இளைப்பு. சத்யா, தனது புதிய வேலையில் ஒன்பது மாதத்திற்குப்பின் இதை உணர்ந்தான். இயேசுவின் விசுவாசியாக,  தனது பணியைச் செய்யவும் சவால்களை எதிர்கொள்ளவும் தேவனின் நியமங்களையே பின்பற்றும்படி நாடினான். ஆனால், மனிதர்கள் சார்ந்த பிரச்சனைகள் நீடித்தன, நிர்வாகத்திலும் சிறிதளவே முன்னேற்றம் இருந்தது. தான் கையாலாகாதவனாக உணர்ந்தான்.

ஒருவேளை, சத்யாவைப் போல நீங்களும் சோர்ந்திருக்கலாம். உங்களுக்கு நல்லது எதுவெனத் தெரியும், ஆனாலும் அதைச் செய்வதற்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெலனற்றவர்களாக உணரலாம். மனம் தளராதீர்கள். அப்போஸ்தலன் பவுல் நம்மை இந்த வார்த்தைகளால் ஊக்குவிக்கிறார்: “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலாத்தியர் 6:9) இங்கே, ஒரு விவசாயியின் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். அநேக விவசாயிகள் அறிந்துள்ளதுபோல, விதைப்பது கடினமான வேலை.

“ஆவிக்கென்று” (வ.8) விதைப்பதும் கடினமான வேலையே. ஆவியானவரின் நடத்துதலைப் பின்பற்றி, அவரை கனப்படுத்தும் வாழ்வை வாழ நாடுகின்ற இயேசுவின் விசுவாசிகள் களைத்து, மனம் தளரக்கூடும். ஆனால், நாம் அவரது வாக்கைப் பற்றிக்கொண்டால், அறுவடையும் வரும். நாம் ”நித்தியஜீவனை” அறுப்போம் (வ.8. பார்க்க: யோவான் 17:3) கிறிஸ்து திரும்பி வருகையில் தேவ ஆசீர்வாதமாக நாம் பெறப்போகும் மகா விளைச்சல்; இந்த வாழ்க்கையிலும் அவரை அறிவதன்மூலம் உண்டாகும் நம்பிக்கையும் சந்தோஷமும் நமக்குண்டு. நாம் ஏற்ற காலத்தில் அறுப்போம், இந்த காலநேரமானது பருவங்களாலோ காலசூழ்நிலைகளாலோ அல்லாமல் பூரணமான தேவனுடைய சித்தத்தின்படியே தீர்மானிக்கப்படுகிறது. அறுவடை வரும்வரை, தேவபெலத்தால் நாம் தொடர்ந்து விதைப்போம்.