ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், “நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர், “நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்” என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.
பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் “வாதினாலாவது” அல்லது “வீண்பெருமையினாலாவது” (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே” (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்” (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் “அடிமையின் ரூபமெடுத்து” , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).
நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
எந்த வகையில் நீங்கள் உரிமையுடையவராக உணர்கிறீர்கள்? இயேசுவின் மனத்தாழ்மையை உங்கள் வாழ்வில் நீங்கள் எப்படி எடுத்துக்காட்டலாம்?
இயேசுவே, என் மனதை மாற்றியருளும், அதனால் நான் உமக்குத் தாழ்மையோடும் கீழ்ப்படிதலோடும் இருக்கட்டும்,
