“விமானத்தில் ஏற தயாராகுங்கள்” என்ற அழைப்பு சத்தம் தொனித்தது. ஒரு வாலிபர் குழுவின் தலைவனாகவும், சிறப்புச் செய்தியாளராகவும் ஒரு மிஷனரி பயணத்திலிருந்தேன். நுழைவு சீட்டையும், கடவுச்சீட்டையும் எடுக்க என் பையில் துழாவி, அதிர்ந்தேன்! கடவுச்சீட்டு அதில் இல்லை.
என்னை விட்டுவிட்டு என் குழுவினர் விமானம் ஏறினர். புதிய கடவுச்சீட்டு பெற நான்கு நாட்கள் கடுமையாக முயன்றேன். நூற்றுக்கணக்கான தொலைப்பேசி அழைப்புகள், நாட்டின் தலைநகர் வரை பயனற்ற ஒரு பயணம், அங்கிருந்து மீண்டும் என் ஊருக்கு நீண்ட பயணம், பக்கத்து ஊரில் இரண்டு நாட்கள் தங்கியிருத்தல், பின்பு எங்கள் உள்ளூர் அரசியல்வாதியின் அலுவலக உதவியுடன் எனக்கு புதிய கடவுச்சீட்டு கிடைத்து, என் குழுவினரோடு இணைந்தேன்.
கடவுசீட்டு ஒரு எளிய, சிறிய புத்தகம் தான். ஆனால், என் பயணத்திற்கு இருந்த ஒரே உத்தரவாதி அதுமட்டுமே. புதிய கடவுசீட்டை பெற நான் கடினமாய் செயலாற்றினபோதும், இதனை எனது நித்திய பயண இலக்கோடு ஒப்பிடுகையில் மதிப்பற்றதாகவே தோன்றியது. அது இயேசுவின் மீதிருக்கும் விசுவாசமே, ஆம் நமது பாவங்களிலிருந்து இரட்சிப்படையவும், அவருடனான புதிய வாழ்விற்கும் நமக்குள்ள ஒரே உத்தரவாதி அதுவே.
“இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரிந்தியர் 6:2) என்று வேதாகமம் சொல்கிறது. கிறிஸ்துவில் வெளிப்பட்ட இரட்சிப்பென்னும் விடியலைத்தான் பவுல் இங்கே விவரிக்கிறார். அவரை விசுவாசிக்கும்போது, நாம் தேவனுடைய அன்பையும், அனைத்து சிருஷ்டிக்குமான அவரது மீட்பையும், சீர்பொருத்தும் கிரியையையும் அனுபவிப்போம். இன்றே, “தேவனோடே ஒப்புரவாகுங்கள்” (5:20) என்பதின் பொருளை மெய்யாகவே அறிந்துகொண்டதை நிச்சயப்படுத்திக்கொள்வோம்.
நீங்கள் இரட்சிப்படைய இயேசு எவ்வாறு வழி ஏற்படுத்தினார்? உங்களைப் பொறுத்தமட்டில், அவரை உங்கள் இரட்சகராக நம்புவது என்றால் என்ன?
அன்பு இயேசுவே, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிப்படைய எனக்கு வழி உண்டாக்கியதற்காக உமக்கு நன்றி.