நான் இந்தியாவிற்கு முதல்முறையாகச் சென்றேன், நள்ளிரவு கடந்து பெங்களூரு விமான நிலையம் அடைந்தேன். அநேக மின்னஞ்சல்கள் எனக்கு வந்தபோதிலும், நான் யாரைச் சந்திக்க வேண்டுமென்றும் என்னை அழைத்துச் செல்பவர் யாரென்றும் அறியாதிருந்தேன். திரளான ஜனக்கூட்டத்தைப் பின்தொடர்ந்து, என் உடைமைகளைப் பெற்றுக்கொண்டு, சுங்கத்துறை சோதனைகளை முடித்து, சமுத்திரம் போன்ற மக்கள் கூட்டத்தில் எனக்கு யாராகிலும் பரிச்சயப்படுவார்களா என்று தேடினேன். கூட்டத்திற்கு முன்பாக அங்கும் இங்கும் சுமார் ஒரு மணிநேரம் நடந்து யாராகிலும் என்னை அடையாளம் காண்பார்கள் என்று எதிர்பார்த்தேன். கருணை நிறைந்த ஒருவர் முன்வந்து, “நீங்கள் தான் வின்னா?” எனக் கேட்டு, “என்னை மன்னியுங்கள், நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நான் நினைத்தேன், நீங்களோ எனக்கு முன்னாக நடந்துகொண்டே இருந்தீர்கள். ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல உங்கள் தோற்றம் இல்லை” என்றார்.
நாம் அடிக்கடி குழப்பமடைந்து, நாம் அறியவேண்டிய மனிதர்களையும் இடங்களையும் அடையாளம் காணத் தவறுகிறோம். தன்னை அடையாளம் காண, தேவன் ஒருபோதும் தவறாத வழியொன்றை ஏற்படுத்தினார், நமது உலகிற்கு இயேசுவாகவும் அவர் வந்தார், இவரே “அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிரு(க்கிறார்)ந்து” (எபிரேயர் 1:3). கிறிஸ்துவே தேவனின் சரியான பிரதிநிதித்துவம், நாம் அவரை காண்கையில் நாம் தேவனைக் காண்கிறோம் என்கிற முழு நிச்சயம் நமக்குண்டு.
தேவன் எப்படி இருப்பார், என்ன பேசுவார், எப்படி நேசிப்பார் என்று நாம் அறிய விரும்பினால்; நாம் பார்க்கவேண்டிய, செவிகொடுக்கவேண்டிய ஒருவர் இயேசுவே. அவர் மூலமாய் திருவுளம்பற்றினதற்கு (வ.2) நாம் உண்மையாகச் செவிகொடுக்கிறோமா? நாம் அவருடைய சத்தியத்தைத் தான் பின்பற்றுகிறோமா? நாம் தேவனை அடையாளம் காண்கிறோம் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள, நாம் குமாரன் மீது நம் கண்களைப் பதித்து அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
தேவனின் குரலை இனங்காண நீங்கள் எப்போது தடுமாறுகிறீர்கள்? இயேசுவின் மீது உங்கள் கவனத்தைப் பதிப்பது எவ்வாறு உங்களுக்கு உதவும்?
அன்பு தேவனே, நான் உமது சத்தத்தை அறிந்து உம்மை பின்பற்ற விரும்புகிறேன், இயேசுவில் உம்மை அடையாளம் கண்டுகொள்ள எனக்கு உதவும்.