கர்த்தரே, பிறரைப் பொறுத்துக்கொள்ளவும், நீர் விரும்புவதைப் போலச் செயல்படவும் தாழ்மையாலும் இரக்கத்தாலும் என்னை மூடும்.
