எனக்கும் என் மனைவிக்கும் கண்ணியமான, இதமான காதல் திரைப்படங்கள் பிடிக்கும். அவளுக்குச் சற்று அதிகம் பிடிக்கும், எனக்கும் கொஞ்சம் பிடிக்கும். இதுபோன்ற திரைப்படங்களின் தனித்துவமே அவற்றின் மனோரம்மியமான முடிவுதான். சமீபத்தில் நாங்கள் பார்த்த ஒரு திரைப்படத்திலோ சற்று ஆட்சேபனையான அறிவுறுத்தல்கள் இருந்தன. அதில், அன்பு ஒரு உணர்வு, உன் மனதில் பட்டதைச் செய், உன் தனிப்பட்ட சந்தோஷமே பிரதானம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. நம் உணர்வுகள் முக்கியம்தான், ஆனால் சுயத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிகள் நீடிக்கும் திருமணங்களைக் கட்டியெழுப்பாது.

பொதுவான கலாச்சாரம், ஏற்றதாகத் தோன்றும் பல ஆலோசனைகளை அளித்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவை சிதைந்துவிடும். கொலோசெயர் 2 இல் பவுலின் மனதிலிருந்ததெல்லாம் கவனமான கருத்தாய்வு பற்றிய சிந்தனையே. அதில் அவர், “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) வேர்கொண்டவர்களாகவும்.. விசுவாசத்தில் உறுதிப்பட்டு (ம்)” (வ.6-7) இருப்பதே நமது கலாச்சாரத்தில் உள்ள பொய்களை இனங்காணும் வழியென்பதை அடிக்கோடிட்டுள்ளார். அத்தகைய பொய்களை அப்போஸ்தலன் லௌகிக ஞானம், மாயமான தந்திரம் என்று அழைத்து, அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயம் மற்றும் உலகவழிபாடுகள் (வ.8) மேல் கட்டப்பட்டது என்கிறார்.

ஆகவே அடுத்தமுறை நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்கையில், உங்களிடமோ அல்லது பிறரிடமோ “இந்த திரைப்படம் அறிவுறுத்தும் ஆலோசனை ஞானமானதா? சத்தியமென்று வேதாகமம் சொல்லுபவற்றோடு இது ஒத்துப்போகிறதா?” என்று கேட்டுக்கொள்ளுங்கள். மேலும் கிறிஸ்துவே பிரதானம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அவருக்குள் மட்டுமே நாம் மெய்யான ஞானத்தையும், தேவத்துவத்தின் பரிபூரணத்தையும் (வ.9-10) காணமுடியும்.