நம்மில் பெரும்பாலோர் கயிறு இழுக்கும் போட்டியை நன்கு அறிந்திருப்போம். இது ஒரு நீண்ட கயிறு கொண்டு, ஒரு மையக் கோட்டை தாண்டும்படி ஒன்றை ஒன்று இழுக்கும் இரு குழுவை உள்ளடக்கியது. அதை இன்னும் வேடிக்கையாக மாற்ற, சில நேரங்களில், ஒரு மண் குழி அல்லது குளிர்ந்த நீர்த் தொட்டி நடுவில் இருக்கும், இதனால் தோல்வியடைந்த அணி அதில் விழும். வெற்றிக்கு உடல் வலிமை மட்டும் போதாது. அதற்குக் கவனம், உறுதிப்பாடு மற்றும் திறமையும் தேவை.
நாமும் இதுபோன்ற பலப்பரீட்சையில் இருப்பதாக பவுல் கூறுகிறார். ஆனால் நாம் வேடிக்கைக்காக விளையாடுவதைப் போலல்லாமல், நமது போராட்டம் “துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்” (வ.12) இருக்கிறது. நாம் ஒரு ஆவிக்குரிய பலப்பரீட்சையில் இருக்கிறோம், நம் எதிரிகள் நம்மைத் தோற்கடித்து பாவத்தின் அழுக்குக்குள் நம்மை விழ வைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்து ஏற்கனவே சிலுவையில் பொல்லாதவனைத் தோற்கடித்துவிட்டார் என்ற உறுதியுடன் “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (வ.13) என்று இந்த ஆவிக்குரிய பலப்பரீட்சைக்கு ஆயத்தப்படும்படி பவுல் நம்மை அழைக்கிறார். வலுவாக இருந்து வெற்றி பெற, மனித பலம் அல்லது நல்ல நோக்கங்கள் உதவாது. நாம் தேவனை நாடி, அவரையே சார்ந்திருக்க வேண்டும். பவுல் சொல்வது போல், நாம் “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் ” (வ.10) பலப்பட வேண்டும். “பிசாசின் தந்திரங்களோ” “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களோ” இவற்றை நாமே சமாளிப்பது கடினம் (வ.11-16). அதிர்ஷ்டவசமாக, நாமே சமாளிக்கவும் வேண்டாம். தேவன் அருளும் பெலனையும் உத்தியையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் (வ.11). நாம் அவரிடம் செல்லும்போது, அவர் நமக்கு “சத்தியம்” என்ற கவசத்தைத் தருகிறார். நமது பாதங்களுக்கு “சமாதானத்தின் சுவிசேஷம்” பொருத்தப்படுகின்றன. மேலும் நாம் “விசுவாச” கேடகத்தால் பாதுகாக்கப்படுகிறோம். உண்மையில், ஆவிக்குரிய பலப்பரீட்சையின் மூலம் உறுதியாக நிற்க அவருடைய வார்த்தை நமக்கு உதவுகிறது (வ.14-17).
ஆவிக்குரிய பலப்பரீட்சையை நீங்கள் எந்த
வழிகளிலும் வடிவங்களிலும் அனுபவிக்கிறீர்கள்?
தேவனின் முழு சர்வாயுதவர்க்கத்தையும் நீங்கள் எப்படி அணிய முடியும்?
தேவனே, என்னுடைய ஆவிக்குரிய போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்ற உமது உறுதிக்காக உமக்கு நன்றி. வலுவாக நிற்க எனக்குப் பெலன் தாரும்.
