“அம்மா” என்பது தாய்க்கான தமிழ் வார்த்தையாகும், இது எமி கார்மைக்கேலின் கல்லறையின் இடத்தில் உள்ள பறவைகளுக்கான குளத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் டோனாவூரில் உள்ள அவரது மிஷன் பள்ளி, தேவதாசிகளாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு ஒரு புகலிடமாக மாறியது. அவரது ஆரம்ப ஆண்டுகளில் பல இரவுகளில், எங்காவது ஒரு சிறுமியைக் காப்பாற்றுவதற்காக, சேலை உடுத்திக்கொண்டு சைக்கிளில் செல்வார் என்று கூறப்படுகிறது. 1931 இல் கீழே மோசமாக விழுந்ததைத் தொடர்ந்து அவர் படுத்த படுக்கையான பிறகும், மற்றவர்கள் மூலம் இந்தக் குழந்தைகளை மீட்பதைத் தொடர்ந்தார். அவர் பல கடிதங்கள் மற்றும் புத்தகங்களை எழுதினார், அவை சேவையைத் தொடரவும், பள்ளிக்கு நிதி பெறவும் உதவின. குழந்தைகளை எமியிடம் ஈர்த்தது எது என்று கேட்டபோது, அவர்கள் “அன்புதான். அம்மா எங்களை நேசித்தார்” என்றார்கள்.
சில சமயங்களில் அன்புதான் சகல நற்பண்புகளுக்கும் தாய் என்பதை நினைவூட்டிக்கொள்ள வேண்டும். உண்மையான அன்பை கிறிஸ்துவில் அனுபவிக்க முடியும், ஏனென்றால் அவர் அன்பின் மனு உருவம் (வ.8). கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, நமக்கு உண்மையான அன்பின் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது. இயேசுவின் அன்பு நிபந்தனைக்குட்பட்டது அல்ல. அவர் தகுதியற்றவர்களையும் நேசித்தார் (வ.11). தேவன் நம்மை நேசிக்கும் விதத்தில் நாம் அன்பைப் பார்க்கும்போது, அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றிய நமது கண்ணோட்டத்தை அது மாற்றுகிறது. இயேசுவைப் போல நாம் நேசிக்காதவரை, தேவனை உண்மையாக அறிய முடியாது என்பதை உணர உதவுகிறது (வ.7-8). பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் தேவசாயலில் படைக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27) மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பு தேவை. தேவபிள்ளைகளாகிய நாம், உண்மையான, கறைபடியாத அன்பின் அர்த்தத்தை, அன்பிற்காகப் பசியால் வாடுபவர்களுக்குக் காட்டத் தகுதியான இடத்தில் இருக்கிறோம். டோனாவூா் அடிமைப் பெண்களின் அன்பின் திருவுருவமாக மாறிய எமியைப் போல நாமும் நம் ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும், கிரியையிலும் இயேசுவின் உண்மையான அன்பை உருப்படுத்துவோம்.
கிறிஸ்துவின் அன்பு உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியது? யாராக இருந்தாலும் சரி, எல்லா மக்களும் கிறிஸ்துவின் அன்பைக் காட்ட நீங்கள் என்ன செய்யக் கூடும்?
அன்பு இயேசுவே, பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், உலகம் பிறரை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
உம்மைப் போல அன்பு செலுத்த எனக்குக் கற்று தாரும்.
