ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய அணையைப் பார்ப்பதற்கு எங்கள் குடும்பம் ஆவலாக இருந்தது. அங்குச் சென்றதும், ஆற்றில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை, சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட நிலம் மட்டுமே இருந்தது. எங்கள் பயணம் வீணாகிவிட்டதே என்று எண்ணியபடியே, இரண்டு உள்ளூர் மனிதர்களுடன் உரையாடினோம். அவர்களில் ஒருவர், “ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?” என்று கேட்டார். அங்குத் தொடங்கி, இயேசுவைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாங்கள் தழுவிக்கொண்டோம்.

தேவ ஆவியால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு, “தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்” (வ.26) தான் பயணிப்பதைக் கண்டுகொண்டார். செல்லும் வழியில், அவர் ஒரு எத்தியோப்பிய மந்திரியைச் சந்தித்தார் (வ.27). இந்த நபர் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, “அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் (ள)” பிலிப்பு ஏவப்பட்டார் (வ.29). எனவே பிலிப்பு இரதத்திடம் ஓடியபோது, அவர் “ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக்” (வ.30) கேட்டார். அந்த மந்திரி பிலிப்பிடம், “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்?” என்று கேட்டார் (வ.34). இந்தக் கேள்வியில் தொடங்கி, பிலிப்புக்கு இயேசுவைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது (வ.35). பலர் சத்தியத்தைத் தேடுகிறார்கள், இயேசுவைப் பற்றி யாராகிலும் சொல்லும்படி காத்திருக்கிறார்கள். தேவனின் வழிகாட்டுதலுடன், வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களில் இயேசுவைப் பற்றி அவர்களிடம் பேசலாம்: வேலையில், உடற்பயிற்சி கூடத்தில், உணவகத்தில், பள்ளியில் அல்லது பயணத்தில் என்று எங்குமே. இயேசுவைப் பற்றிய உரையாடலுக்கு வழிவகுக்கும் கேள்வியை ஒருவர் எப்போது கேட்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பவுல் சொல்வது போல், “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்” (கொலோசெயர் 4:6) இருக்கவேண்டும். நீங்கள் ஒப்புக்கொடுத்தால், தேவன் தம் அன்பை உங்கள் மூலம் வெளிப்படுத்த முடியும். வனாந்தரத்தில் கேள்விகள் எழும்போது மக்கள் அணுகக்கூடிய நபராக இருங்கள்.