தேவனுடைய வழித்தடத்தில் செல்லுதல் பல ஆண்டுகளுக்கு முன்பு, 218 பேருடன் சென்ற ரயில், வடமேற்கு ஸ்பெயினில் தடம் புரண்டதில் 79 பேர் இறந்தனர், 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுனரால் அந்த விபத்தை விளக்க முடியவில்லை, ஆனால் வீடியோ காட்சிகள் அதை செய்தது. ஒரு கொடிய வளைவைத் தாண்டும் முன் ரயில் மிக வேகமாக சென்று, ரயிலில் உள்ள அனைவரையும் பாதுகாப்பதற்காக அனுமதிக்கப்பட்ட வேக அளவை தாண்டியது. ஸ்பெயினின் தேசிய இரயில் நிறுவனத்தில் முப்பது வருட அனுபவமிக்கவராக இருந்தபோதிலும், ஓட்டுநர் வேக எல்லையைப் புறக்கணித்ததால் பலர் உயிரிழந்தனர். 
  
உபாகமம் 5 இல், மோசே தனது மக்களுக்கான தேவனின் உடன்படிக்கை எல்லைகளை நினைப்பூட்டினார். மோசே ஒரு புதிய தலைமுறையினருக்கு தேவனின் அறிவுறுத்தலை, அவருடனான தங்கள் சொந்த உடன்படிக்கையாகக் கருதும்படி ஊக்கப்படுத்தினார் (வ. 3), அவர் பத்துக் கட்டளைகளை மீண்டும் கூறினார் (வவ. 7-21). கட்டளைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும், முந்தைய தலைமுறையின் கீழ்ப்படியாமையிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதன் மூலமும், மோசே இஸ்ரவேலர்களைப் பயபக்தியோடும், தாழ்மையோடும், தேவனின் உண்மைத்தன்மையைக் கவனத்தில் கொள்ளும்படி அழைத்தார். தேவன் தம்முடைய மக்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தினார், அவருடைய வழிகளில் உண்மையாய் நடப்பவர்கள், தங்கள் வாழ்க்கையையோ, மற்றவர்களின் வாழ்க்கையையோ சிதைக்க மாட்டார்கள். தேவ ஞானத்தைப் 
புறக்கணித்தால், அவர்கள் தங்கள் சொந்த ஆபத்தில் விழுவார்கள். இன்று, தேவன் நம்மை வழிநடத்திச் செல்வதால், வேதவாக்கியங்களை நம் மகிழ்ச்சியாகவும், ஆலோசகராகவும், நம் வாழ்வின் பாதுகாப்புத் தண்டவாளமாகவும் கொள்வோம். ஆவியானவர் நம்மை வழிநடத்துவதால், அவருடைய ஞானமான பாதுகாப்பிற்குள் முழு மனதுடன் நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கலாம்.