“உன் பாவமும் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததா?” டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் 1633 ஆம் ஆண்டு வரைந்த தலைசிறந்த படைப்பான “தி ரைசிங் ஆஃப் தி கிராஸ்” -இல் கேட்கும் கேள்வி இதுவே. அந்த ஓவியத்தின் மையத்தில்,  இயேசு சிலுவையில் உயர்த்தி பிடிக்கப்பட்டிருக்கிறார். நான்கு பேர் அவரை சிலுவையோடு தூங்குகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் இயேசுவைச் சுற்றி இருந்த வெளிச்சத்தில் நிற்கிறார். அவர் அணிந்திருந்த ஆடை வித்தியாசமாயிருந்தது; அவர் ரெம்ப்ராண்ட் வாழ்ந்த காலத்திலிருந்த ஆடையை அணிந்திருந்தார். ஓவியர் அடிக்கடி அணிந்த தொப்பியையும் அணிந்திருந்தார். அவரது முகத்தை உற்று நோக்கினால், ரெம்ப்ராண்ட் தன்னையும் அந்த ஓவியத்தில் இணைத்துள்ளார், அது “இயேசுவின் மரணத்திற்கு என் பாவங்களும் காரணம்” என்று சொல்லுவது போலிருந்தது.

ஆனால், அதில் தனித்து நிற்கும் இன்னொருவரும் இருக்கிறார். அவர் குதிரையில் இருக்கிறார், ஓவியத்திலிருந்து பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்கிறார். சிலர் இதை ரெம்ப்ராண்டின் இரண்டாவது சுய உருவப்படமாகப் பார்க்கிறார்கள், “நீங்கள் இன்னும் இங்கே வரவில்லையா?” என்று பார்வையாலே தன்னை கவனிக்கும் அனைவரையும் கேட்பது போல் உள்ளது.

பவுல் தன்னையே அங்குக் கண்டார். நாமும் நம்மைக் காணலாம், காரணம் இயேசு நமக்காகவும் பாடுபட்டு மரித்தார். ரோமர் 5:10 இல், பவுல் தன்னையும் நம்மையும் “தேவனுக்குச் சத்துருக்கள்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய பாவங்கள் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாயினும், அவருடைய மரணம் நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்குகிறது: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (வ.8).

பாவமன்னிப்பு தேவைப்படும் பாவிகளாக ரெம்ப்ராண்ட் மற்றும் பவுலுடன் நாமும் நிற்கிறோம். தேவனுடனான புதிய ஆரம்பம் என்ற நமது ஆழ்ந்த தேவையை அவருடைய சிலுவையின் மூலம் இயேசு நமக்குப் பூர்த்தி செய்கிறார். இதை நமக்காக நாமே ஒருபோதும் செய்திட முடியாது.