என் தந்தைக்கு நினைவாற்றல் குறைவதைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது. ஞாபகமறதி நோய் கடூரமானது, இது ஜனங்களின் நினைவாற்றலை அளித்து அவர்களுடைய வாழ்க்கையைக் குறித்த ஞாபகங்களை முற்றிலும் அழிக்க வல்லது. ஒரு இரவு, ஒரு கனவு கண்டேன். அதன்மூலம் தேவன் என்னைத் திடப்படுத்தினார் என்று நான் நம்புகிறேன். அந்த கனவில், தேவனின் கரத்தில் ஒரு சிறிய பொக்கிஷ பெட்டி இருந்தது, அவர் என்னிடம் “உன் தந்தையின் நினைவுகள் எல்லாம் பத்திரமாக இதில் வைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இது என்னிடமே இருக்கட்டும், பின் ஒருநாள் பரலோகத்தில் அவரிடமே இதைக் கொடுத்து விடுகிறேன்” என்றார்.
பின்வந்த ஆண்டுகளில், என் தந்தைக்கு நான் யாரென்றே மறந்துபோனபோதும்கூட, இந்த கனவு என்னைத் தேற்றியது. அவருடைய இந்த வியாதி தற்காலிகமானது என்பதையும் நினைவுகொள்வேன். அவர் தேவனுடைய பிள்ளையாக இருப்பதினால், அவர் ஒருநாளில் முழுமையாக புதுப்பிக்கப்படுவார்.
உபத்திரவத்தை பவுல் இலேசானதென்றும் தாற்காலிகமானதென்றும் (2 கொரிந்தியர் 4:17) விவரித்ததையும் நான் நினைவில்கொள்ள இது உதவியது. அப்போஸ்தலன் உபத்திரவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை, அவரும் அநேக உபத்திரவங்கள் பட்டிருந்தார் (வ.7-12). நித்தியத்தின் வெளிச்சத்திலும், கிறிஸ்துவிலுள்ள நமது எதிர்கால மகிமையிலும் நமது பாடுகள் எல்லாம் தற்காலிகமாகவும், இலேசானதாகவும் தோன்றும் என்பதையே அவர் வலியுறுத்தினார். இயேசுவுக்குள் நாம் இப்போது பெற்றிருக்கும் அனைத்து மகிமையான ஆசீர்வாதங்களும், ஒருநாளில் நாம் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களும் நித்தியகாலத்திற்கும் பாடுகளைக்காட்டிலும் பெரிதானவையாக இருக்கும் (வ.17)
நாம் மனந்தளர வேண்டியதில்லை, காரணம் தேவனும் அவரின் வாக்குத்தத்தங்களும் நமக்குண்டு. நாம் பாடுபட்டாலும், நம்மை நாளுக்குநாள் புதிதாக்கும் (வ.16) அவரது வல்லமையை நம்பி விசுவாசத்தில் நாம் வாழமுடியும். அவருடைய நித்திய வாக்குகளை (வ.18) நோக்கியிருப்போமாக.
நீங்கள் எத்தகைய உபத்திரவங்களை அனுபவிக்கிறீர்கள்? தேவனுடைய வாக்குத்தத்தங்களும், தேவனின் பிள்ளையாக நீங்கள் பெற்றிருக்கும் அனைத்தும் நீங்கள் மனந்தளர்ந்து போகாமல் இருக்க எவ்வாறு உங்களுக்கு உதவும்?
பிதாவே, என் முடிவை என் உபத்திரவங்கள் அல்ல நீரே தீர்மானிக்கிறீர் என்பதற்காக உமக்கு நன்றி.