தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நம்பிக்கை ஜூன் 1965 இல், ஆறு டோங்கன் இன இளைஞர்கள் சாகசத்தைத் தேடி தங்கள் தீவிலிருந்து படகில் சென்றனர். ஆனால் முதல் இரவில் ஒரு புயல் அவர்களின் பாய் மரம் மற்றும் சுக்கானை உடைத்தபோது, அவர்கள் தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மக்கள் வசிக்காத ‘அட்டா’ தீவை அடைவதற்கு முன்பு உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் அலைந்து திரிந்தனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பதினைந்து மாதங்கள் ஆனது. 
  
சிறுவர்கள் இணைந்து அட்டா தீவில் உயிர் பிழைக்க, சிறிய உணவுத் தோட்டம் அமைப்பது, மழைநீரைச் சேமிக்க மரத்தடிகளில் குழிபறிப்பது, தற்காலிக உடற்பயிற்சி கூடம் கட்டுவது போன்றவற்றில் இணைந்து பணியாற்றினார்கள். ஒரு சிறுவன் பாறையிலிருந்து விழுந்ததில் கால் முறிந்தபோது, மற்றவர்கள் குச்சிகள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தி அதை குணப்படுத்த உதவினர். வாக்குவாதங்கள் கட்டாய சமரசத்துடன் ஒப்புரவாக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு நாளும் பாடல் மற்றும் ஜெபத்துடன் துவங்கியது. அவர்கள் மரித்துவிட்டதாக எண்ணி இறுதிச் சடங்குகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்திருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாக வெளிவந்ததை எண்ணி அவர்களது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். 
  
முதல் நூற்றாண்டில் இயேசுவின் விசுவாசியாக இருப்பது ஒரு தனிமைப்படுத்தப்படும் அனுபவமாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்டு, அடிக்கடி குடும்பத்தில் இருந்து விலகியிருப்பதால், நீங்கள் அலைந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு ஒழுக்கத்துடனும், ஜெபத்துடனும் இருக்க வேண்டும் (1 பேதுரு 4:7), ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும் (வ. 8), வேலையைச் செய்ய திறமைகளைப் பயன்படுத்த வேண்டும் (வவ.10-11) எனக் குறிப்பிடுகிறார். காலப்போக்கில், தேவன் அவர்களை அவர்களின் சோதனையின் மூலம் “சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்” (5:10) சோதனைக் காலங்களில், “விசுவாசம் மற்றும் நம்பிக்கை” நமக்கு தேவை. நாம் ஜெபித்து ஒற்றுமையுடன் வேலை செய்யும் போது, தேவன் நம்மையும் நிலைநிறுத்துவார்.